Society

விடுதலை – யாரிடமிருந்து?

DSCN5574அம்பாறை, பொத்துவில், 60ம் கட்டை பகுதியில் உள்ள கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் போராட்டம் 20ஆம் நாளாக நடைபெறுகிறது.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஆயுத மோதல்கள் காரணமாக கைவிட்டுச் சென்ற வீடுகளுக்கு மீளத் திரும்பவிழையும் மக்கள், பற்றைகள் மண்டிய அவ்வாழ்விடங்கள் அரச வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு மீள்குடியேற்ற அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். சில தமிழ் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ‘போராடாதீர்கள்; விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும்’ என்று கூறுகின்றபோதிலும், கிழக்கின் இத்தகைய உரிமை மறுப்புகளுக்குப் பின்னால் சுய இலாபம் கருதிச் செயற்படும் அவர்களில் சிலரும் இருப்பதாக இம்மக்கள் சந்தேகிக்கின்றனர். சில நிலங்களுக்கான ஆவணங்களைத் தாமே தயாரித்து  அவற்றைக் கையகப்படுத்திக்கொண்டுள்ளனர் என்றும் அப்பாவிகளான இந்த மக்களிடமுள்ள மூல ஆவணங்களை தந்திரமாகக் கவர்ந்து அழித்துவிடும் செயற்பாடுகளில் சில அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

நாட்டின் இனப்பிரச்சினை காரணமாக கோடீஸ்வரர்களான மூவினத்தையும் சேர்ந்த பிரமுகர்கள் அநேகர். மக்களின் காணிகளை அபகரித்து உல்லாச விடுதிகளைக்கட்டி பிரபாகரனின் பேரால் சேர்த்த சொத்துகளைப் பல மடங்கு பெருக்கிக்கொள்ள வெளிநாட்டில் மட்டுமன்றி உள்ளூரிலும் பலர் முயற்சிக்கின்றனர் என்று தோன்றுகிறது.

நிலம் என்பது வெறுமனே பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு சடப்பொருளல்ல. அது வியர்வையும் குருதியும் உயிரும் உணர்வும் கலந்த வாழ்வின் அடிப்படை. ஒரு சமூகத்தின் கருவறை. சட்ட ரீதியாகவோ சட்டத்துக்குப் புறம்பாகவோ அதைப் பறிக்க நினைப்பவர்கள் ஒரு சமூகத்தையோ மக்கள் குழுமத்தையோ கருவழிக்க முனைகிறார்கள் என்றே பொருள்.

அப்படியாயின், தமிழ் மக்கள் ஒடுக்குமுறை அரசுகளிடமிருந்துமட்டுமல்ல; தமது அரசியல்வாதிகளிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்களாக.

தமிழர் தொன்மையையும் வீரப்பிரதாபங்களையும் பாடி மகிழ்பவர்கள் இந்த மக்களின் போராட்டத்துக்கு உதவுவார்களாக.

Advertisements
Society

இனப்பிரச்சினையின் ஒரு இசைப்பரிமாணம்

1983 கலவரங்களை நினைவுகூரும் இந்நாட்களில், ஒரு இசை அபிமானியாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கூடாக வாழ்ந்த அனுபவத்தை மீட்டிப்பார்த்தபோது…..

20180726_204034

                          இலங்கை வரலாற்றில் தென்னிந்தியாவின் தாக்கமும் செல்வாக்கும் இல்லாத காலப்பகுதியும் துறையும் இல்லையெனலாம். ஈழத்து இசைத்துறையும் அதில் அடங்குவது ஆச்சரியமில்லை.

ஓ!

ஈழம் என்று சொன்னதும் நினைவுக்கு வருவது ‘தமிழ்ப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகள்’ என்று தேசிய வானொலி ஓயாது கூவியழைத்த தமிழ் இளைஞர்களின் தேசமென்று தென்னிலங்கையர்கள்  புரிந்து வைத்திருந்ததுதான். போராட்டத்தொனி தென்பட்டால், புலி என்ற வார்த்தை இருந்தால், அத்தகைய பாடல்கள் ஒலிபரப்புக்குத் தரமற்றவையாக அன்று கணிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழி மீது காதலை வெளிப்படுத்திய பாடல்களையும் அந்த ஒற்றை வானொலி ஒலிபரப்பாமலேவிட்டிருந்தது ஒரு சோகம் தான்.

தவறுதலாக எதையோ ஒலிபரப்பிய காரணத்தால் விசாரணைக்காளான ஒலிபரப்பாளர் பற்றி அந்தக்காலத்தில் ஒலிபரப்புத்துறையுடன் தொடர்பிலிருந்த நண்பர் ஒருவர் சொன்னதும் இப்போது நினைவு வருகிறது.

ஈழத்துப்பாடல்கள் என்ற நிகழ்ச்சி, நம்நாட்டுப் பாடல்கள் என்றும் மெல்லிசைப் பாடல்கள் என்றும் பெயர்மாற்றம் பெற்றதும் அந்தவகையில் தான்.

‘தோல்வி நிலையென நினைத்தால்’ சினிமாப்பாடல் அன்று ‘SIAI-Marchetti’ குண்டு வீச்சிற்குள்ளால் ஓடிய வடபகுதி மக்களின் இதய கீதமானது. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தின் ‘மனிதா மனிதா இனி உன் விழிகள்’ பாடலின் இசை PLOTE வானொலியின் குறி இசையாகவும் பயன்பட்டு புரட்சி உணர்வூட்டியதால் இளையராஜாவும் போராளியாக்கப்பட்டு அத்தகைய பாடல்கள் தடை செய்யப்பட்டன.

ஆரம்பகால சிங்களத் திரைப்படங்களுக்கு, தென்னிந்திய இசைக்கலைஞர்களும் பாடகர்/ பாடகிகளும் பெருத்த பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். எஸ். ஜானகி, ஏ.எம்.ராஜா, ஜிக்கி, ஜமுனாராணி போன்றவர்கள் பாடிய சிங்களத் திரைப்பாடல்கள் உள்ளன. அவை இந்தியக் கலையகங்களிலேயே ஒலிப்பதிவும் செய்யப்பட்டன. ‘அப்சராஸ்’ இசைக்குழு-புகழ் மோகன்ராஜின் தந்தையான ஆர்.முத்துசாமி போன்ற கலைஞர்களும் சிங்கள இசைத்துறைக்கு அதிகம் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். இனவேற்றுமை கட்டமைக்கப்பட்டதாக வளர்க்கப்பட்டுவந்த பின்னாட்களில் இந்த நிலை மாறத்தொடங்கியது. சிங்களவர்கள் தம்மை ஆரியராகக் கற்பனை செய்ய விரும்புவதும் அந்த வகையில் தென்னிந்தியாவைத் தவிர்த்து வட இந்தியாவோடு தொடர்புபட்டுக்கொள்ள முனைவதும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஒருவேளை சிங்களக் கலைஞர்களை ஊக்குவிப்பதாற்கான திட்டமிட்ட முயற்சியாகக்கூட தென்னிந்திய தவிர்ப்பு நிகழ்ந்திருக்கலாம்.

ஆனாலும், எச்.ஆர். ஜோதிபால போன்ற பிரபலமான சிங்கள இசைக்கலைஞர்கள் இந்தி, தமிழ் திரைமெட்டுகளை எடுத்து சிங்களப்பாடல்களாக ஆக்கி, மேடைகளில் பாடியும் இசைத்தட்டுகள்/ ஒலிநாடாக்களாக வெளியிட்டும் பிரபலமாகினார்கள். தவில், நாதசுரம் ஆகியவற்றை பின்னணி இசையாகக்கொண்ட பாடலொன்றை எச்.ஆர். ஜோதிபால அவர்கள் பாடியிருந்தமை ஒரு சிறப்பு. சிங்கள இசை இரசிகர்கள் அந்தப்பாடல்களின் நதிமூலம்-ரிஷிமூலம் பார்த்தார்களா, இல்லையாவென்று தெரியாது. ஆனால் அவரின் மரணச்சடங்கின்போது அந்தப்பாடல்களே ஒலித்தன. ஏராளமான மக்கள் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்கள்.

இடைப்பட்டகாலத்தில், ‘என்னோடு பாட்டுப்பாடுங்கள்’ போன்ற பாடல்களை Sunflowers முதலிய இசைக்குழுக்கள் சிங்கள, இந்தி, ஆங்கிலப்பாடல்களுடன் சேர்த்து, தொடர்ந்து ஆடுவதற்கு ஏற்றவகையில் ‘medley’யாக வழங்கி இளைஞர்களைக் கவர்ந்திருந்தபோதும் தென்னிலங்கையில் பொதுவாக நிலவிய தமிழ் வெறுப்பு தமிழ்பாடல்களின் செல்வாக்கைச் சற்று அதிகமாகவே குறைத்திருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், குறிப்பாக சிங்களக் கிராமங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருந்த ’80களின் பின்பகுதிகளிலும், யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகை நடந்த ’90களின் ஆரம்ப நாட்களிலும் தமிழ்/ தமிழர் வெறுப்பு தென்னிலங்கையில் மிக அதிகமாயிருந்த காலங்கள். இராணுவத்தினரின் வீரத்தைப் பறைசாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட பாடல்களைக் கேட்டுக்கொண்டு தென்பகுதிப் பேருந்துகளில் பயணிப்பதுவே ஒரு மயிர்க்கூச்செறியும் அனுபவமாக இருந்ததை மொழிபுரிந்த தமிழர் நினைவிற்கொள்வர்.

மொழி புரியாதவர்களுக்கு அடி விழும்வரை சுவர்க்கமாகவும் மொழி புரிந்தவர்களுக்கு வாழ்க்கையே நரகமாகவும் இருந்த நாட்கள் அவை! மனதில் எந்தச் சலனமும் இல்லாமல் தமிழில் தேசியகீதம் பாடிய சிறுபராயத்திலிருந்தும், இன-மொழி வெறி இசையை மிரட்டிய இந்தப் புதிய பயங்கரவாத யுகத்துக்கு, காலத்தைவிடவும் அதிக தொலைவு கடந்து நாம் வந்துவிட்டிருந்தது புரிந்தது.

தென்னிலங்கையில் இசை இவ்வாறு சலசலத்துக்கொண்டிருக்க, வட-கிழக்கு இலங்கையில் எழுச்சிபெற்ற விடுதலைப்போராட்டம் புரட்சிப்பாடல்கள் உருவான களமாகவும் படிப்படியாக மாறியது. ’80களின் ஆரம்பத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) இந்திய இசைக்கலைஞர்களின் பங்களிப்புடன் அற்புதமான பாடல்களை உருவாக்கி, செய்தி, அரசியல் நிகழ்ச்சிகளோடு சேர்த்து  பிரத்தியேகமான சிற்றலை வானொலி அலைவரிசையூடாக  ஒலிபரப்பியது. அந்த வானொலியைக் மக்கள் கேட்க முடியாது குழப்புவதற்கு இலங்கை அரசு சக்திமிக்க ஒலிபரப்பிகளை அதே அலைவரியில் இயக்கியதும் இரு தரப்பினரும் அலைவரிசையை தொடர்ச்சியாக மாற்ற, மக்கள் மாற்றி மாற்றிக் கேட்பதும் அன்றைய சுவாரசியங்கள். போராளி இயக்கங்கள் சில பிரபலமான தென்னிந்தியக் கலைஞர்களை புரட்சிப்பாடல்களை உருவாக்கும் நோக்கில் அணுகியபோதும், இலங்கையரசால் தாம் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்தால் அவர்கள் தவிர்த்துக்கொண்டார்கள் என்று அறியவந்தபோது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. பின்னாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களது அதிகாரத்தில் உச்சத்தில் இருந்தபோது வன்னியிலேயே கலையகங்களை அமைத்து, அவ்வியக்கத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் பயன்படுத்தி அநேக பாடல்களை வெளியிட்டிருந்தமை நாம் அறிந்ததே. மக்களை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அவர்கள், தென்னிந்திய திரைப்பட இசையைக் கேட்பதைத் தடுத்திருந்தமையும், நடைமுறைப்படுத்த முடியாத அந்தத்தடையை மக்கள் இரகசியமாக மீறியதையும் பலரும் ஞாபகம் வைத்திருக்கலாம். ‘புலிகள்’ இயக்கத்தின் தெருக்கூத்து/ பிரச்சார நடவடிக்கைகளுக்கு தென்னிந்திய திரைப்பட மெட்டுகளை அவர்கள் பயன்படுத்தியமை, அவர்களின் தடையை அவர்களே நம்பவில்லை என்பதையும் காட்டியிருந்தது.

நோர்வே நாட்டின் ஆதரவுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்ற காலப்பகுதியில் ஒரு நாள்: Harmonic Minor, கீரவாணி, நடபைரவி போன்ற இராகங்களின் சுரங்கள் வரும்  பாடலொன்று ஏற்படுத்திய உணர்வினாலும் அதன் கவி வரிகளின் ஈர்ப்பினாலும் ஆட்கொள்ளப்பட்ட நான், கீபோட் வாத்தியத்தில் அதனை வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு இளைஞர்களின் பேச்சுக்குரல் வெளியே கேட்டதை நான் சட்டை செய்திருக்கவில்லை. சற்று நேரத்தில் ஒருதகவல் வந்தது:

“‘இந்தப்பாடல் வருடத்தில் ஒரு நாள் மட்டும் பாடப்படுவது; அந்த அண்ணாவை வாசிக்கவேண்டாம் என்று சொல்லுங்கோ’ என்று சொல்லிவிட்டுப்போகிறார்கள்”.

தமிழ் மக்களின் தேசிய கீதம்போன்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த அந்த உன்னதமான பாடலை, அதைப் இயற்றிப்பாடிப் பூசித்தவர்களும் மறந்துவிட்டார்கள்; தமிழ்மக்களும் மறந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் நான் மறக்கவில்லை!

ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆகியவை பாடல், வானொலி போன்ற முயற்சிகளை செய்திருந்ததாக ஞாபகம். ஆனால் பெரிய வெற்றிகளைப் பெற்றதாகத் தெரியவில்லை.

2009 இல் இறுதி யுத்தத்தின்பின்னர், இன்று மீண்டும் தமிழ் இசை சிங்கள மக்கள் மத்தியில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. ‘நடந்தால் இரண்டடி’, ‘பச்ச மலைப்பூவு’ போன்ற பாடல்களும் இன்னும் பல புதிய துள்ளிசைப்பாடல்களும் சிங்களப் பாடல்களாக பேருந்துகளில் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றைக் கேட்கும்போது ‘எனது சுருதி ஞானம் மறந்துபோய்விடுமோ’ என்ற பயம் தொற்றிக்கொண்டாலும், அவர்கள் அத்தகைய முயற்சிகளினூடாக தமது இசை ஞானத்தை அதிகரி்த்துக் கொள்ள முயல்வார்களானால் அது பாராட்டப்படவேண்டியதுதான். முன்பு போலவே சிங்கள மக்கள் நதிமூலம்-ரிஷிமூலம் பாராது இரசிக்கிறார்கள்போலும்! எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதைக்கூறும் பக்குவத்தையும் இந்த இளம் கலைஞர்கள் பெற்றால் நல்லது.

வவுனியாவில் முச்சக்கரவண்டியில் தேசியக் கொடியுடன் சிங்களப் பாடல்களைப்  பெரிதாக ஒலிக்கவிட்டபடி செல்லும் தமிழ் இளைஞர்கள் இருக்கிறார்கள். கடத்தல் போன்ற ஏதோ திருட்டுத்தொழில் செய்கிறார்களோ என்று சந்தேகம் எழுந்தாலும், சராசரி மக்களின் இரசனைக்கு ‘பைலா’ தீனிபோடும் என்பது உண்மையே. அதனால் தானோ என்னவோ, கள்ளுக்குடிப்பதே பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்ட ’70களில் ‘கள்ளுக்கடைப்பக்கம் போகாதே’ என்று பாடிய நித்தி கனகரட்ணம் அவர்களும், அவரின் ‘சின்ன மாமி’யைப் ‘பட்டு மாமி’யாக மாற்றிக்கொண்ட ‘சுராங்கணி’ புகழ் ஏ.ஈ.மனோகரன் அவர்களும் பின்பற்றிய ‘பைலா’வை, அவர்களுக்குப் பிறகு எமக்கு அறிமுகமான இளையராஜா அவர்களும் கையாண்டு பார்த்தார்.

போரும் இடப்பெயர்வும் வளரவிடாது முளையிலேயே கிள்ளிவிட்ட ஈழத்துத் தமிழிசையை, symphony வரை வளர்ந்த இசைஞானி இளையராஜா அவர்கள் ஆக்கிரமித்துவிட, அவரின் ‘ஊருசனம் தூங்கிருச்சு’ நிரோஷா விராஜினியின் குரலில் ‘சித்த ஹதய்’ என்ற சிங்களப்பாடலாக ஒலிக்கிறது.

தமிழ்ப் பாடல்களை மிகவும் இரசிக்கும் சிங்களவர் பலர் இன்னும் இருக்கிறார்கள். அரசியல் வேற்றுமை, இனப்போர் போன்ற சலசலப்புகள் எதுவும் அவர்களில் தாக்கம் செலுத்தியதாகத் தெரியவில்லை. ’50களின் பாடல்களை நான் இரசிக்கும்போது என்னைப்பார்த்து நகைக்கும் தமிழர் இருக்கிறார்கள். ஆனால், என்னைக்கண்டதும் தாம் பொக்கிஷமாகப் பாதுகாத்துவைத்திருந்த அந்தக்காலத்து தமிழ் Gramophone இசைத்தட்டைச் சுழலவிட்டு என்னை அசத்தினார் ஒரு சிங்கள நண்பர்.  ‘இந்த இசையின் மேன்மையை உணர்ந்த தமிழர்கள் ஒருநாள் என்னிடம் வருவார்கள் என்று நம்பி ’83 கலவரத்தின் பின்னர் கொழும்பில் வீடுகளோடு சேர்த்து விற்கப்பட்ட இசைத்தட்டுகளைச் சேகரித்துவைத்திருக்கிறேன்’ என்றார் அவர்!

எது எப்படி இருந்தபோதும், இனப்போரின் இசைப்பரிமாணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பது உண்மை. களனிப் பல்கலைக்கழகத்தின் கலைப்பேராசிரியர் ஒருவர், சிங்களவர்கள் போற்றும் பாடலொன்றின் மூலவடிவம் ஒரு தமிழ்ப்பாடலே என்று கூறியதற்காக விமரிசனத்துக்குள்ளானதாகத் தெரிவித்த எனது சிங்கள நண்பர், மனதில் இசை இருப்பவனுக்கு இந்த வேற்றுமைகள் பெரிதில்லை என்று கூறி என்னைப்பார்த்துப் புன்னகைத்தார்.

ஆரியக்கனவு, தென்னிந்திய தவிர்ப்பு, தமிழ் வெறுப்பு ஆகியன தென்னிலங்கையின் இசைத்துறையில் வெற்றியொன்றை ஈட்ட உதவியதாக இப்போது கருத இடமுண்டு. ஏனெனில், வட-கிழக்கு மக்கள் உயிருக்காக ஓடிக்கொண்டிருந்தபோது, இசை ஆர்வமுள்ள அநேக சிங்கள இளைஞர்களின் கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது, தமது பெயரில் ஒரு பாடல் cassette வெளியிடுவதே. இன்றும் தமிழ் இளைஞர்களைவிட சிங்கள இளைஞர்களிடம் இசை ஆர்வம் மிகுந்துள்ளதாகக் தோன்றுகிறது. பிரித்தானிய, ஜெர்மனிய தொழில்நுட்பங்களைப் பிரதிசெய்து பழகிய ஜப்பானியர்கள், பின்பு சுயமாகவே உயர்ந்த தரத்திலான பொருட்களைத் தயாரிக்க முடிந்ததுபோன்று, இந்திய இசையுடன் ஆரம்பித்தபோதும் இன்று சிங்கள மக்களுக்கான பிரத்தியேக இசை அடையாளம் ஒன்று உருவாகியுள்ளது கண்கூடு.

ஆனால், இலங்கைத் தமிழ் மக்களுக்கு இன்று கர்நாடக இசையும் இல்லை; இந்துஸ்தானி இசையும் இல்லை; மேற்கத்தேய இசையும் இல்லை; திரை இசையும் இல்லை; ஈழத்துப் பாடலும் இல்லை; கிராமிய இசையும் இல்லை; பைலாவும் இல்லை என்று ஆகிவிட்டது.

ஞாலத்தில் இசையால் வளர அகத்தில் ஞானத்தை வளர்த்துக்கொள்வோம்.

Society

மறதி

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

மோட்டார் சைக்கிளின் சமிக்ஞை விளக்குகளைத் தொழிற்படவைக்கும் தன்னியக்க ஆளி பழுதானதால் பிரபல உதிரிப்பாக விற்பனை நிலையத்துக்குச் சென்றிருந்தேன். விற்பனையாளர், ‘ஒலி எழுப்பும் (கீக் கீக்) ஆளி வேண்டுமா ஒலி எழுப்பாதது வேண்டுமா’ என்று கேட்டார். ‘ஒலி எழுப்பாதது’ என்றேன். ஒலி எழுப்புவதுதான் நல்லது என்றும் அதையே வாங்குங்கள் என்றும் 6-7 தடவைக்குமேல், என் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் சொல்லிக்கொண்டே இருந்தார். அந்தச் சத்தமே எனக்குப் பிடிக்காது என்று நானும் வழமைக்குமாறாக, அதீத பொறுமையுடன் சொல்லிக்கொண்டிருந்தேன்.

பலர் சமிக்ஞையை அணைக்காமல் மறந்துபோவதாகவும் அநேக பெண்கள் பக்கம் மாறி சமிக்ஞை செய்து விபத்துகளில் சிக்கவைக்கிறார்கள் என்றும் குறைபட்டுக்கொண்டதுடன் ‘நீங்களும் மறக்காமல் இருப்பதற்கு ஒலி எழுப்பும் ஆளியே நல்லது; ஆபத்தில்லாமல் போய்வரலாம், வாங்குங்கள்’ என்றார் மீண்டும். நானுமோ அடம்பிடித்து, எனக்குத்தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு ‘எவ்வளவு?’ என்று கேட்டேன். விலையைப் பார்த்துச் சொல்வதாகப் போனவர் சிறிது நேரம் என்னிடம் வரவில்லை.

காத்திருந்தேன்….

மற்றவர்களின் மறதியைப் பற்றி அவ்வளவு கரிசனை கொண்டவர், சற்று நேரத்தில் என்னிடம் வந்து கேட்டார்:

‘உங்களுக்கு என்ன வேண்டும்?’  

Society

குரங்குகள்

DSC_0054a (Large)பல வருடங்களின் பின்னர்,  கடந்த மாம்பழப் பருவத்தின்போது அதிகமான பழங்களை உருசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. பொதுவாக, எமது மரங்களின் பலனை அனுபவிப்பவை குரங்குகளே. ஆனால் இம்முறை வன்னிப் பிரதேசங்களில் மாமரங்கள் அதிக பலன் தந்ததன் காரணமாகவோ என்னவோ, வவுனியா நகருக்குள் குரங்குகளின் வருகை குறைவாகவே இருந்தன. 2,000 ரூபாவுக்கு மரத்தை வாங்கும் கொள்ளையர்களுக்கும் கொடுக்காமல் அணில், வெளவால், குக்குறுவான் போன்ற இன்னோரன்ன பிராணிகளுடனும் பறவைகளுடனும் பகிர்ந்து நாமும் மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டோம்.

இயற்கையில் கிடைக்கும் வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. தாம் மட்டுமே அவற்றை ஆண்டு அனுபவிக்க நினைப்பதால் ஏனைய பிராணிகளை அண்டவிடாமல் சதி செய்யவும் அவற்றை கொன்றொழிக்கவும் மனிதர்கள் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்துகின்றனர். உலகில் உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது என்பது ஒரு மாயை என்றும், அன்றாடம் உணவு வீணாகப்போவதைத் தவிர்த்தாலே பட்டினியைத் தவிர்க்கலாம் என்றும் அந்த உணவுப்பொருட்களின் தயாரிப்பிற்கான நீரைச் சேமிக்கலாம் என்றும் துறைசார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

2011ஆம் ஆண்டின் FAO நிறுவனத்தின் அறிக்கையில் 1.3 பில்லியன் தொன்கள் உணவுப்பொருட்கள் ஒரு ஆண்டுக்கு வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீணாகும் நீரின் அளவு 173 பில்லியன் கனமீற்றர் என்றும் World Resource Institute இன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவைப் பாதுகாப்பதானது விவசாயத்துக்கான மேலதிக காடழிப்பையும், அதிக விளைச்சலுக்கான இரசாயனப் பிரயோகத்தையும் தடுக்க உதவும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெளதிக வளங்கள் மேலான மனிதர்களின் ஆதிக்கத்தின் வீச்சையும் தீர்மானிக்கிறது:- அதிக சம்பளம் பெறும் ஒருவர் வீட்டில் அதிகமான மின்குமிழ்களை எரிக்கும் வல்லமை பெறுகிறார்; தெருக்கோடியில் உள்ள கடையில் ஒரு தேங்காய் வாங்குவதற்கும் அவர் காரில் போகமுடியும்; வருடத்துக்கு இருமுறை கைத்தொலைபேசியைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்; அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் வளைத்துப்போட்டுக்கொண்டு சட்டத்துக்கும் சமூகநீதிக்கும் புறம்பான செயற்பாடுகளூடாக மேலும் மேலும் சொத்துக்களைச் சேர்த்துக்கொள்ள முடியும்; என்றவாறாக இது தொடரும்.

அனைத்து உயிர்களின் நல்வாழ்க்கைக்கும் பெளதிக வளங்களின் நுகர்வு இன்றியமையாதது. முற்றும் துறந்த முனிவர்களாக நாம் நிர்ப்பந்தத்துக்குள் வாழவேண்டிய தேவை இல்லை.   உலகெங்கும் பரந்து விரிந்துள்ள நவீன முதலாளித்துவ பொருளாதாரம், நுகர்வுக்கலாசாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்ற தவிர்க்கமுடியாத சாபக்கேட்டை நாம் விலக்கிக்கொள்வது இயதார்த்தமில்லை.

வெளவால்களும் அணில்களும் தமது பசிக்குத்தேவையான அளவைமட்டும் உண்பதுபோல குரங்குகள் ஏன் செய்வதில்லை? எல்லையற்றுப் பாய்ந்து, தமது உடற்பருமனாலும் குறும்புத்தனத்தினாலும் உண்பதைவிட உதிர்ப்பதை அதிகம் செய்கின்றனவே; ஏன்?

அது அவற்றின் சுபாவம் போலும்! குரங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொல்லப்படுகிறது. ஆகவே, சிந்திக்கும் ஆற்றல் குறைந்த அவற்றால் தமது செயற்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்றும், தாம் ஏனைய பிராணிகளுக்கு அநீதி இழைக்கிறோம் என்று அவற்றுக்குத் தெரியாது என்றும் நாம் கருதிக்கொள்ளலாம்.

ஆனால் மனிதர்கள் சிந்திக்கலாம்!

மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான நீரை/ எரிபொருளை மிச்சப்படுத்தவும், சூழலைக் குறைவாக மாசுபடுத்தவும், மிதமிஞ்சிய கனிமச் சுரண்டலையும் அவைக்காக நடத்தப்படும் போர் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறைக்கவும், எமது வாழ்க்கைக்குத்தேவையான பெளதிகவளங்களை அடைவதுடன் ஆசையை மட்டுப்படுத்திக்கொள்ளவும் எம்மால் ஆகும்.

உலகில் உள்ள அனைவரிடமுமுள்ளது உலகின் பணம். எங்கோ, என்றோ, ஏதோ வழிகளில் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டியதே எமது கைகளில் உள்ள பணம். ‘எனது இயலுமை; நான் பணம் கொடுக்கிறேன்’ என்ற இறுமாப்பு அபத்தமானது. எனவே, எம்மால் முடியும் என்பதற்காக மேலதிகமான வளங்களைச் சுரண்டாதிருப்போம்.

குரங்குகள் வராததால் இம்முறை ஏனைய பலவிதமான பிராணிகளுக்கும் எமக்கும் மாம்பழங்கள் கிடைத்தன.

குரங்குகள் போல வாழாதிருப்போம்.

Exposure visits · Society · South Africa

உபுன்டு (Ubuntu)

DSCN1293.JPGதென்னாபிரிக்காவின் பழமையான மொழிகளிலொன்றான சூலு (Zulu) மொழியில் மனிதகுலத்தைக் குறிப்பதான உபுன்டு (Ubuntu) என்ற சொல் உள்ளது. இந்தச் சொல்லுக்கு ஆதி ஆபிரிக்க மக்களின் வாழ்வியலை அடியொற்றியதான, ‘முழு மனிதகுலத்தையும் பகிர்வினூடாக இணைத்தல்’ என்றவாறான தத்துவார்த்த பொருட்கோடலும் உண்டு.  ஆங்கிலத்தில் அதற்கு “I am because we are” என்ற கவிதை நயத்துடனான மொழிபெயர்ப்பு தரப்படுகையில் “எம்மால்  நான்” என அதனை மொழிபெயர்ப்பின் தவறாகாது எனக் கருதுகிறேன். அதற்குக் காரணமுள்ளது:

ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளையை இன்னொரு தாய் எந்தச் சங்கடங்களுமின்றி, கடைத்தெருவுக்கு அனுப்பவும் அந்தப்பிள்ளை வேறொருவீட்டில் உண்டு, உறங்கவும் செய்வது ஆபிரிக்க சமூகங்களில் சாதாரண நிகழ்வுகளாக உள்ளது வியப்பைத் தரலாம் (யுத்தம் எம்மை அலைக்கழிக்குமுன்னர் நெருங்கிய உறவினருக்கிடையில் சிறு பிராயத்தினர் இப்படியாக இருந்த சந்தர்ப்பங்கள் சிலருக்கு நினைவிருக்கக்கூடும்). ஆபிரிக்க சமூகங்கள் மிக ஆழமான சமூகப்பிணைப்பைக் கொண்டவை. நகரப்புறங்களில் இன்று வாழ்வுமுறை பெரிதும் மாறிவிட்டபோதும் கிராமங்களில் அந்த உன்னத ஆதிவாழ்வியலின் தடயங்கள் காணப்படுகின்றன.

இந்தச் சமூகப் பிணைப்பை மையமாகக்கொண்டு யுத்தம்,  மற்றும் HIV AIDS இனால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் நோக்கில் செயற்படும் நிறுவனம் ஒன்று, கிராமத்தின் மத்தியில் பிள்ளைப்பராமரிப்பு விடுதியை அமைத்து அக்கிராமத்து அன்னையருக்கும் தந்தையருக்கும் சகோதரர்களுக்கும் அப்பிள்ளைகளை உறவுகளாக்கிச் செயற்படுவது உன்னதமான சிந்தனை. எமது நாட்டில் அத்தகைய குழந்தைகள் கிராமத்துக்கு வெளியே உயர்ந்த மதில்களுக்குள் அகப்பட்டு அனாதைகளாகவே இருந்துவிடுவது முற்றிலும் முரண்பட்ட நிலை.

வடக்கு, கிழக்கில், பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சமூகப் பிணைப்புகளை யுத்தம் அறுத்துவிட்டது. எல்லாரும் எல்லாரையும் அறிந்துவைத்திருந்த கிராமிய வாழ்வு, இடப்பெயர்வுகளுடன் மறைந்துவிட்டது. வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வேற்றமைகளைக்கூட உணராமல் கிராமங்களில் மகிழ்ச்சியாக ஓடியாடித்திரிந்த வாழ்க்கை இல்லாமற்போனதற்கு அயலவர்கள் மீதான நம்பிக்கையீனம் ஒரு பிரதான காரணி.

இதற்கு விடுதலை இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள் அதிக பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. நாட்டில் யுத்த நிலை இருந்தபோது அடுத்தவீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருப்பவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அவர்கள் எதேனும் இயக்கத்தின் உளவாளிகளோ அல்லது இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவரோ என்ற சந்தேகம் எமக்குள் ஆழமாக இருந்தது. யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகின்றபோதிலும்கூட மற்றவர்மட்டிலான இத்தகைய ஆழமான சந்தேகங்கள் எம்முள் இருக்கத்தான் செய்கின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய பரவலான செய்திகளால் இன்று பிள்ளைகளை இன்னொரு வீட்டுக்கு விளையாட அனுமதித்துவிட்டு பெற்றோர் மனநிம்மதியுடன் இருக்கும் நிலை காணப்படவில்லை. மாற்றீடாக, தொலைக்காட்சி மற்றும் இணையவழிப் பொழுதுபோக்குகளுள் அகப்பட்டு பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.

சமூகம் இவ்வாறாக சின்னபின்னப்பட்டுக் கிடக்கையில் சமூகஆர்வலர்களின் கடமை-பொறுப்புகள் எவை என்பது பற்றிய தீர்க்கமான உரையாடல் நடைபெறவேண்டியுள்ளது.

யுத்தத்தால் இழந்த உயிர், கல்வி, உடைமைகளைவிட ஒருதேசமாக நாம் இழந்துவிட்ட அயலான் மட்டிலான நம்பிக்கை மிக அதிகமான பெறுமதிமிக்கது.

இந்த நிலைக்கு ஏதோ வழிகளில் நாமும் காரணமாகிவிட்டோம். பாவங்களைக் கழுவும் பொறுப்பும் எம்மதே.

 

Society

நாம் தோற்றுவிட்டோமா?

Coffins2013ஆம் ஆண்டு ‘வன்னி வீதியான்’ என்ற புனைபெயரில் இணையத்தளமொன்றுக்கு நான் எழுதிய கட்டுரையொன்றை எனது வலைத்தளத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

 

14/05/2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழே வயதான பள்ளிச் சிறுமி காமுகனின் கொடூர இச்சைக்கு இரையாக்கப்பட்டாள்.

17/05/2013 அன்று வவுனியா தாண்டிக்குளத்தில் ஒரு தாய் தன் மூன்று பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளாள்.

இவை மிகச் சமீப நாட்களில் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சம்பவங்களில் சில. வடக்கு கிழக்கின் இன்ன பிறவிடங்களிலும், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் இப்படியான ஏராளமான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன; தொடர்ந்து இடம்பெற்றும் வருகின்றன. இத்தகைய விடயங்கள் போருக்குப் பின்னான காலங்களில் செய்தியூடகங்களில் அதிகமான இடத்தையும் பிடித்துள்ளன.

எம்மில் பலருக்கு இவை சினிமா செய்திகளின் நடுவே படித்துவிட்டு எறிந்துவிடும் வெறும் பத்திரிகைச் செய்திகள். வேறு சிலருக்கு அன்று கவலையுடன் கலந்துரையாடி அடுத்த நாள் மறந்துவிடும் சம்பவங்கள். பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை மீள முடியாதபடி திசைமாறும் இத்தகைய சம்பவங்கள் எம்வீட்டு வாசலில் நிகழும்வரை நாம் விழித்தெழுவதில்லையென்பது என்ன விதியா? அன்றி நியதியா?

அநாதரவாக்கப்பட்டதாய் உணர்ந்த ஒரு தாய், தன் பிள்ளைகளைப் பாதுகாக்க யாருமில்லையா என்று அங்கலாய்த்து, அரசு மற்றும் அரசுசாரா அலுவலகங்கள், பொலிஸ் நிலையம், சிறுவர் பராமரிப்பு நிலையம் என வவுனியா நகரெங்கும் தேடியலைந்தபோது நம்பிக்கையூட்டக்கூடிய, சரியான பொறிமுறையொன்றைக் காட்டி அந்தத் தாயையும் பிள்ளைகளையும் இவ்வனர்த்தத்திலிருந்து காப்பாற்ற முடியாத கையறுநிலை எமக்கு ஏன் வந்தது?

பாடசாலை சென்ற பிள்ளை வீடு வரும் வழியில் காமுகனால் சிதைக்கப்படுமளவுக்குப் அக புற காரணிகள் நிலவியிருந்தும், பொறுப்புள்ள சமூகமாக அவற்றை அவதானித்திருக்கத் தவறிய நிலை எம்மிடம் ஏன் இருந்தது?

ஆரோக்கியமான சமூகமாக நாம் வாழத்தலைப்படின், சுயவிமரிசனக் கண்ணோட்டத்துடன் இக்கேள்விகளுக்குப் பதில் தேடவேண்டிய நிர்ப்பந்தமும் கடப்பாடும் எமக்கு உள்ளது. ஏனெனில், கடந்துபோனவற்றிலிருந்து பாடம் கற்காதவன் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யுமாறு சபிக்கப்படுகின்றான்.

நாகரிகமான, விழுமியங்களைப் போற்றிப்பாதுகாக்கும் ஒரு சமூகமாக இருப்பதில் நாம் தோற்றுவிட்டோமா?

இத்துயரச் சம்பவங்களுக்குப் பின்னாலுள்ள காரணங்களுக்கும் சமூகப்பொறுப்புகள் மட்டில் எம் ஒவ்வொருவரின் தட்டிக்கழிக்கும் மனப்பாங்குக்கும் இடையில் தொடர்பிருத்தல் கூடுமா?

இடப்பெயர்வு, தடுப்பு, காணாமற்போதல், தனிநபர் நடத்தைப் பிறழ்வுகள் எம்மத்தியில் ஏற்படுத்தியுள்ள குடும்ப மட்டத்திலான தாக்கங்களின் தொடர்ச்சியில்லையா இவை?

போருக்குப் பின்னரான, முன்னிலைப்படுத்தப்பட்ட மீள்கட்டுமானப் பணிகளில் மூழ்கியதால், சமூகமட்டத்திலான பாதுகாப்பு விழிப்புணர்வையும் அயலவன் மீதான அக்கறையையும் தொலைத்து விட்டோமாவென எண்ணத் தோன்றுகிறது.

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், சமயம் சார்ந்த சேவைத்தாபனங்கள், பெண்கள் அமைப்புகள், அறிஞர்கள், கல்வி மற்றும் ஊடகத்துறையினர், தொழில்சார் வல்லுனர்கள், பொது நிலையினர் ஆகிய நாமெல்லோரும் எம் அன்றாட நிகழ்ச்சி நிரல்களுக்குள் ஆழ்ந்து எம் சுய இலட்சியங்களையும் இலட்சங்களையும் நோக்கிய பயணத்தில் சமூக நீதியைத் தொலைத்துவிட்டோமாவென கேட்கத் தோன்றுகிறது.

சம்பிரதாயங்களையும் புற அடையாளங்களையும் பகட்டாக முன்னிலைப்படுத்தி மனித விழுமியங்களையும் ஆன்மீகத் தேடலையும் பின்தள்ளிவிட்டோமாவென நினைக்கத் தோன்றுகிறது.

எம்மை மற்றவர்கள் அழித்ததை நினைவுகூரும் அதே நாளில் எம்மால், எமது சிரத்தையின்மையால் அழிக்கப்பட்ட இப்பிஞ்சுகளுக்காகவும் இதுபோன்ற இன்னும் எத்தனையோ முகம் தெரியாமல் இருட்டில் வாடும் சகோதர சகோதரிகளுக்காகவும் வருந்தி அழுது அரற்றவும்வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் ஆளாகிவிட்டோமே என வேதனைப்பட வைக்கிறது.

ஆதரவற்றவர்களையும்,  குடும்பத்தாலும், சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கக்கூடிய நியாயாதிக்கமுடைய புகலிடமேதும் இங்கில்லை. சமூக நீதியை மையமாகக்கொண்ட வினைத்திறனுள்ள கட்டமைப்புகள் ஏதும் எம்மிடமில்லை.

பிள்ளைக்கு அப்பா அல்லது அம்மா இருக்கிறாரா என்றுமட்டும் சட்டம் பார்க்கிறது. குடும்பத்தலைவனின் அல்லது குடும்பத்தலைவியின் குடும்பம் மீதான பொறுப்புடைமை எத்தகையது என்பதையோ பிள்ளைகளின் தேவைகள் எங்ஙனம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்பதையோ சட்டம் பார்ப்பதில்லை. அத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஏதுநிலை, இயலுமை என்னவென்று சமூகமும் பார்ப்பதில்லை.

அநாதைகள் யாருமில்லை என்ற கோசம் அழகானது தான். இறைவன் எல்லோருக்கும் பேதமின்றிப் படியளக்கிறான் என்கிற வேதாந்தமும் மனதுக்கு இதமாகத்தான் உள்ளது. ஆனால், ஆணின் ஆதிக்கத்திலுள்ள இளம் குடும்ப அலகொன்றில் அவனின் பயன் யாதாயினுமொரு சமூக அல்லது இயற்கைக் காரணியால் அற்றுப்போனபின், அக்குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்கள் அநாதைகளாகி அவலப்படுவதை அன்றாடம் காண்கின்றோம். போருக்குப் பின்னான காலப்பகுதியில், பிள்ளைகளைக் காப்பாற்றவும் வாழவழிவகையின்றியும் சமூகக்கட்டமைப்புகளின் எல்லைகளைத்தாண்டி சோரம்போனவர்களை, அவர்களின் துன்பத்தில் எமது பங்கு இருப்பதன் புரிதலின்றியே, வசைபாடப்படுவதற்கும் தீர்பிடப்படுவதற்கும் நாமே சாட்சிகளாகவும் ஆகின்றோம்.

கலாசாரத்திலும் பண்பாட்டிலும் வானளாவ உயர்ந்து நிற்பதாகக் கருதிக்கொள்ளும் நாம், சீரிய சித்தாந்தங்களுக்குச் சொந்தக்காரர்களாக உரிமைகோரிக்கொள்ளும் நாம், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய அவலங்கள் தொடர அனுமதிக்கப் போகின்றோமா?

இந்நிலைமையை மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையல்லவா?

அரச அதிகாரிகள், அரச சார்பற்ற அமைப்பினர், இன மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட உறுதியான சிவில் சமூகக் கட்டமைப்புகளின் பங்குபற்றலுடன் இச்சூழ்நிலையை வெற்றிகொள்ளும் போராட்டத்தை நாம் ஆரம்பிப்போம். எம் அனைவரினதும் பங்குபற்றலினால் வஞ்சனையற்ற சமூகமொன்றைக் கட்டியெழுப்ப முயற்சிப்போம்.

உள்ளிருந்து உக்கிப்போன மரம் உயரமாக நிற்பினும் உயர்ச்சியானதாய் இருப்பதில்லை.

வாழ்வாதாரப் பொதிகளை வழங்குகின்றோம். அழிந்த எமது பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வீதிகட்டுமானங்களையும் ஏனைய வேலைத்திட்டங்களை நடாத்தி வருகின்றோம். பல்வேறு விஞ்ஞான உத்திகளையும் வழிமுறைகளையும் கையாண்டு வியாபாரங்களைப் பெருக்க அமைப்புகளைக் கட்டியெழுப்ப முனைகின்றோம். இவை யாவும் நன்றே.

ஆயினும், ஒரு கெளரவமான இனமாக, தேசமாக நாம் எழுவதற்கு, அரசியல் விடுதலை பற்றிய அபிலாசைகளை முன்வைப்பதற்கு,  ஆரோக்கியமான சமூகவாழ்வைக் கட்டியெழுப்புதல் அடிப்படையானதும்  அத்தியாவசியமானதுமாகும்.

சமூக அநீதிகளுக்குத் தீர்வுகாணும் எந்த முயற்சியிலும் அச்சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் முழுமையான ஒத்துழைப்பும் ஈடுபாட்டுடனான பங்களிப்பும் இருத்தல் அவசியம். அத்தகையதொரு முன்முயற்சியை இக்காலகட்டத்திலேனும் செய்யத் தவறுவோமானால், தோற்றுவிட்ட தலைமுறையினராக, எம் எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்வைச் சீரழிப்பதற்குத் துணைநின்றவர்கள் என்ற பழிச்சொல்லை நாம் சுமப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

Society · South Africa

தண்ணீர், தண்ணீர்

Cape Town , South Africa 20180501 (2)தென்னாபிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரம் மிக மோசமான நீர்த்தட்டுப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருப்பதை உலக விடயங்களிலும் கவனம் செலுத்துபவர்கள் அறிந்திருப்பீர்கள். ‘எமது பிரச்சினைகளே அதிகம் இருக்க, உலக விடயங்கள் நமக்கெதற்கு’ என்பவர்களுக்காக இந்தப் பத்தி.

அண்மையில் தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கேப் டவுன் நகரிலும் தங்கவேண்டி இருந்தது. நான் தங்கிய விடுதி உரிமையாளர் விடுதியின் சிறிய பகுதியொன்றை ஒதுக்கித்தந்துவிட்டு ‘நீர்ப்பிரச்சினையால் நல்ல அறைகளைத் தரமுடியவில்லை’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார். நீர்த்தட்டுப்பாட்டைப்பற்றி முன்னமேயே நான் அறிந்திருந்தபடியால், உல்லாசப்பயணத்துறையின் பாதிப்புப்பற்றி அவருடன் உரையாட முடிந்ததுடன் அவ்விடுதியின் பெரும்பாலான பகுதிகள் பாழடைந்ததுபோலக் காணப்பட்டதை அவதானிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

தென்துருவத்திலிருந்து பனிப்பாறைகளை இழுத்துவந்து உருகவைத்து நீரைப் பயன்படுத்துவதுபற்றிக்கூட அங்கு நிபுணர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்!

நான் எம்மைப்பற்றிச் சிந்தித்தேன்.

தீவுப்பகுதியொன்றில் ஒரு வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “‘மற்றவர்களுக்கு’ முன்பு சிரட்டையில் தான் நாம் தண்ணீர் கொடுப்போம்; இன்று எமக்கும் அதேநிலை” என்று ‘கர்மவினை’ பற்றிக் கூறினார்.

அன்றாடம் நாம் எவ்வளவு நீரை விரையம் செய்கிறோம்? எமது மழைநீர் நிலத்துள் செல்லவிடாமல் முற்றத்துக்கு கற்களைப் பதித்து தடுத்துவிடுகிறோம். கஞ்சல் கூட்டுவதற்குச் சிரமம் என்றும் குரங்குகள் வருகின்றன என்றும் மரங்களை வெட்டி இயற்கையின் நீர்சுற்றை அறுத்துவிடுகிறோம்.

நீர்சுத்திகரிப்புக் கருவிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை அக்கறையின்றியோ அல்லது அறிவீனம் காரணமாகவோ சூழலை மாசடையும் வகையில் வெளியேற்றிவருகிறோம்.

இன, மத, சாதி ரீதியாக மட்டுமன்றி, மாவட்டரீதியாகக்கூட நீர்வளப்பகிர்வுபற்றி நாம் வேற்றுமை பாராட்டி ஒருவருக்கொருவர் குழிபறித்துக்கொள்கிறோம்.

அது போதாதென்று, வரட்சியால் பொதுமக்களின் பயிர்கள் வாடி அவர்களின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், அவர்களின் வள மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, இருக்கும் ஒருசில நீர்நிலைகளிலிருந்தும் நீரை உறிஞ்சி தமது தோட்டங்களை அழகு படுத்துவதுடன் பயிர்செய்கைகளூடாக மக்களுக்கேதிரான அநியாயமான வியாபாரப் போட்டியிலும் ஈடுபடுகிறார்கள்.

70களில் மேனாட்டு உல்லாசப்பயணிகள் நீர்ப்போத்தலைப் பணம்செலுத்தி வாங்கிப் பயன்படுத்துவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டுப்பார்த்த எமக்கு இன்று அது சர்வசாதாரணமாகிவிட்டதுமட்டுமன்றி நாமும் அதையே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். எவ்வித தயக்கமுமின்றி கிணற்றிலிருந்து வாளியால் அள்ளி அருந்திய வாழ்வின் கொடையான நீர் இன்று விவசாய இரசாயன பாவனையால் மாசடைந்துபோய் அதே விவசாயிகளுக்கும் ஏனையோருக்கும் நிரந்தர நோயை ஏற்படுத்தும் சாபமாக மாறிவிட்டது.

தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் நிலைமைகளை அவதானிக்கும்போது எமக்கு இது ஆரம்பம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

Cape Town , South Africa 20180501கேப் டவுன் நகரில் பொது நீர்குழாய்கள் இருக்கும் இடங்களில் பல பூட்டப்பட்டுக் காணப்படுகின்றன. திறந்திருக்கும் ஒருசில குழாய்கள் மருந்து தெளிக்கும் கருவிகளைப்போன்று மிகச்சிறிய துணிக்கைகளாக நீரை விசிறும் வண்ணம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்திகரித்துக்கொள்வதற்காக நீரற்ற முறைகளைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இம்முறைகள் போதுமானவைகளாக இருப்பதுவும் கண்கூடு.

இயற்கை வளங்கள் பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. அவற்றை எல்லையிட்டு உரிமைகொண்டாடுவது நவீன மனிதனின் பேராசை மனப்பாங்கிலிருந்து வந்தது. இன, மத, சாதிக்கட்டமைப்புகளூடாக வளச்சுரண்டலும் மேலாதிக்க மனப்பாங்கும் வலுப்படுத்தப்படுகிறது.

நீர் உயிரினங்களின் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல; அது ஒரு மனித உரிமையும் கூட. அந்த உரிமையை எமது செயற்பாடுகளால் மற்றவர்களுக்கு மறுப்பது வன்முறை. விரையம் செய்வதும் மாசுபடுத்துவதும் குற்றங்கள். கண்டும் கணாமல் இருப்பது குற்றத்தை ஆதரித்தல் ஆகும். அலட்சிய மனப்பாங்குடன் குறுகியகால பொருளாதார வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவது, ‘கர்மவினையை’ அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முயற்சியில் வெற்றிபெறுவதற்கு மட்டுமே உதவும் என்பதில் ஐயமில்லை.