Society

செஞ்சோலை என்ற பாலை

DSC_6289a‘Born with a silver spoon in mouth’. வசதியும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்களை ‘வெள்ளிக் கரண்டியை வாயில் வைத்தவாறே பிறந்தவர்’ என்று இவ்வாறு ஆங்கிலத்தில் அடைமொழியிட்டுக் கூறுவது வழக்கம்.

யுத்தம் சின்னாபின்னமாக்கிய குடும்பங்களில் யாருமற்று அநாதரவாக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்கவென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் 1990களில் செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டதை ஈழப்போராட்டத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்ட அனைவரும் அறிவர். ஒரு கனிவான தகப்பன்போல அக்குழந்தைகளுடன் அவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்திருந்தன. கெளதமரை அவரின் பெற்றோர் உலகின் துன்பங்கள் எதையும் அறியாமல் வளர்க்கத் தலைப்பட்டதுபோல, பெற்றோரற்ற இக்குழந்தைகள்  எந்தக்கவலையையும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவேண்டி, பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டில் செஞ்சோலை வைக்கப்பட்டிருந்ததாக முன்னர் சொல்லப்பட்டிருந்தது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழீழத்தை வெற்றிகொண்டதன் பின்னர் அத்தகைய பிள்ளைகளை வளர்ப்பதே அவரது விருப்பம் என்று அவர் கூறியிருந்ததாகவும் அந்நாட்களில் மக்கள் பேசிக்கொண்டதாக ஞாபகம். செஞ்சோலைக் குழந்தைகள் கேட்டு பிரபாகரனால் வழங்கப்படாதது அநேகமாக ஒன்றுமில்லை என்பார்கள். ஆனால் வரித்தொப்பி கேட்டபோதுமட்டும் மறுத்துவிட்டு ‘நீங்கள் எனது பிள்ளைகள்; போராளிகளல்லர்’ என்று சொன்னதாகவும் நினைவு மீட்டுகிறார்கள் சிலர். தனது உயிருக்கு ஆபத்து இருந்த சந்தர்ப்பங்களிலும்கூட ‘பார்க்கவேண்டும்’ என்று பிள்ளைகள் கேட்டால் ஓடி வருபவர் என்பது, எல்லையோர சிங்களக் கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் என்று பாராது வெட்டியும் சுட்டும் கொல்ல உத்தரவிட்ட ஒரு மனிதனின் நம்பக்கடினமான, மென்மையான ஒரு பக்கமாக இருந்திருக்கிறது.

எது எப்படியிருந்தபோதும், யுத்தம் நடந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் செல்வமும் அதை மிஞ்சிய செல்வாக்கும் மிக்கவர்களாக இந்தக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அன்றைய குழந்தைகள் பின்னர் பெரியவர்களாகி சிலருக்கு அங்கேயே திருமணம் செய்துவைக்கப்பட்டு அவர்களது குழுந்தைகளுடனும் ஏனைய மக்களுடனும் இடம்பெயர்ந்து, அனைவரையும் போல யுத்தத்தின் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்து, சிலர் மடிந்து, பலர் முகாமில் வாழ்ந்து, தடுப்பிலிருந்து விடுதலை பெற்று இன்று பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மீண்டும் தமது பூர்வீகமான, இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட, செஞ்சோலை கிராமத்துக்கு வந்து வாழத்தலைப்பட்டது 2019 இல்.DSC_6279a

யுத்தத்தின்போது இராணுவநோக்கில் தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்ட சந்தேக மனப்பான்மை இன்று எல்லோரையும்போலவே இவர்களையும் பாதித்திருக்கிறது. சமூகமட்டத்தில் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவர் மீதும் இருக்கும் பயம்/ சந்தேகம் இவர்கள் மீதும் நிழலாடுவதாகவே தோன்றுகிறது. இவர்களுக்கு உறவுகள், இவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் மட்டும்தான். வயதில் மூத்தவரை ஒருவர் அக்கா என்று அழைத்தால், அவரின் குழந்தைகள் முன்னயவரை சித்தி என்று அழைக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் போலவே சமூக, பொருளாதார, உளநலத் தேவைகள் இவர்களுக்கும் இருந்தபோதும் பெற்றோர், உறவினரை அறியாதவர்கள் என்ற வகையிலும், ஆரம்பத்தில் மிக உயர்வான நிலையில் வைக்கப்பட்டு பின் சமூக, பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டவர்கள் என்ற வகையிலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அதிகம் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். முன்னர் தமது பராமரிப்பாளர்களுடன் முரண்பட்டுக்கொண்டு தண்டனைக்காளானபோது, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து அவர்களைப் பழிவாங்கியதையிட்டு மனம்வருந்தும் உள்ளங்கள் சில, இன்று பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் மீதும் கருணை பாராட்டுபவர்களாக இருப்பது எளிமையான மனித மனங்களின் முதிர்ச்சியடையும் வல்லமையைக் காட்டுகிறது.

DSC_6274aநிரந்தரமான, உறுதிப்படுத்தப்பட்ட காணி, வீடு என்பன கிடைக்கப்பெறாதவர்களின் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்கள். செஞ்சோலைக்கு என்று புலிகள் வாங்கிய காணிக்கு உரித்துடையவர்களாக முன்னர் இருந்தவர்களில் சிலர் வந்து தமது காணியை மீளத் தரும்படி கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பல ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள இந்த நிலத்தில்தான் செஞ்சோலைக் குழந்தைகள் ஒடி விளையாடினார்கள்; இங்குதான் இவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்தார்கள்; அவர்கள் அழுததும், சிரித்ததும், குண்டு வீச்சுகளுக்குப் பயந்து பதுங்கியதும், சிலர் திருமணம் செய்ததும்கூட இங்குதான். அதனால் இங்குதான் அவர்கள் தம்முடன் வளர்ந்த உறவுகளுடன்  வாழவும் விரும்புகிறார்கள்.

DSC_6250aஏனெனில் அங்கு அவர்களை ‘அப்பன் பெயர் தெரியாதவர்கள்’ என்று யாரும் ஈனத்தனமாக  விளிப்பதில்லை; சாதி, சமய வேற்றுமை-வெறுப்புகள் இல்லை; சீதனக்கொடுமை இல்லை. ஒருவித சமத்துவ சமுதாயமொன்றில் வாழும் இவர்களிடையே கூலி வேலை செய்து ஓரடி வாழ்க்கையில் முன்னேறியவர்கள்கூட மற்றையவர்களுக்காக இரங்கும் சகோதரபாசம்  அதிகம் இருப்பது தெரிகிறது.

போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துகளில் ஒரு துளியை உதவக்கூடுமானால், இவர்களினதும் இவர்கள் போன்ற இன்னும் ஏராளமானவர்களின் வாழ்க்கையையும் மாற்ற முடியும். தேசியம் பேசி, தேசியத் தலைவர் என்று போற்றி, விடுதலைக்கோசம் முன்வைத்து, கதை எழுதி, கவிதை யும் இயற்றிவிட்டு, இராணுவம் மக்கள் மேல் காட்டும் அன்பைக்கூட இவர்கள்மேல் காட்டாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் அநியாயம் செய்பவர்கள் ஒருபுறமும், எதிரி என்று சொல்லப்பட்டவர்களுக்கு இரகசியமாக பணிபுரிபவர்கள் இன்னொருபுறமும் இருக்க, சந்தேகத்தின் சந்தையான இன்றைய வடபகுதியில், ‘மாமா’ என்று சொல்லும்போதே கண்கள் பனிக்கும் அவர் வளர்த்த இந்த குழந்தைகளை நாம் நம்பினாலும், அவர்கள் யாரை நம்பலாம் என்பதுமட்டும் விடைகாணமுடியாத கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

DSC_6287a

சமூக செயற்பாட்டாளர்களின் கண்களிலும்கூட அதிகம் தென்படாமல் இருந்துவிட்ட இந்த அவலம், விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கும் அரசியலுக்கும் அப்பால் மனிதநேயம் உள்ளவர்களின் சமூகக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது என்பதுவே உண்மை.

Society

அட்டைகள்

நல்ல உணவில்லை; நலம் பேணும் வசதிகளில்லை; வாழ்வை மேம்படுத்தும் நல்ல கல்விக்கான வசதியில்லை. மலைகளில் ஏறி இறங்கி கொழுந்து பறித்தபின் காலாறியிருக்க நல்ல வீடில்லை.

இப்படி இல்லைகளால் அவர்கள் நிறைந்திருக்க எமக்காக எல்லாம் தந்தார்கள் காலங்காலமாக, அந்நியச் செலாவணியாக. திட்டமிடப்பட்டு வளர்க்கப்படும் அறியாமையில் அதிகாரிகளின் போலி வாக்குறுதிகள் செல்லுபடியாகின்றன. இல்லாத காணிக்கு செல்லாத உறுதி, இல்லாத வீட்டுக்கு கடன் என்று பல விதங்களில் ஏமாற்றப்பட்டதை அவர்கள் சொல்லும்போது தேனீர் குடிப்பதுகூட பஞ்சமா பாதகங்களுக்குமேல் இன்னொன்றாக எண்ணவைக்கிறது. இலங்கை மக்களில் அதிகபட்ச ஒடுக்குமுறைகளுக்கு நூற்றாண்டுகாலங்களாக இலக்காக்கப்பட்ட இந்த மக்கள் எந்த நம்பிக்கையும் தராத ஒரு சூழலுக்குள் இன்றும் வதைபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பொருட்காளாக இவர்கள் இன்றும் கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மனச்சாட்சியுள்ள அனைவரினதும் இதயங்களைச் சின்னாபின்னமாக்கிவிடும்.

தூரத்துப் பச்சையாக அழகு கொழிக்கும் மலையகத்தை அனுபவிப்பதுடன் அதற்குக்காரணமானவர்களின் இரணங்களின் காரணங்களையும் சற்று அறிய முயற்சி எடுப்போம். அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். அது எம் அனைவரினதும் கடமை என்பதைக் கருத்தில் கொள்வோம்.

எனவே:

அன்றாட தேனீரை அனுபவிக்கும்போது அவர்களிடம் அட்டைகள் தினமும் உறிஞ்சிய குருதியை எண்ணிப்பார்ப்போம்.

எங்கள் ஆடம்பரங்களுக்காக வாதிடும்போது அவர்களின் அனைத்து நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகளையும் மீறப்பட்ட உரிமைகளையும் நினைத்துக்கொள்வோம்.

எங்கள் வேலைகள் மதிக்கப்படவில்லையே என்று அங்கலாய்த்துக்கொள்ளும்போது அவர்களின் நூற்றாண்டுகால தியாகங்கள்கூட இன்னும் கண்டுகொள்ளப்படவில்லையென்பதை எண்ணிக்கொள்வோம்.

DSC_teaஇந்த வெற்றுக்கூடையை அவர்களது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் நிறைத்திருக்க, அன்றாடம் அவர்களின் குருதியை உறிஞ்சுவது அட்டைகள் மட்டுமல்ல….

Society

குரங்குகள்

DSC_0054a (Large)பல வருடங்களின் பின்னர்,  கடந்த மாம்பழப் பருவத்தின்போது அதிகமான பழங்களை உருசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. பொதுவாக, எமது மரங்களின் பலனை அனுபவிப்பவை குரங்குகளே. ஆனால் இம்முறை வன்னிப் பிரதேசங்களில் மாமரங்கள் அதிக பலன் தந்ததன் காரணமாகவோ என்னவோ, வவுனியா நகருக்குள் குரங்குகளின் வருகை குறைவாகவே இருந்தன. 2,000 ரூபாவுக்கு மரத்தை வாங்கும் கொள்ளையர்களுக்கும் கொடுக்காமல் அணில், வெளவால், குக்குறுவான் போன்ற இன்னோரன்ன பிராணிகளுடனும் பறவைகளுடனும் பகிர்ந்து நாமும் மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டோம்.

இயற்கையில் கிடைக்கும் வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. தாம் மட்டுமே அவற்றை ஆண்டு அனுபவிக்க நினைப்பதால் ஏனைய பிராணிகளை அண்டவிடாமல் சதி செய்யவும் அவற்றை கொன்றொழிக்கவும் மனிதர்கள் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்துகின்றனர். உலகில் உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது என்பது ஒரு மாயை என்றும், அன்றாடம் உணவு வீணாகப்போவதைத் தவிர்த்தாலே பட்டினியைத் தவிர்க்கலாம் என்றும் அந்த உணவுப்பொருட்களின் தயாரிப்பிற்கான நீரைச் சேமிக்கலாம் என்றும் துறைசார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

2011ஆம் ஆண்டின் FAO நிறுவனத்தின் அறிக்கையில் 1.3 பில்லியன் தொன்கள் உணவுப்பொருட்கள் ஒரு ஆண்டுக்கு வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீணாகும் நீரின் அளவு 173 பில்லியன் கனமீற்றர் என்றும் World Resource Institute இன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவைப் பாதுகாப்பதானது விவசாயத்துக்கான மேலதிக காடழிப்பையும், அதிக விளைச்சலுக்கான இரசாயனப் பிரயோகத்தையும் தடுக்க உதவும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெளதிக வளங்கள் மேலான மனிதர்களின் ஆதிக்கத்தின் வீச்சையும் தீர்மானிக்கிறது:- அதிக சம்பளம் பெறும் ஒருவர் வீட்டில் அதிகமான மின்குமிழ்களை எரிக்கும் வல்லமை பெறுகிறார்; தெருக்கோடியில் உள்ள கடையில் ஒரு தேங்காய் வாங்குவதற்கும் அவர் காரில் போகமுடியும்; வருடத்துக்கு இருமுறை கைத்தொலைபேசியைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்; அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் வளைத்துப்போட்டுக்கொண்டு சட்டத்துக்கும் சமூகநீதிக்கும் புறம்பான செயற்பாடுகளூடாக மேலும் மேலும் சொத்துக்களைச் சேர்த்துக்கொள்ள முடியும்; என்றவாறாக இது தொடரும்.

அனைத்து உயிர்களின் நல்வாழ்க்கைக்கும் பெளதிக வளங்களின் நுகர்வு இன்றியமையாதது. முற்றும் துறந்த முனிவர்களாக நாம் நிர்ப்பந்தத்துக்குள் வாழவேண்டிய தேவை இல்லை.   உலகெங்கும் பரந்து விரிந்துள்ள நவீன முதலாளித்துவ பொருளாதாரம், நுகர்வுக்கலாசாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்ற தவிர்க்கமுடியாத சாபக்கேட்டை நாம் விலக்கிக்கொள்வது இயதார்த்தமில்லை.

வெளவால்களும் அணில்களும் தமது பசிக்குத்தேவையான அளவைமட்டும் உண்பதுபோல குரங்குகள் ஏன் செய்வதில்லை? எல்லையற்றுப் பாய்ந்து, தமது உடற்பருமனாலும் குறும்புத்தனத்தினாலும் உண்பதைவிட உதிர்ப்பதை அதிகம் செய்கின்றனவே; ஏன்?

அது அவற்றின் சுபாவம் போலும்! குரங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொல்லப்படுகிறது. ஆகவே, சிந்திக்கும் ஆற்றல் குறைந்த அவற்றால் தமது செயற்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்றும், தாம் ஏனைய பிராணிகளுக்கு அநீதி இழைக்கிறோம் என்று அவற்றுக்குத் தெரியாது என்றும் நாம் கருதிக்கொள்ளலாம்.

ஆனால் மனிதர்கள் சிந்திக்கலாம்!

மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான நீரை/ எரிபொருளை மிச்சப்படுத்தவும், சூழலைக் குறைவாக மாசுபடுத்தவும், மிதமிஞ்சிய கனிமச் சுரண்டலையும் அவைக்காக நடத்தப்படும் போர் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறைக்கவும், எமது வாழ்க்கைக்குத்தேவையான பெளதிகவளங்களை அடைவதுடன் ஆசையை மட்டுப்படுத்திக்கொள்ளவும் எம்மால் ஆகும்.

உலகில் உள்ள அனைவரிடமுமுள்ளது உலகின் பணம். எங்கோ, என்றோ, ஏதோ வழிகளில் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டியதே எமது கைகளில் உள்ள பணம். ‘எனது இயலுமை; நான் பணம் கொடுக்கிறேன்’ என்ற இறுமாப்பு அபத்தமானது. எனவே, எம்மால் முடியும் என்பதற்காக மேலதிகமான வளங்களைச் சுரண்டாதிருப்போம்.

குரங்குகள் வராததால் இம்முறை ஏனைய பலவிதமான பிராணிகளுக்கும் எமக்கும் மாம்பழங்கள் கிடைத்தன.

குரங்குகள் போல வாழாதிருப்போம்.

Society · South Africa

தண்ணீர், தண்ணீர்

Cape Town , South Africa 20180501 (2)தென்னாபிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரம் மிக மோசமான நீர்த்தட்டுப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருப்பதை உலக விடயங்களிலும் கவனம் செலுத்துபவர்கள் அறிந்திருப்பீர்கள். ‘எமது பிரச்சினைகளே அதிகம் இருக்க, உலக விடயங்கள் நமக்கெதற்கு’ என்பவர்களுக்காக இந்தப் பத்தி.

அண்மையில் தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கேப் டவுன் நகரிலும் தங்கவேண்டி இருந்தது. நான் தங்கிய விடுதி உரிமையாளர் விடுதியின் சிறிய பகுதியொன்றை ஒதுக்கித்தந்துவிட்டு ‘நீர்ப்பிரச்சினையால் நல்ல அறைகளைத் தரமுடியவில்லை’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார். நீர்த்தட்டுப்பாட்டைப்பற்றி முன்னமேயே நான் அறிந்திருந்தபடியால், உல்லாசப்பயணத்துறையின் பாதிப்புப்பற்றி அவருடன் உரையாட முடிந்ததுடன் அவ்விடுதியின் பெரும்பாலான பகுதிகள் பாழடைந்ததுபோலக் காணப்பட்டதை அவதானிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

தென்துருவத்திலிருந்து பனிப்பாறைகளை இழுத்துவந்து உருகவைத்து நீரைப் பயன்படுத்துவதுபற்றிக்கூட அங்கு நிபுணர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்!

நான் எம்மைப்பற்றிச் சிந்தித்தேன்.

தீவுப்பகுதியொன்றில் ஒரு வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “‘மற்றவர்களுக்கு’ முன்பு சிரட்டையில் தான் நாம் தண்ணீர் கொடுப்போம்; இன்று எமக்கும் அதேநிலை” என்று ‘கர்மவினை’ பற்றிக் கூறினார்.

அன்றாடம் நாம் எவ்வளவு நீரை விரையம் செய்கிறோம்? எமது மழைநீர் நிலத்துள் செல்லவிடாமல் முற்றத்துக்கு கற்களைப் பதித்து தடுத்துவிடுகிறோம். கஞ்சல் கூட்டுவதற்குச் சிரமம் என்றும் குரங்குகள் வருகின்றன என்றும் மரங்களை வெட்டி இயற்கையின் நீர்சுற்றை அறுத்துவிடுகிறோம்.

நீர்சுத்திகரிப்புக் கருவிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை அக்கறையின்றியோ அல்லது அறிவீனம் காரணமாகவோ சூழலை மாசடையும் வகையில் வெளியேற்றிவருகிறோம்.

இன, மத, சாதி ரீதியாக மட்டுமன்றி, மாவட்டரீதியாகக்கூட நீர்வளப்பகிர்வுபற்றி நாம் வேற்றுமை பாராட்டி ஒருவருக்கொருவர் குழிபறித்துக்கொள்கிறோம்.

அது போதாதென்று, வரட்சியால் பொதுமக்களின் பயிர்கள் வாடி அவர்களின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், அவர்களின் வள மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, இருக்கும் ஒருசில நீர்நிலைகளிலிருந்தும் நீரை உறிஞ்சி தமது தோட்டங்களை அழகு படுத்துவதுடன் பயிர்செய்கைகளூடாக மக்களுக்கேதிரான அநியாயமான வியாபாரப் போட்டியிலும் ஈடுபடுகிறார்கள்.

70களில் மேனாட்டு உல்லாசப்பயணிகள் நீர்ப்போத்தலைப் பணம்செலுத்தி வாங்கிப் பயன்படுத்துவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டுப்பார்த்த எமக்கு இன்று அது சர்வசாதாரணமாகிவிட்டதுமட்டுமன்றி நாமும் அதையே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். எவ்வித தயக்கமுமின்றி கிணற்றிலிருந்து வாளியால் அள்ளி அருந்திய வாழ்வின் கொடையான நீர் இன்று விவசாய இரசாயன பாவனையால் மாசடைந்துபோய் அதே விவசாயிகளுக்கும் ஏனையோருக்கும் நிரந்தர நோயை ஏற்படுத்தும் சாபமாக மாறிவிட்டது.

தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் நிலைமைகளை அவதானிக்கும்போது எமக்கு இது ஆரம்பம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

Cape Town , South Africa 20180501கேப் டவுன் நகரில் பொது நீர்குழாய்கள் இருக்கும் இடங்களில் பல பூட்டப்பட்டுக் காணப்படுகின்றன. திறந்திருக்கும் ஒருசில குழாய்கள் மருந்து தெளிக்கும் கருவிகளைப்போன்று மிகச்சிறிய துணிக்கைகளாக நீரை விசிறும் வண்ணம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்திகரித்துக்கொள்வதற்காக நீரற்ற முறைகளைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இம்முறைகள் போதுமானவைகளாக இருப்பதுவும் கண்கூடு.

இயற்கை வளங்கள் பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. அவற்றை எல்லையிட்டு உரிமைகொண்டாடுவது நவீன மனிதனின் பேராசை மனப்பாங்கிலிருந்து வந்தது. இன, மத, சாதிக்கட்டமைப்புகளூடாக வளச்சுரண்டலும் மேலாதிக்க மனப்பாங்கும் வலுப்படுத்தப்படுகிறது.

நீர் உயிரினங்களின் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல; அது ஒரு மனித உரிமையும் கூட. அந்த உரிமையை எமது செயற்பாடுகளால் மற்றவர்களுக்கு மறுப்பது வன்முறை. விரையம் செய்வதும் மாசுபடுத்துவதும் குற்றங்கள். கண்டும் கணாமல் இருப்பது குற்றத்தை ஆதரித்தல் ஆகும். அலட்சிய மனப்பாங்குடன் குறுகியகால பொருளாதார வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவது, ‘கர்மவினையை’ அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முயற்சியில் வெற்றிபெறுவதற்கு மட்டுமே உதவும் என்பதில் ஐயமில்லை.

Society

நீரும் நிலமும்

DSC_2324aவிவசாயத்திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு, இந்திய விவசாயிகளும், ஸ்கன்டினேவிய நாடொன்றில் பணிபுரியும் இலங்கையைச்சேர்ந்த கல்வியாளர்கள் உட்பட, விவசாயத்திணைக்கள அலுவலர்கள் சிலரும் பங்குபற்றிய விவசாயக் கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது.

அனைவரையும் ஈர்க்கும்வகையில் அமைந்த இந்தக் கருத்தரங்கில் என் மனதைத் தொட்ட விடயமாக, இந்திய விவசாயிகளின் அளிக்கைகளில் ஒன்றில் ஒருவர் கூறிய ‘உங்கள் மண் புனிதமானது’ என்ற கூற்று அமைந்திருந்தது. அது அரசியலோ அல்லது மதமோ தொடர்பாகச் சொல்லப்பட்டதன்று; மாறாக, ‘இங்கு தாராளமாகவும் எளிதாகவும் நீர் கிடைக்கிறது. கிணற்றிலிருந்து வாளியில் அள்ளி பயிர்களுக்கு விடக்கூடியநிலை இருக்கிறதே’ என்று அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டிருந்தார். ‘இதில் என்ன புதுமை’ என்று நான் சிந்தித்துக்கொண்டிருந்தபோது, இந்தியாவில் பல இடங்களில் ஆயிரம் அடிகளுக்குமேல் ஆழ்துளைக்கிணறு தோண்டியும் நீர் வராதிருக்கும் நிலைமையை அவர் எடுத்துச்சொன்னார். அந்தச் செய்தி என் செவிவழி புகுந்து மனதில் பதிவதற்குச் சில வினாடிகள் எடுத்தன.

இத்தகைய உன்னதமான மண்ணையும் சூழலையும் நல்லமுறையில் பராமரித்துப் பாதுகாத்துக்கொள்ளுமாறு அவர் இறைஞ்சிக் கேட்டுக்கொண்டது மனதை நெகிழவைத்தது.

இந்த நாட்டை எமது எதிர்காலச் சந்ததியினர் வாழும்வகையில்  விட்டுச்செல்லவேண்டுமென நாம் விரும்புவோமெனின்,  எம்மனைவருக்கும் இச்செய்தி மிகவும் பிரதானமானது. அது தொடர்பான எமது கடமை பொதுவானது.

நல்லசெய்தி யாதெனில், யுத்தம், சரியான திட்டமிடலில்லாத அபிவிருத்திச் செயற்பாடுகள், திறமையற்ற அரசியல் நிர்வாகம், பொருளாதார தில்லுமுல்லுகள் போன்ற இன்னோரன்ன காரணங்களினால் சூழலுக்குப் பெரும் நாசத்தை நாம் விளைவித்தபின்னரும்கூட, இன்னும் எமக்கு கொஞ்சம் மழை வருகிறது; குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் நீர் கிடைக்கிறது!

அது எவ்வளவு காலத்துக்கு என்பதுதான் ஒரு பெரிய கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

நாம் எமது நீர்வளங்களைச் சரியான முறையில் முகாமை செய்யாது வீணடித்துவிடுகிறோம்; எமது மண்வளத்தை எதுவித அறம்சார்ந்த சிந்தனையுமின்றி, இரசாயனங்களால் நாசம் செய்கிறோம்; வாக்குவேட்டை அரசியலுக்காக எமது காடுகளை அழித்துவிடுகிறோம்; எமது தாவரங்களையும் பிராணிகளையும் பூச்சியினங்களையும் அழித்து எம்மையும் நஞ்சூட்டிக்கொள்கிறோம்.

இவ்வாறெல்லாம் செய்துவிட்டு, சூழற்றொகுதிகளையும் அழித்துவிட்டு என்றென்றைக்கும் உயிர்வாழவேண்டித் திட்டம் தீட்டுகிறோம்….

தேசியமுக்கியத்துவம் கொண்டதெனச் சொல்லப்படும் இன்றையதுபோன்ற ஒரு நாளில், தேசப்பற்றைப் பேசுவது இருக்கட்டும்; எம் பொதுவான எதிர்காலம்பற்றிச் சிந்திப்போமாயின், அது அனைத்திலும் நல்லது.

Society

காலமாற்றத்தின் கண்ணாடி

கையில் தட்டுப்பட்ட காலமாற்றத்தின் கண்ணாடி ஒன்று:

அரசியலில் நாம் அதிகமாய் அனாதைகளானதையும், இலங்கைத் தமிழர் உலகமெல்லாம் அகதிகளானதையும், ஒரு கொடிய இனவெறியுத்தம் ஆரம்பித்து முடிவடைந்தும் விட்டதையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் கடந்து இன்னொரு பயங்கரத்துள் நாம் நுழைவதையும், அதிகமதிகமான பாரம்பரிய நிலங்கள் பறிபோய்விட்டதையும், எமது விவசாயப் பொருளாதாரம் அகதிப் பணத்தின்பாற்பட்டதையும், எமது சுவாசம் அதிகம் புகையை உள்வாங்குவதாக மாறிவிட்டதையும், எமது பேச்சும் வாழ்வு முறையும் இந்திய தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்துக்குட்பட்டு தன்னிலை மறந்துபோய்விட்டதையும், உன்னத வர்த்தக சேவை தேய்ந்து மொழியே தெரியாத தனியாரிடம் எம் வானொலிகள் சிக்கியதையும், இசைத்தட்டும் காந்தநாடாவும் அவையிலிருந்து அகன்று இனிமையற்ற இறுவட்டாகியதையும், ஓவியமும், புகைப்படமும் கலைஞரிடமிருந்து விலகி கருவிகள் வசமானதையும் சொல்லிற்று.

மேலும், போடோ பிரதியிடல் பரவலானதையும், அறையளவு என்று கேள்விப்பட்ட கணினி மடியளவு ஆனதையும், ஊருக்கு ஒன்றே அதிகமென்றிருந்த தொலைபேசி பைக்குள் இரண்டு என ஆனதையும், நூல்வலைப்பையில் இருந்த நூல்கள் உலகவலையமைப்புக்குள் சென்றதையும், கல்லும் குழியுமென்றிருந்த பெருந்தெருக்கள் விமானவீதிகள் போலானதையும் கூட அது நினைவூட்டிற்று.

சோசலிசக் கனவு கலைந்ததையும், உலகவல்லரசு இரண்டல்ல; ஒன்றே என்றானதையும், பெரும் புரட்சிகள் வென்றும் தோற்றும் முடிந்து போனதையும், மன்டேலாவும் காஸ்ரோவும் சரித்திரமாகிவிட்டதையும், இன்னும் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டதையும் நினைவூட்டினாலும் கலாசாரங்கள் உலகமயமாகலில் மருவி காலங்கள் கெட்டு கலியாகியபின்னும் கிராமத்து மெட்டிலிருந்து சிம்பொனியின் ஒலிதாண்டிய இளையராஜாவின் இசை மட்டும் இன்னும் தருகிறது வாழ்க்கை.