life · music · Society

“இசைக்கென இசைகின்ற இரசிகர்கள் இராச்சியம் எனக்கேதான்…”

இளையராஜா அவர்களின் ‘ராஜா என்றும் ராஜாதான்’ கொழும்பு இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டவுடனேயே ஆசன முன்பதிவு செய்திருந்தேன். பவதாரணியின் மறைவு தந்த அதிர்ச்சியால் நிகழ்ச்சி பின்போடப்பட்டபோது, ‘என்னுடைய கடைசி ஆசைகூட இப்படி நிராசையானதே’ என்ற ஏக்கம் ஏற்பட்டாலும் அதுபற்றிப் பேசுவதுகூட குற்ற உணர்வைத் தருவதாக இருந்தது எனக்கு. புதிய திகதி அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கு முந்தைய நாள்வரைகூட குறைந்த கட்டணமிடப்பட்ட ஆசனங்கள் தன்னும் முழுமையாக விற்கப்படாமல் இருந்ததைப் பார்த்தபோது, இந்த நிகழ்வு பொருளாதார ரீதியில் தோல்வியடையும் என்றே தோன்றியது.

எப்படியோ, எங்களைப் போன்ற ‘கொஞ்சம் பழசுகள்’ வந்து ஏனோதானோவென்று தலையை ஆட்டிவிட்டுப் போகும் என்று நான் எதிர்பார்த்திருக்க, நிகழ்ச்சி ஆரம்பிக்குந்தறுவாயில் அரங்கு நிறைந்திருந்ததைப் பார்த்ததும் ஆச்சரியமாகவிருந்தது. ஏராளமான, இளையவர்கள் அங்கு கூடியிருந்தது என்னுள் கேள்விகளை எழுப்பியது. உண்மையில், இவர்கள் இளையராஜா இசை அபிமானிகளா அல்லது ஏதாவதொரு நிகழ்வுக்கு வரக்கூடிய மகிழ்வு விரும்பிகளா? ஹார்மோனியத்தை ஒருவர் கொண்டுவந்து வைத்தபோதே கூட்டத்தில் கரவொலிகளுடன் மகிழ்ச்சிச் சலசலப்பையும் காண முடிந்தபோது ‘இவர்களைச் சாமானியர்களாக நினைத்துவிடக்கூடாதோ’ என்ற எண்ணம் ஏற்பட்டது. நிகழ்ச்சியை வழக்கம்போல ஜனனியுடன் ஆரம்பித்து பவதாரிணியின் ‘மயில்போல பொண்ணு’ வை குழுப் பாடலாகத் தந்தார் இளையராஜா. பவதாரிணியின் படத்தை திரையில் காண்பித்தபோது எழுந்த ‘ஆ’ வென்ற ஒலியில் ஒரு ஏக்கம் தொனித்தது. நெப்போலியன் அவர்கள் ஒரு நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு விடுத்தபோது அனைவரும் எழுந்திருக்க, சுமார் 4000 பேர் இருந்திருக்கக்கூடிய அரங்கம் முழு அமைதியில் ஆழ்ந்தது. இவையெல்லாம் இது சாதாரண கூட்டமல்ல, இளையராஜா அவர்களின் இசையுடன் மட்டுமின்றி அவரின் தனிப்பட்ட சோகத்திலும் பங்குபற்றும் உணர்வுள்ள கூட்டமென்பதை உணர்த்தியது. என்னுடைய கணிப்பில் நான் முழுமையாகத் தோற்றுப்போனது, பாடல்களின் ஆரம்ப இசை ஒலிக்க ஆரம்பித்ததுமே பாடலை இனங்கண்டுகொண்டு ‘ஓ’ என்று அரங்கம் அதிர இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோதுதான். அமைதியான பாடல்களை இரசித்த அதே கூட்டம் டப்பாங்குத்துக்கு ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி ஆடத் தொடங்கியது. மனோ, ஸ்வேதா, மதுபாலகிருஷ்ணன், அனன்யா, போன்றவர்களுக்கும் நல்ல வரவேற்பிருந்ததைச் சொல்லவேண்டும். பொதுவான விதிப்படியன்றி, VVIP கள்கூட கைதட்டி இரசித்தது நான் பார்த்த ஒரு அதிசயம்!

எஸ். ஜானகி, கே.ஜே. ஜேசுதாஸ், சித்திரா போன்றவர்களை இதே அரங்கில் பல தசாப்தங்களுக்கு முன்னர் நான் பார்த்திருந்தேன். எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை காலிமுகத்திடலில் பார்த்திருக்கிறேன். பாடல்களின் அசல் ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கேட்டு மனதில் பதிந்துவிட்டதால், இசைக் கச்சேரிகளை என்னால் முழுமையாக இரசிக்கமுடிவதில்லை – குறைகளும் தவறுகளுமே அதிகம் கேட்கும். இருப்பினும், கடைசியாக நான் பார்க்க விரும்பியது இளையராஜா அவர்களுடைய இசை நிகழ்ச்சிதான் – ‘இந்த வரலாற்று நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்’ என்ற நினைவை நான் இறுதிவரை சுமக்க வேண்டுமென்பதற்காக.
இசை தந்த அதிர்வுகளுடன், அந்த அரங்கமும் சூழ்நிலையும தந்த உணர்வலைகள் தொண்டைக்குள் ஏதோ அடைத்துக்கொண்டதுபோன்ற கணங்களை ஏற்படுத்தாமல் விடவில்லை. இருப்பினும் சினிமா இசைக் கச்சேரி ஒன்றுக்கு நான் போவதற்கான ஏதுநிலை இனி இல்லை.

இளையராஜா இசை என்பது பல சந்தர்ப்பங்களில் ஒலியமைப்பு ரீதியாக பிரமாண்டமானது. சுமார் 30 கலைஞர்களுடனும், பாடகர்களுடனும் அதனை ஒப்பேற்றுவது இலகுவல்ல. ஒரு வயலினும் ஒரு (ச்)செலோவும் இல்லை என்றில்லாமல் இருந்தன! 4 திறமையான கீபோட் கலைஞர்கள் இட்டு நிரப்பினார்கள். சிறப்பான samplers பயன்படுத்தியதால் மோசமான ஒலியாக இருக்கவில்லை என்று சொல்லலாம். மேலும், அந்தப் பிரமாண்டமான அரங்கில் அனைவரும் இரசிக்கும் வண்ணம் ஒலிக்கலவை செய்வதும்கூட கடினமானது. 80dBக்கு மேலே ஒலித்ததால் சில குறைகள் தெரியாமல் செய்யப்பட்டது.

இளையராஜா இசைக்கு இடுப்பைக் காட்டும் அழகிகள் தேவையில்லை – வரவில்லை. ‘எல்லோரும் ஒரு ‘ஓ’ போடுங்கள்’, அல்லது ‘எங்கே உங்கள் பலத்த கரகோஷம்’ என்று கேட்டு வாங்கும் அறிவிப்பு அபத்தங்கள் ஒன்றும் வரவில்லை. அதுபோலவே, கண்ணில் அடிக்கும் வர்ண மின்விளக்குகளும் தேவையில்லை – இருந்தது. ஒருவேளை, அவரின் இசை இரசிகரில்லாத யாரோ அந்த முடிவை எடுத்திருக்கலாம்!  
எல்லாவற்றுக்கும் மேலாக, இசை நிகழ்வுகளில் வழக்கமாக நாங்கள் பார்த்த இளையராஜாவை காணமுடியவில்லையோ என்று என்னுள் ஒரு உணர்வு. அந்தக் குரலில் ஒரு தொய்வு இருந்தது. பேச்சில் உற்சாகம் குறைந்திருந்தது. நுணுக்கமான உணர்வுகளை எமக்கு இசையால் தந்தவர், சராசரி மனித உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் அவற்றைக் கடந்த நிலையில் பணியாற்றக்கூடியவர் – இழப்பிலிருந்து மீண்டுவர அவருக்கு இன்னும் அதிக கால அவகாசம் கொடுத்திருக்கவேண்டுமோ என்று தோன்றுகிறது. வியாபார நிர்ப்பந்தங்களில் அவரும்  கட்டுண்டிருக்கலாமோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. இது வயதால் வந்த தொய்வு நிலையல்ல என்பது மூன்று மணிநேரம், ஒரு கணமேனும் ஓய்வின்றி நின்றநிலையில்  நிகழ்ச்சி செய்யக்கூடிய அவரைப் பார்த்தால் யாருக்கும் புரியும். இளையராஜா போன்ற அபரிமிதமான, அமானுஷ்ய சக்திகொண்ட இன்னுமொரு படைப்பாளி இந்த உலகமுள்ளவரை இனி வரப்போவதில்லை. அடுத்த தலைமுறைக்கு செயற்கை நுண்ணறிவே இசையை வழங்கும். எனவே இசைஞானியின் உடல் ஆரோக்கியம் இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தில் சுயநலமிருந்தாலும் அது எம்மைப்போன்ற பலரின் மன ஆரோக்கியத்துக்கு அவசியமானது என்பதை அவரைச் சுற்றி இருக்கிறவர்கள் புரிந்துகொண்டு, அதனைக் கடமையாகக் கொள்வார்களாக.

life · politics · Society

நினைவுகள் மறக்க…

90களின் ஆரம்பத்தில், வல்வெட்டித்துறையைச் சொந்த ஊராகக் கொண்டிருந்த ஒரு இளைஞர் கடல்சார் பொறியியல் கற்பதற்காக மட்டக்குளி காக்கைதீவில் இருந்த கடலோடிகளுக்கான கல்லூரியில் படித்தும், இறுதிப் பரீட்சையில் தேற விடாமல் தடக்கி விழுத்தப்பட்டதை என்னிடம் சொல்லி நொந்துகொண்டார். தங்களைச் சேர்ந்தவர்களிடம் படிக்க வரவில்லை என்பதற்காக என்னையும் அவ்வாறு தடக்கி விழுத்தினபிறகு, அதே கல்லூரியில் பயின்ற சிங்கள நண்பர்களைச் சந்திக்கப்போன என்னை ‘நீ ஏன் எனது மாணவர்களுடன் கதைக்க வருகிறாய்’ என்று ஒரு Perera என்னைத் திட்டி வெளியே துரத்தியதை நான் மறக்க முடியாது.

கொழும்பில் மட்டுமன்றி, வன்னியிலும் electronics போன்ற தொழில்நுட்ப விடயங்கள் ‘எங்களைச் சார்ந்தவர்களில்லை’ என்ற தரப்பினருக்கு விலக்கி அல்லது மட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலங்கள், யாழ்ப்பாண விமானக் கண்காட்சி பற்றிய செய்திகளைப் படித்தபோது நினைவு வருகின்றன.

6-7 வயதில், கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் என்று நினைக்கிறேன் – தூறல் மழையில் இத்தகைய ஒரு கண்காட்சிக்கு அம்மாவுடன் போய் MIG பார்த்தது எனக்கு இன்றுபோல் நினைவிலுள்ளது. அங்கு பரிசோதனை ரீதியிலான அந்தநாளைய தொழில்நுட்பத்திலான CCTV போன்ற ஒரு விஷயமும்கூட வைத்திருந்தார்கள். ஒரு தொழில்நுட்ப பிரியனின் கனவு உலகமாக அது அன்று என்னை ஈர்த்திருந்தது உண்மைதான். இன்று இவர்களிடம் போய் எதையும் படிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லாமற்போய்விட்டாலும் இத்தகைய கண்காட்சிகள் நல்ல விஷயங்கள்தான். அவர்கள் நடத்தும் முன்பள்ளிகள்போல, அடுத்த தலைமுறையின் நினைவுகளை மறக்கப்பண்ணுவதற்கான நிகழ்வுகளாக இருந்தாலும்கூட, பல குழந்தைகளுக்கு இவை வாழ்க்கையின் திருப்புமுனைகளாகக்கூட அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

பேச்சுவார்த்தைக்காக அரச தூதுக்குழு யாழ்ப்பாணம் வந்த ஹெலிகொப்டரை மக்கள் பார்க்க ஓடியதைச் சகிக்க முடியாத அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘குண்டு போடேக்க ஓடி ஒழியுங்கோ; இப்ப வந்து கொஞ்சுங்கோ’ என்றவாறாக சபித்துக்கொட்டியதும் ஒரு சம்பவம்.

என் மனதில் ஒரே ஒரு கேள்விதான்: விமானத் தாக்குதல்களில் தமது பிள்ளைகளைப் பலிகொடுத்த ஒரு வடபகுதி தாயின்/ தந்தையின் மனோநிலை இன்று எப்படியிருக்கும்?

life · Society

அழைப்பது எப்படி?

மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘நீர்’, ‘உமக்கு’ என்ற சொற்கள் மரியாதையற்ற சொற்களாக அவர்களால் கணிக்கப்படுகின்றன என்று சொன்னார். இப்படிப் பேசியதற்காக மட்டக்களப்பில் ஒரு அலுவலகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி அடிவாங்கியதையும் நினைவுகூர்ந்தார் (நல்லவேளை, நான் அப்படிப் பேசுவதில்லை!). யாழ்ப்பாணத்தில் இப் பிரயோகங்கள் சர்வசாதாரணம் என்பதுடன் மரியாதைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் ‘அவ’ என்று ஒருவர் தன் மனைவியை மட்டுமே சொல்லலாம். இன்னொரு பெண்ணைச் சொன்னால் குற்றமாகிவிடும் (‘அவங்க’ என்று சொல்லவேண்டும்). நாம் வடக்கில் இயல்பாகப் பயன்படுத்தும் சொற்கள் சில இடங்களில் ‘கெட்டவார்த்தை’களாகவோ, சாதிப்பெயர்களாகவோ கருதப்படுகின்றன. அலுவலகத்திலும் வெளியிலும், பொதுவாக எல்லாரையும் நான் பெயர் சொல்லி அழைப்பது வழக்கம். அலுவலக வட்டாரங்களில் அநேகர் எனக்கு வயதால் இளையவர்களாக இருப்பதும் வசதியாகப் போய்விடுகிறது. வயதுக்கு மூத்தவர்களாயின் ஒரு அக்கா/ அண்ணா போட்டுவிட்டால் சரி. ஆனால் இன்னொருவரின் மனைவியை பெயர் சொல்லி அழைப்பது தவறு என்று நினைக்கிறவர்கள் எமது சமூகத்தில் இருக்கிறார்கள். ‘பெயர் இருப்பது கூப்பிடத்தானே’ என்று ஒரு நண்பர் சொன்னாலும், இப்படிப்பட்டவர்களை கையைத் தட்டி அல்லது விரலைச் சுண்டி அழைக்கலாமா என்று யோசிக்கிறேன்! அல்லது இவர்களை வாழ்நாளில் சந்திக்காத வரம் வேண்டவும் முடியும் – கடவுள் வந்தால்.

சிங்களப்மொழிப் பரிச்சயம் குறைந்த மிக இளம் வயதில், ‘நீங்களும் உங்களுடைய வேலையும்’ என்று விட்டெறிந்து வரவேண்டிய நிலை ஏற்பட, ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரியை நான் ‘ஓயா’ என்று சொன்னது காரணமாயிற்று! இன்னொருமுறை, உயர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு சேர் இல்லாத good morning சொல்லி காது நிறைய வாங்கியிருக்கிறேன்.

அரச அதிகாரிகளாயிருந்தால், பொதுவாக பதவியை பெயருடன் ஒட்டவேண்டும். அல்லது ஒரு Sir/ Madam அடித்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. எனக்கு யாராவது ‘சேர்’ பூசுவதை நான் விரும்புவதில்லை. ஆனால் பேரன்/ பேர்த்தி வயதெனக் கொள்ளக்கூடிய சிறுவனோ, சிறுமியோ அலுவலக சூழலில் மாமா என்று அழைப்பதை நான் விரும்ப முடியாதிருக்கிறது. ‘அண்ணே’ என்று அழைத்தால் துவக்கு தூக்கிய சிறுவர்களை தாத்தாக்கள் அழைத்தது நினைவு வந்து அலங்கோலமாகிறது; அண்ணா என்று அழைக்கச் சொல்வது perversion. இதற்கு என்ன தீர்வு? பல பிள்ளைகள் என்னை sir என்று அழைக்கும்போது எனக்கும் அவர்களுக்குமிடையிலான power dynamicsஐவிட அன்பின் நெருக்கம் தொனிப்பதால் அவர்களுக்காக நான் என்னுடன் சமரசம் செய்துகொண்டிருக்கிறேன்.

பல அலுவலகங்களிலும், வானொலிகளிலும் சிலர் பெண்களுடன் அம்மா, குஞ்சு என்று கொஞ்சுவதைக் கேட்டால் எனக்கு அருவருக்கிறது. நடிகைகள் திருமணமாகிவிட்டால் சந்தை சரிந்துவிடுமென்று நினைப்பதுபோல, பல பெண்கள் தாம் திருமணமாகிவிட்டதை மற்றவர்கள் அறியாமல் இருக்க Ms என்று போட்டுக்கொள்வது நம்மவர் பலரும் விரும்பும் மேற்கத்தேய கலாசாரமாகிவிட்டது. திருமதி என்றால் அவர்களுக்கு அவமானமாகிவிடுகிறது போலும். நல்ல கணவன் கிடைக்காமல் அவர்கள் ms பண்ணினால் நான் என்ன செய்யமுடியும்?

Nurse பெண்ணை, அவர் திருமணமாகியிருந்தால்கூட, Miss என்று அழைக்கவேண்டும். வைத்தியசாலை மருந்து மயக்கத்தில் பெண் வைத்தியரை Miss என்று சொல்லிவிட்டால் – கதை கந்தல்தான். கராத்தே கற்பிக்கும் வீரரை master என்று அழைப்பதுபோல் வாத்தியாரை அழைத்தால் பரம்பரைக்கே கல்வி கிட்டாது.

இப்படியான விஷயங்களை யாராவது பண்டிதர்கள் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் எழுத்தாளப் பெருமக்களுக்கு மாலை போட்டுக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்; மக்களுக்கு பல சங்கடங்கள் தவிர்க்கப்படும்; அலுவலகங்களில் மக்கள் தமது வேலைகளை இலகுவாகச் செய்துகொள்ளும் ஏதுநிலை தோன்றி சமூக ஒற்றுமை ஓங்கவும் உதவும்!

1992ஆம் ஆண்டாக இருக்கலாம். கொழும்பில் 155 ல் போய்க்கொண்டிருந்தேன். எனதருகில் அமர்ந்திருந்த தனது நண்பிக்குப் பக்கத்தில் இருக்க விரும்பிய St. Bridget’s Convent பிள்ளை, என்னை சற்றுத் தள்ளி அமருமாறு கேட்டாள்:

‘Uncle, would you mind if I sit here?’

இடம் கொடுத்தேன்தான். என்றாலும் ‘என்னை uncle என்று சொல்கிறாளே!’ முதல் முறையாக uncle என்று அழைக்கப்பட்டதில் சற்றுச் சங்கடம். அந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரிந்திராத ஒரு மென் அதிர்ச்சி. கொஞ்சம் கோபம் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தலில்லை.

2023: ஒரு Ambarella மரம். பாடசாலைப் பிள்ளைகள் தாங்கள் திருட்டுத்தனமாக ஆய்வதாக நினைத்துக்கொள்வார்கள். அவர்கள் அப்படி நினைத்துக்கொள்ளட்டும் என்பதற்காகவே நான் என் தலை தெரியாமல் அறைக்குள் பதுங்கிவிடுவதுண்டு (சமூகத்தில் திருட்டை ஊக்குவித்த பொறுப்பு என்னையும் சாரட்டும்). தற்செயலாக நான் கண்டுவிட்டால் ஜலதரங்கம் போன்ற சிரிப்புகளுடன் ஓடிவிடுவது இனிமை. ஆனாலும், சில நேர்மைப் பெண்மணிகள் இருப்பார்கள்: ‘Uncle, ஆயட்டா?’

முன்னர் கோபத்தை ஏற்படுத்திய uncle இப்போது சங்கீதம் மாதிரி இருக்கிறதே; ஏன்?

2024: நாளை பாடசாலை ஆரம்பிக்கிறது. Ambarella காய்த்திருக்கிறது.

life · politics · Society

ஆடையும் கோலமும்!

மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குப் போக உடுத்துவது எப்படி என்று எழுதப்படாத விதிகளை சமூகம் வைத்திருக்கிறது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட, மகப்பேற்றுக்குப்போக என்ன உடுத்தவேண்டும் என்பதை வைத்தியர்கள் சொல்வார்கள். பாடசாலைக்கு என்ன உடுத்தவேண்டுமென்று ஆசிரியர்களும், அதிபரும் தீர்மானிப்பர். நீதிமன்றத்துக்கு எப்படிப் போகவேண்டுமென்று ‘கனம் கோட்டார் அவர்கள்’ தீர்மானிப்பார். நீச்சல் தடாகத்தில் இறங்க என்ன உடுத்தவேண்டுமென்று விடுதி நிர்வாகம் தீர்மானிக்கும். ராஜதந்திரிகளின் வைபவங்களுக்குப் போக இப்படித்தான் வரவேண்டுமென்று அழைப்பிதழிலேயே சொல்லிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு dress code உண்டு. ‘முடியாது; நான் இப்படித்தான் வருவேன்’ என்று அடம்பிடித்தால், சூழ்நிலை கடிக்கும்!

‘ஆடை பாதி; ஆள் பாதி’ என்று சொல்வதனால் பாதி உடையில் சுற்றித்திரியக் கூடாது. வாழும் சமூகத்துக்கும் போகும் இடத்துக்கும் ஏற்றாற்போல ஆடை அணியத் தெரிந்துகொள்வது பகுத்தறிவுப் பண்பு.

நீதிமன்ற வளாகத்துள் நின்று அவதானித்தால் யார் சாட்சிக்கூண்டில் ஏறுவார்கள்; யார் குற்றவாளிக்கூண்டில் ஏறுவார்கள் என்பதை ஆடை, அபிநயங்களைவைத்து முன்கூட்டியே ஓரளவு கணித்துவிடலாம். ஆனாலும், ஆடை நாகரிகத்தின் உச்சத்தைக் காட்டுவதாகவோ, ஒழுக்கத்தின் உன்னதத்தைக் குறிப்பதாகவோ எடுத்துக்கொள்ள முடியாது – எதிர்மாறான உதாரணங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

ஆப்கான், ஈரான் பெண்கள் தலையை மூடபண்ணி அடக்கப்படுகிறார்கள் என்று போராடிய பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் போராட்டத்துக்குப் பின்னால் அமெரிக்க நிதியனுசரணை இருந்தது. அந்தப் போராட்டங்களால் ஆட்சிகளைக் கவிழ்க்க முடியாமற்போன பிறகு, சிலருக்கு (அதிகம் சத்தம் போடக்கூடியவர்கள்?) அமெரிக்க வதிவிட உரிமை கொடுபட, மற்றவர்களை கைவிட்டு இன்று மறந்தும்போய்விட்டது அமெரிக்கா. அதே நிதியனுசரணை இன்று காசாவில் பெண்கள், குழந்தைகள் சகட்டுமேனிக்கு கொல்லப்பட உதவுகிறது என்பது இவர்களின் பெண் விடுதலைப் போராட்டத்தின் பின்னாலுள்ள அபத்தம்.

இலங்கையிலும், இந்தச் சமூகப் புரட்டலாளர்களுக்குப் பின்னால் யாருடைய நிதியனுசரணை இருக்கிறது என்று பார்த்தால் விஷயம் வெளிக்கும். எனக்கு என்னவோ, வானவில் காலாசாரப் போராட்டங்கள்போல, சில சம்பவங்கள் வேண்டுமென்றே நடத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. இந்த மோசடிக்காரர்களிடமிருந்து எமது சிறுவர் சிறுமியரைப் பாதுகாக்கவேண்டுமானால், விரும்பியோ விரும்பாமலோ, மதங்களின் துணையைத்தான் நாங்கள் நாடவேண்டியிருக்கும் என்றுபடுகிறது.

30 வெள்ளிக்கு காட்டிக்கொடுக்கிறவர்கள் இந்தக்காலத்திலும் இருக்கிறார்கள்…

life · politics · Society

கொத்துரொட்டிகள்!

Dr. Naomal Balasuriya.

2000களின் நடுப்பகுதியில் அவரின் மனிதவள முகாமைத்துவ மாணவனாக இருந்தேன். MBBS வைத்தியராகப் பட்டம் பெற்றிருந்தும் அந்தத் தொழிலை வீசியெறிந்துவிட்டு MBA பட்டம் பெற்று அந்தப் பாட நெறிகளில் விரிவுரையாளராகத் தொழில் செய்தார். Success Factory பற்றி அன்றே பேசினார். பல்வேறு துறைகளில் ஆழமான அறிவுகொண்டவராக இருந்த அவர், ஒரு calligraphy விற்பன்னரும்கூட.. அந்தச் சொல்லை அவராலேயே நான் அறிய நேரிட்டது. மிகவும் பணவசதி படைத்தவர்கள் தமது வைபவங்களுக்கு அவரின் கைகளால் வரவேற்புமடல் எழுதுவித்துக்கொண்டார்கள்! தன்னுடைய மனைவி தன்னை ஒரு பைத்தியம் என்பார் என்று சொல்லிச் சிரிப்பார். மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஆழமான மனிதர்களுக்கு கிடைக்கும் பட்டம் அவருக்கும் கிடைத்திருந்ததுபோலும்.

அற்புதமான புத்தாக்கச் சிந்தனையாளரான அவர், எங்களுக்கு கணினியே புதிதாயிருந்த அன்றைய காலத்தில் யாரும் யோசித்திராத இணையவழி வர்த்தக கருத்துகளை மிகச் சரளமாகச் சொல்லிவிட்டு ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்பார். இன்று நடைபெறும் பல வர்த்தக நடவடிக்கைகள் ஒருவேளை, அவரின் சிந்தனையின் நேரடி அல்லது மறைமுக செல்வாக்குக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களினால் உருவானவையோ என்று நான் நினைப்பதுண்டு. எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததுபோலவே என்னையும் அவருக்குப் பிடித்திருந்தது. வகுப்பில் எதையோ எழுதிக்கொண்டிருந்த என்னருகில் வந்து ‘Godfrey, you are very good’ என்று சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருந்தது.

எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் மனமுவந்த பாராட்டுபோன்று உலகில் வேறு என்ன இருக்கமுடியும்?

பிரபல ‘சமூகநல’ பிரகிருதிகளின் தில்லுமுல்லுகளையும் அரசியல்வாதிகளின் அபத்தங்களையும் அறிந்துவைத்திருந்த சராசரி மனிதராகவும் இருந்த அவர், வாய் திறந்தால் சிலேடையும்  நகைச்சுவையும் உதிரும். அவரின் அத்தகைய நகைச்சுவைக் கருத்து ஒன்று வெறுமனே சத்தம்போடும் அன்றைய அரசியல்வாதி ஒருவரைப் பற்றியதாயிருந்தது: ‘அவர் ஒரு கொத்துரொட்டி’ என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இன்றைய அரபு நாடுகளை அவதானிக்கும்போது அவரின் கதை எனக்கு நினைவு வந்தது.

வெறும் கொத்துரொட்டிகள்: “lot of noise; very little substance!”

Exposure visits · life · Society

‘ரொம்ப நன்றிங்க, அண்ணே’

சிங்கப்பூர் விமானநிலையத்தில் இருக்கும் ஒரு இனிப்புக்கடை. அந்த நாட்டைச் சேர்ந்த இளைஞனான கடைக்காரருக்கும் தென்னிந்திய இளைஞனுக்குமிடையில் மொழிக் குழப்பம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அதனை நான் அவதானிக்கவேண்டி ஏற்பட்டதற்குக் காரணம், என்னைப்போல கடைக்குவந்திருந்த, நடுத்தர வயது ‘வெள்ளை’ ஆசியர் ஒருவர், ‘இவனுக்கு ஹிந்தியும் தெரியவில்லை, அரபியும் தெரியவில்லை’ என்று உரத்த சத்தத்தில், ஆங்கிலத்தில், ஏளனமாக ஏசிக்கொண்டிருந்ததுதான்.
எனக்கு இரத்தம் சூடானது.
என்னைக்கண்ட அந்த இந்திய இளைஞன் ‘நீங்க தமிழா?; உங்களுக்கு தமிழ் புரியுமா?’ என்று ஆதங்கத்துடன் கேட்டான். இடையில் புகுந்துகொள்ள கிடைத்த சந்தர்ப்பத்தை உரிமையுடன் பயன்படுத்திக்கொண்டு, ‘ஆம், என்ன விஷயம்?’ என்று கேட்டேன்.

மெல்லிய தேகத்துடனும், அரும்பு மீசையுடனும் மிகச் சாதாரணமான உடையில், வெளிநாடு சென்று குடும்பத்துக்காக உழைத்து தம்பி தங்கைகளுக்காக, பெற்றோருக்காக ஆசையுடன் ஏதோ வாங்கிச்செல்லும் தியாகி அண்ணன்/ மகன் என்ற உணர்வை கணப்பொழுதில் எனக்குத் தந்த அந்த இளைஞன், பதட்டத்துடன் என்னவென்னவோ சொல்ல, விஷயத்தைப் புரிந்துகொள்ள எனக்கும் சற்று நேரம் எடுத்தது.

‘Buy 2 get 1 free’ என்றதைப் பார்த்து இரண்டு chocolate களை எடுத்தவன், கடைக்காரர் மூன்றாவதைத் தராததால், குறித்த discounted amountஐ கொடுத்தால் தருவார்களாக்கும் என்று நினைத்து நாணயங்களை எண்ணி எடுத்து கொடுத்து புரியவைக்க முயன்றுகொண்டிருந்தான்! பொதுவாக இத்தகைய இடங்களில் பணிபுரிகிறவர்கள் நேர்மையானவர்கள் என்பதால், இல்லாத நடைமுறை ஒன்றைப்பற்றி இளைஞன் பேசியதைவைத்து கடைக்கார இளைஞனாலும் எதனையும் ஊகிக்க, புரிந்துகொள்ள முடியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. நான் கடைக்கார இளைஞனுக்கு விஷயத்தை விளங்கப்படுத்தியதும் ‘ஒ, அப்படியா’ என்றுவிட்டு, கணினியில் பார்த்து நிச்சயப்படுத்திக்கொண்டு தன்னுடைய தவறை உணர்ந்தவனாக, இன்னொரு chocolate ஐ எடுத்துவந்து இளைஞடைய பைக்குள் வைத்துவிட்டான். இந்த அப்பாவியோ, திரும்பவும் அதற்குப் பணம்கொடுக்க முயன்றான்! Discount ம் free ம் அவனைக் குழப்பியிருந்தன. ‘பணம் தேவையில்லை; மூன்றாவது இலவசம்’ என்று கடைக்காரரும் நானும் சமாதானப்படுத்தி அனுப்பவேண்டியதாயிற்று.

அவன் போகும்போது, மனதார வார்த்தையாலும், உழைத்து, களைத்து, ஒளியிழந்திருந்த கண்களாலும் பலமுறை சொன்ன ‘ரொம்ப நன்றிங்க, அண்ணே’என்னை என்னவோ செய்தது. நங்கநல்லூர் என்பதுபோன்ற ஏதோ ஒரு இடப்பெயர் சொன்னான். சரியாக மனதில் பதியவில்லை.

இதை நான் எழுதும் நேரத்தில் அவனுடைய குடும்பத்தில் எவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் – தீபாவளிக்கு வீடு வந்த அவனுக்காகவும், அந்த மேலதிக chocolate க்காகவும்கூடத்தான்! அதை யாருக்கு கொடுத்திருப்பான்? நண்பர்களுக்கா? ஒருவேளை அவனுக்கு ஒரு காதலி இருந்தால், அதை அவளுக்குக் கொடுத்திருப்பானோ? என்னைப்பற்றியும் சொல்லியிருப்பானோ? இல்லை; தேவையில்லை. Perversion!

எத்தனையோ இடங்களில் எவ்வளவோ விஷயங்களுக்காக என்னுடைய ஆங்கில அறிவு பயன்பட்டிருக்கிறது. எப்போதாவது ஒருமுறை பெருமைப்பட நேரிடுகிறது.

வலுச்சண்டைக்குப் போவது என்னுடைய சுபாவமில்லைதான். ஆனாலும், ஒரே ஒரு கவலை:
அந்த ‘வெள்ளை’ ஆசியனுக்கு ஒரு ஆங்கில வகுப்பு வைக்காமல் வந்துவிட்டேனே!

Uncategorized

நப்பாசை

அமெரிக்கா/ மேற்கு ஐரோப்பா கூட்டணி யாரை அதரிக்கிறதோ அதற்கு மறுதரப்பில் அதிக நியாயம் இருக்கும் என்பது அதிகம் சரித்திரம் வாசிக்க விரும்பாதவர்களுக்கான one shot geopolitics lesson!

சில வருடங்களுக்கு முன்னர் ஜெர்மனியில் இலங்கைத் தமிழன் என்று என்னை அறிந்துகொண்ட PKK செயற்பாட்டாளர் ஒருவர் கண்கள் பனிக்க கட்டித் தழுவிக்கொண்டார். அந்த உணர்வு வெளிப்பாட்டுக்கு என்னிடம் தகுதி இருந்ததாக நான் நினைக்கவில்லை என்றாலும் எல்லாரிடமும் அடிபடும் குர்திஸ் மக்கள் மேல் பதின்ம வயதுகளிலிருந்தே எனக்கு ஆழ்ந்த அனுதாபம் உண்டு. போராட்ட ஆரம்ப காலங்களில் PFLP போன்ற அமைப்புகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்றமை காரணமாக பல தமிழர் போராளிக் குழுக்களுக்கு பலஸ்தீனர்களிடம் ஒரு பற்று இருந்தது. தற்போதைய என்னுடைய மனநிலையில் PKK அதிக மனித உரிமை மீறல்களைச் செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹமாஸ் போன்ற அமைப்புகள்கூட தவறிழைத்தாலும் ஒப்பீட்டளவில் அதிகம் ஒடுக்கப்படுகிறவர்கள் மேல்தான் எங்கள் அனுதாபம் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். கிறிஸ்தவர்களுக்கு அது கடமையும்கூட!

ஆனால் ‘ஜனநாயக’ நாடுகளில் இருக்கிற மனச்சாட்சியுள்ளவர்களின் நிலை பரிதாபம். ஏதாவது சொன்னால் புடின் ஆதரவாளர் என்று பச்சை குத்திவிடுவார்கள் என்று பயம். நாங்கள் புலிகளுக்குக்கூட இவ்வளவு பயப்பட்டோமா என்று நினைத்துப்பார்க்கிறேன். இலங்கையில் ‘பேச்சுரிமையை நசுக்கியவர்கள்’ என்று சொல்லப்பட்டவர்கள்கூட அங்கு பேசப் பயப்படும் நிலை! ஆனால் இந்த VPயின் காய் நகர்த்தல்களின் மறைமுக வெளிப்பாடு இறுதியில் பலஸ்தீனர்களின் உரிமைகளையும் வென்றெடுக்க உதவும் என்று எனக்கு ஒரு நம்பிக்கை. நப்பாசையாகக்கூட இருக்கலாம். இவ்வளவு நாட்களும் அதுகூட இருக்கவில்லையே!

life · Society

வைத்தியத் துறையினருக்கான ஓய்வு?

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குச் செல்லும் பலர், ‘அங்கு அவர்கள் எங்களை அவமரியாதை செய்வார்கள்; அறிமுகம் இல்லாவிட்டால் கவனிக்க மாட்டார்கள்; மட்டமாக நடத்துவார்கள்; திட்டுவார்கள்; தர்க்கரீதியற்ற நடைமுறைகளை வைத்திருப்பார்கள்’ என்ற இன்னோரன்ன விமரிசனங்களை வைக்கிறார்கள். எல்லா இடங்களிலும்போல அங்கும் கடமையுணர்வற்று வேலை செய்கிறவர்கள் இருப்பதால் இப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மையும் இருக்கத்தான் செய்யும். சுகாதாரத் துறையிலும், இலங்கையில் மட்டுமன்றி, உலக அளவில்கூட மாபியாக்கள் தொழிற்படுகின்றன என்பது புரிந்துகொள்ளச் சிரமமானதில்லை. எனக்கும் எனது நண்பர்கள், நண்பிகளுக்கும் சில அனுபவங்கள் இருக்கின்றன.

அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை வந்தபோது இந்த விடயங்கள் பற்றி அதிகம் அவதானிக்கத் தொடங்கினதன் பின்னூட்டம் இது.

நாங்கள் வருடக்கணக்காக விடுமுறை இல்லாமல் வேலை செய்ய, ‘இந்த வெள்ளைக்காரர்கள்’ வேலைக்கு வந்து 2 வாரங்களில் ஓய்வு வேண்டுமென்று ஓடுகிறார்களே என்று நாங்கள் கிண்டலடித்தபோது, அதற்குப்பின்னால் இருந்த மனோவியல் தத்துவம் புரிந்திருக்கவில்லை. எங்களுடைய கலாசாரத்தில் அது இல்லை! எங்களில் பலர் தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாகக் கருதியதும், மனோவியற் புரிதல் இன்மையும் ‘எங்களுக்குத் தெரியும்’ என்ற மமதையில் மற்றவர்களை மட்டந்தட்ட மூலகாரணங்களானது.   

நான் மற்றவர்களுடன் பொறுமையின்றி, மிக மோசமாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள், அதிக மனவழுத்தத்தைத் தந்த சம்பவங்கள் வாழ்வில் இடம்பெற்றிருந்த காலங்களிலேயே நடந்திருந்தன. (இயல்பாக நான் மோசமானவனில்லை என்பதை இது நிரூபிக்கின்றது 😉) வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களுக்கான வேலைத் திட்டங்களில் நான் ஈடுபட்டிருந்த காலங்களும் இதில் முக்கியமானவை. அதிக மனவழுத்தம் தரக்கூடிய பணிகளில் இருப்பவர்கள் தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளும்பொருட்டு விடுமுறை எடுத்துக்கொள்வது அவசியம் என்பது இந்த வேலைத் திட்டங்கள் முடிவுற்று பல வருடங்கள் கடந்தபிற்பாடு சுய ஆய்வுகளினூடாக எனக்குப் புரிந்தது. அண்மையில் வைத்தியசாலையில் இருந்தபோது அதிக அக்கறையுடன் மனிதர்களை அவதானிக்க இந்த அனுபவம் என்னைத் தூண்டியது.

பலவிதமான மனப்பாங்குகள், வேதனைகள், பிரச்சினைகளுடன் வருபவர்களை ஒரே சூழ்நிலைக்குள் இருந்துகொண்டு நித்தமும் கையாளும் நிலை நிச்சயமாக சாதாரணமானதில்லை. இது அவர்களின் மனப்பாங்கிலும், ஆரோக்கியத்திலும் அவர்களையும் அறியாமல் ஆதிக்கம் செலுத்தி அழித்துவிடும் என்பது என் அனுமானம் மட்டுமல்ல; அனுபவமும்கூட. சில வருடங்களுக்கு முன், எனது நண்பர் ஒருவர் மரணிக்குந்தறுவாயில் இருக்க, சிற்றூழியர் ஒருவர், பாடல் ஒலித்த கைபேசியை வாயில் கெளவியபடி வந்து அவருக்கு saline மாற்றியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலை நாடுகளில் வைத்தியரே நோயாளியின் பாதணிகளைக் கழற்றிய சம்பவங்களை அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க, சில காலங்களுக்கு முன்னர், கிளிநொச்சி வைத்தியச்சாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவேளை, தீண்டத்தகாதவனைப் பார்ப்பதுபோல பின்னால் கைகளைக் கட்டியபடி வைத்தியர் எட்டத்தில் நின்றிருக்க, அழுக்கான கட்டிலில் படுக்கவைக்கப்பட்ட எனக்கு சிற்றூழியர் ஒருவர் ECG கருவியைப் பொருத்தியபோது, இலங்கை வைத்தியத்துறையே கேவலமானதாகத் தோன்றியது.    ஆனால், அண்மைக்கால அவதானிப்புகளிலிருந்து, வைத்தியர்களும் தாதியரும் தமது கல்வியறிவு, அனுபவத்தூடாக, தம்மை நடுநிலைப்படுத்திக்கொள்ள ஓரளவுக்கு முயற்சிக்கிறார்கள் என்று புரிந்தாலும் அதில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

வைத்தியர்(கள்), நோயாளிகளின் நலன்கள் தொடர்பில் நோயாளிகளிடம் மென்மையாகப் பேசி, வெற்றுக் கைகளால் அழுக்கான உடல் பாகங்களைத் தொட்டு சேவையைச் செய்தார்கள் என்றாலும் மற்றைய வைத்தியர்கள், தாதியரைக் துளைத்தெடுத்த கடுமை எனக்கே சற்றுச் சங்கடமாக இருந்தது. நடுத்தரவயதுப் பெண்ணான சிற்றூழியர் ஒருவர் தனது வேலை, வயது போன்ற காரணிகளையும் மீறி நோயாளி ஒருவருடன் கிண்டலடித்து விடுதியைக் கலகலப்பாக்க முயன்றார். அந்த கலகலப்பு உண்மையானது என்றாலும் அவரின் முயற்சி பொய்யானது என்றே எனக்குத் தோன்றியது. மருந்து கொடுக்க நோயாளிகளைத் தம்மிடம் வரவழைக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டாலும், நோயாளி நடக்க முடியாமல் சிரமப்பட்டபோது சிங்களவரான பெண் தாதி ஒருவர் எட்டி விரைந்து அவரிடம் சென்றதை அவதானிக்க முடிந்தது (எந்த அறிமுகத்துடனும் போகாத அந்த நோயாளி நான் தான்!).

சில இளம் பெண் தாதியர் – அநேகமாக சிங்களவர் –   பகல் இரவாக வேலை செய்கிறார்கள். சிலரின் கண்களில் களைப்பும், சிலவற்றுக்குப் பின்னால் ஆழ்ந்த சோகமும் இருப்பதாகப்பட்டது எனக்கு. இளம் வயதில் நித்திரை விழித்து வேலை செய்த அனுபவம் எனக்கும் இருப்பதால் இது மனதை வருத்தியது என்பதும் உண்மை.

அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தபோது வகுப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்காக தென்னிலங்கை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்தபோது, ‘இவ்வளவு செலவு செய்கிறார்களே, இந்தப்பணத்தை எங்கள் மக்களுக்குத் தரலாமே’ என்ற ஒரு வகை குற்ற உணர்ச்சி ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்டிருந்தது. மேற்கத்தேயராயிருந்த எங்கள் மேலதிகாரிகள் எங்களுக்குச் சொல்லாமலே ஒரு சிறிய ஓய்வை எங்களுக்குத் தந்திருக்கிறார்களென்பதும், அது நல்ல மாற்றத்தை மனதுக்கும் உடலுக்கும் தந்திருக்கிறது என்பதும் புரிய நீண்டகாலம் எடுத்தது.

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு மனதை இலகுபடுத்த உதவக்கூடியது அல்ல. அதனாலேயோ என்னவோ, சிங்களவரான வைத்தியத்துறை ஊழியர்கள் ஒப்பீட்டளவில், மென்மையானவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது அவதானிப்பாக இருக்கிறது. இந்த விடயத்தை மனித நேயத்துடன் கையாள வைத்தியத்துறை சார்ந்த, அதிக மனவழுத்தத்தைச் சுமக்கிறவர்கள் வருடத்தில் ஒருமுறை 2-3 நாட்களுக்காவது தென்னிலங்கைப் பிரதேசங்களில் பயிற்சி/ கருத்தரங்கு போன்ற செயற்பாடுகள் கலந்த ஒரு ஓய்வுக்கு அழைத்துச் செல்லப்படுவது, பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த உதவும் என்பது எனது நம்பிக்கை. 2-3 வைத்தியசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் ஊழியர்களை குழுக்களாக இந்த ஓய்வுக்கு அனுப்பும் நடைமுறையின் விளைவு-வெளியீட்டை ஒரு கணிப்பீட்டினூடாக அளக்க முடியலாம்.

விடுமுறை எடுப்பது எமது கலாசாரத்தில் இல்லை. அத்துடன், இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் சொந்தச் செலவில் இதனைச் செய்ய அநேகர் முன்வர மாட்டார்கள், முன்வரவும் முடியாது. இதற்கு தனியார் நிறுவனங்களின் CSR funds, புலம்பெயர்ந்த தேசத்து கோடீஸ்வரர்கள் உதவ முடியும்.

இப்படி ஒரு விடயம் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சமூகத்தின் நன்மைகருதி இத்தகைய உரையாடலொன்று இடம்பெற்றால் நல்லதென்று தோன்றுகிறது எனக்கு.   

Uncategorized

ஈரம்

மகியங்கனை பகுதியில் ஒரு தேநீர் கடை. 70களைத் தாண்டிவிட்டிருந்த ஒரு மூதாட்டி அதனை நடத்திக்கொண்டிருந்தார். காலை வேளை, தேநீர் அருந்தலாம் என்று நானும் எனது அலுவலக வாகன சாரதியும் போனோம். இரவு பகலாக பல நூறு கிலோமீற்றர்கள் ஓடி களைத்திருந்த எனக்கு அந்த அம்மா தந்த தேநீர் உயிரைத் திரும்பத் தந்திருந்தது. உணவோ, பானமோ பிடித்திருந்தால் பாராட்டி நன்றி சொல்லும் பழக்கம் என்னுடையது.
‘மிக்க நன்றி அம்மா; உங்கள் தேநீர் எனது களைப்பைப் போக்கிவிட்டது’ என்றேன். அவர் ‘தவ தே எகக் தென்டத புதே’ (இன்னுமொரு தேநீர் தரட்டுமா, மகனே) என்றார். அவர் கேட்டவிதம் – அந்த அன்பு – அன்றுபோல் இன்று நினைத்தாலும் எனது கண்கள் பனித்துவிடும்.

வவுனியாவின் ஒரு கோடியில் இருந்த அப்பக்கடை. நண்பர்கள், நண்பிகளுடன் போயிருந்தேன். புன்னகை மாறாத சாந்தமான முகத்தையுடைய நடத்தர வயது சிங்களப் பெண், வெறுங்கால்களுடன் நிலத்துக்கும் நோகாமல் நடந்துவந்து பரிமாறினார். நடுத்தர வயது பெண்கள் என்றால் சிடுசிடுப்பை எதிர்பார்க்கும் எனக்கு பெருத்த ஏமாற்றம்! தமிழிலும் சிங்களத்திலும் எழுதியிருந்த பலகையைப் பார்த்தேன். தமிழ் கடைகளில் எழுதியிருப்பதைப்போல ‘தேநீர்’ என்று எழுதியிருந்தார்கள். ஆனால் ‘தே பொமு’ (தேநீர் பருகுவோம்) என்று சிங்களத்தில் எழுதியிருந்த அந்த விருந்தோம்பல் கலாசார செழுமை முகத்தில் அடித்து அவமானப்படுத்தியது.

கலை நயத்துடன் வீடுகள் கட்டி, வேலியோ, மதிலோ இல்லாமல் ஆளுயர புற்கள் சூழ வாழும் அவர்களின் மனங்களின் ஈரம் எங்கள் மண்ணுக்கு மழையாகப் பெய்கிறது என்று தோன்றியது.

Uncategorized

Carboard Heroes

‘எங்களுடைய வீடு யுக்கிரேனிய ஷெல் தாக்குதலுக்குள்ளானதை என்னுடைய 3 வயது மகள் கண்டாள். அதற்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள் அப்பா என்று அவள் கேட்டாள். இதோ, என்னுடைய மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக நான் போர்க்களத்தில் நிற்கிறேன்’ என்று ஒரு கிழக்கு யுக்கிரேனின் ருஸ்ய அப்பா சொன்னதைக் கேட்டேன்.

80களின் நடுப்பகுதியிலிருந்து புலிகளின் போராளிகள், தளபதிகள் உட்பட பல்வேறு போராட்டக் குழுக்களினதும் இராணுவ, பொலிஸ் படைகளைச் சேர்ந்தவர்களினதும் உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமளவுக்கு சில கணங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். தமது தரப்பின் நன்மைக்காக கொல்லவும் சாகவும் தயாராகவிருந்த அவர்களின் மனங்களின் மறுபக்கத்தில் இருந்த மென்மையையும், சமயங்களில் கண்களினோரம் ஈரக்கசிவையும் பார்த்திருக்கிறேன்.

களத்தில் வீழ்ந்து கிடக்கிற போர்வீரனின் கண்களிலிருக்கும் வெறுமையைக் கண்ட எந்தத் தளபதியும் யுத்தத்தை விரும்ப மாட்டான் என்று சொல்வார்கள். எல்லாத் தரப்புகளிலும் கொலைபாதகர்கள் இருந்தார்கள் என்பது உண்மையானாலும் உண்மையான வீரர்கள் வாழ்க்கையின்பாலும் உலகின்மேலும் ஆசைகொண்ட இயல்பான மனிதர்கள்தாம். அவர்கள் மறுதரப்பினரை அழிக்க முயற்சிப்பது அவர்கள் மேலுள்ள வெறுப்பால் என்பதைவிட தமது தரப்பின்மீதுள்ள அன்பால் என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இத்தகைய எதிரிகள் மறுதரப்பினரின் துன்பத்தைப் புரிந்துகொள்ளும்போது மீளிணக்கத்துக்கான வழி ஏற்படுகிறது. ஆனால் அதற்குத் தடையாக இருக்கிறவர்கள் தாம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்துகொண்டு பேரிழப்புகளைச் சந்தித்தவர்களின் கண்ணீரைத் தூண்டிவிட்டு, அவர்களின் துன்பத்துக்குத் தூபம் போட்டு குளிர்காயும் தற்காலிக  தேசியவாதிகள் – மனித உரிமை ஆர்வலர்கள் – நாட்டுப்பற்றாளர்கள் – மற்றும் முகநூலின் அட்டைத்தாள் வீரர்கள். எனவேதான் உண்மையானவர்களுக்கான நினைவுகூரல்களில் இத்தகையோர் தமது அரசியல் முதலீடுகளைப் போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மக்களின் கடமையாகிறது.

85/86 ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பாடலின்பால் எனது விசேட கவனத்தைச் ஈர்த்தவர் TELO இயக்கப் போராளி ஒருவர். அவர் இருக்கிறாரா, கொல்லப்பட்டாரா என்று தெரியாது. பலர் இருந்த அந்த இடத்தில் ‘இந்தப் பாடலின் சரணங்கள் எவ்வளவு smoothஆக போகின்றன என்று கேளும்’ என்று என்னிடம் வந்து ஏன் சொன்னார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரசனையுடன் மின்னிய அந்த கண்கள் எனக்கு நினைவு வரும். அதேபோல, அக்காலகட்டத்தில் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் தம்மிடையே ‘பாடு நிலாவே’ பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி இரசித்து மகிழ்ந்ததும் நினைவு வருகிறது. சுத்த வீரர்கள் எதிரிகளை மதிக்கிறவர்களாகவும் மென்மையான இதயம் படைத்தவர்களாகவும் இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
முகநூலில் மிரட்டுகிறவர்கள் cardboard heroes!

பாடல்: பெண்மானே சங்கீதம் பாடிவா (நான் சிவப்பு மனிதன்)

https://www.youtube.com/watch?v=PkOJbNhDfsM