Exposure visits · Society · South Africa

உபுன்டு (Ubuntu)

DSCN1293.JPGதென்னாபிரிக்காவின் பழமையான மொழிகளிலொன்றான சூலு (Zulu) மொழியில் மனிதகுலத்தைக் குறிப்பதான உபுன்டு (Ubuntu) என்ற சொல் உள்ளது. இந்தச் சொல்லுக்கு ஆதி ஆபிரிக்க மக்களின் வாழ்வியலை அடியொற்றியதான, ‘முழு மனிதகுலத்தையும் பகிர்வினூடாக இணைத்தல்’ என்றவாறான தத்துவார்த்த பொருட்கோடலும் உண்டு.  ஆங்கிலத்தில் அதற்கு “I am because we are” என்ற கவிதை நயத்துடனான மொழிபெயர்ப்பு தரப்படுகையில் “எம்மால்  நான்” என அதனை மொழிபெயர்ப்பின் தவறாகாது எனக் கருதுகிறேன். அதற்குக் காரணமுள்ளது:

ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளையை இன்னொரு தாய் எந்தச் சங்கடங்களுமின்றி, கடைத்தெருவுக்கு அனுப்பவும் அந்தப்பிள்ளை வேறொருவீட்டில் உண்டு, உறங்கவும் செய்வது ஆபிரிக்க சமூகங்களில் சாதாரண நிகழ்வுகளாக உள்ளது வியப்பைத் தரலாம் (யுத்தம் எம்மை அலைக்கழிக்குமுன்னர் நெருங்கிய உறவினருக்கிடையில் சிறு பிராயத்தினர் இப்படியாக இருந்த சந்தர்ப்பங்கள் சிலருக்கு நினைவிருக்கக்கூடும்). ஆபிரிக்க சமூகங்கள் மிக ஆழமான சமூகப்பிணைப்பைக் கொண்டவை. நகரப்புறங்களில் இன்று வாழ்வுமுறை பெரிதும் மாறிவிட்டபோதும் கிராமங்களில் அந்த உன்னத ஆதிவாழ்வியலின் தடயங்கள் காணப்படுகின்றன.

இந்தச் சமூகப் பிணைப்பை மையமாகக்கொண்டு யுத்தம்,  மற்றும் HIV AIDS இனால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் நோக்கில் செயற்படும் நிறுவனம் ஒன்று, கிராமத்தின் மத்தியில் பிள்ளைப்பராமரிப்பு விடுதியை அமைத்து அக்கிராமத்து அன்னையருக்கும் தந்தையருக்கும் சகோதரர்களுக்கும் அப்பிள்ளைகளை உறவுகளாக்கிச் செயற்படுவது உன்னதமான சிந்தனை. எமது நாட்டில் அத்தகைய குழந்தைகள் கிராமத்துக்கு வெளியே உயர்ந்த மதில்களுக்குள் அகப்பட்டு அனாதைகளாகவே இருந்துவிடுவது முற்றிலும் முரண்பட்ட நிலை.

வடக்கு, கிழக்கில், பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சமூகப் பிணைப்புகளை யுத்தம் அறுத்துவிட்டது. எல்லாரும் எல்லாரையும் அறிந்துவைத்திருந்த கிராமிய வாழ்வு, இடப்பெயர்வுகளுடன் மறைந்துவிட்டது. வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வேற்றமைகளைக்கூட உணராமல் கிராமங்களில் மகிழ்ச்சியாக ஓடியாடித்திரிந்த வாழ்க்கை இல்லாமற்போனதற்கு அயலவர்கள் மீதான நம்பிக்கையீனம் ஒரு பிரதான காரணி.

இதற்கு விடுதலை இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள் அதிக பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. நாட்டில் யுத்த நிலை இருந்தபோது அடுத்தவீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருப்பவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அவர்கள் எதேனும் இயக்கத்தின் உளவாளிகளோ அல்லது இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவரோ என்ற சந்தேகம் எமக்குள் ஆழமாக இருந்தது. யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகின்றபோதிலும்கூட மற்றவர்மட்டிலான இத்தகைய ஆழமான சந்தேகங்கள் எம்முள் இருக்கத்தான் செய்கின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய பரவலான செய்திகளால் இன்று பிள்ளைகளை இன்னொரு வீட்டுக்கு விளையாட அனுமதித்துவிட்டு பெற்றோர் மனநிம்மதியுடன் இருக்கும் நிலை காணப்படவில்லை. மாற்றீடாக, தொலைக்காட்சி மற்றும் இணையவழிப் பொழுதுபோக்குகளுள் அகப்பட்டு பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.

சமூகம் இவ்வாறாக சின்னபின்னப்பட்டுக் கிடக்கையில் சமூகஆர்வலர்களின் கடமை-பொறுப்புகள் எவை என்பது பற்றிய தீர்க்கமான உரையாடல் நடைபெறவேண்டியுள்ளது.

யுத்தத்தால் இழந்த உயிர், கல்வி, உடைமைகளைவிட ஒருதேசமாக நாம் இழந்துவிட்ட அயலான் மட்டிலான நம்பிக்கை மிக அதிகமான பெறுமதிமிக்கது.

இந்த நிலைக்கு ஏதோ வழிகளில் நாமும் காரணமாகிவிட்டோம். பாவங்களைக் கழுவும் பொறுப்பும் எம்மதே.

 

Society · South Africa

தண்ணீர், தண்ணீர்

Cape Town , South Africa 20180501 (2)தென்னாபிரிக்காவின் கேப் டவுன் (Cape Town) நகரம் மிக மோசமான நீர்த்தட்டுப்பாட்டை அனுபவித்துக்கொண்டிருப்பதை உலக விடயங்களிலும் கவனம் செலுத்துபவர்கள் அறிந்திருப்பீர்கள். ‘எமது பிரச்சினைகளே அதிகம் இருக்க, உலக விடயங்கள் நமக்கெதற்கு’ என்பவர்களுக்காக இந்தப் பத்தி.

அண்மையில் தென்னாபிரிக்கா சென்றிருந்தபோது கேப் டவுன் நகரிலும் தங்கவேண்டி இருந்தது. நான் தங்கிய விடுதி உரிமையாளர் விடுதியின் சிறிய பகுதியொன்றை ஒதுக்கித்தந்துவிட்டு ‘நீர்ப்பிரச்சினையால் நல்ல அறைகளைத் தரமுடியவில்லை’ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டார். நீர்த்தட்டுப்பாட்டைப்பற்றி முன்னமேயே நான் அறிந்திருந்தபடியால், உல்லாசப்பயணத்துறையின் பாதிப்புப்பற்றி அவருடன் உரையாட முடிந்ததுடன் அவ்விடுதியின் பெரும்பாலான பகுதிகள் பாழடைந்ததுபோலக் காணப்பட்டதை அவதானிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தது.

தென்துருவத்திலிருந்து பனிப்பாறைகளை இழுத்துவந்து உருகவைத்து நீரைப் பயன்படுத்துவதுபற்றிக்கூட அங்கு நிபுணர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்!

நான் எம்மைப்பற்றிச் சிந்தித்தேன்.

தீவுப்பகுதியொன்றில் ஒரு வயதானவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது “‘மற்றவர்களுக்கு’ முன்பு சிரட்டையில் தான் நாம் தண்ணீர் கொடுப்போம்; இன்று எமக்கும் அதேநிலை” என்று ‘கர்மவினை’ பற்றிக் கூறினார்.

அன்றாடம் நாம் எவ்வளவு நீரை விரையம் செய்கிறோம்? எமது மழைநீர் நிலத்துள் செல்லவிடாமல் முற்றத்துக்கு கற்களைப் பதித்து தடுத்துவிடுகிறோம். கஞ்சல் கூட்டுவதற்குச் சிரமம் என்றும் குரங்குகள் வருகின்றன என்றும் மரங்களை வெட்டி இயற்கையின் நீர்சுற்றை அறுத்துவிடுகிறோம்.

நீர்சுத்திகரிப்புக் கருவிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை அக்கறையின்றியோ அல்லது அறிவீனம் காரணமாகவோ சூழலை மாசடையும் வகையில் வெளியேற்றிவருகிறோம்.

இன, மத, சாதி ரீதியாக மட்டுமன்றி, மாவட்டரீதியாகக்கூட நீர்வளப்பகிர்வுபற்றி நாம் வேற்றுமை பாராட்டி ஒருவருக்கொருவர் குழிபறித்துக்கொள்கிறோம்.

அது போதாதென்று, வரட்சியால் பொதுமக்களின் பயிர்கள் வாடி அவர்களின் வாழ்வையே கேள்விக்குள்ளாக்கும்போது எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர், அவர்களின் வள மேலாதிக்கத்தைப் பயன்படுத்தி, இருக்கும் ஒருசில நீர்நிலைகளிலிருந்தும் நீரை உறிஞ்சி தமது தோட்டங்களை அழகு படுத்துவதுடன் பயிர்செய்கைகளூடாக மக்களுக்கேதிரான அநியாயமான வியாபாரப் போட்டியிலும் ஈடுபடுகிறார்கள்.

70களில் மேனாட்டு உல்லாசப்பயணிகள் நீர்ப்போத்தலைப் பணம்செலுத்தி வாங்கிப் பயன்படுத்துவதைக் கண்டபோது ஆச்சரியப்பட்டுப்பார்த்த எமக்கு இன்று அது சர்வசாதாரணமாகிவிட்டதுமட்டுமன்றி நாமும் அதையே செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். எவ்வித தயக்கமுமின்றி கிணற்றிலிருந்து வாளியால் அள்ளி அருந்திய வாழ்வின் கொடையான நீர் இன்று விவசாய இரசாயன பாவனையால் மாசடைந்துபோய் அதே விவசாயிகளுக்கும் ஏனையோருக்கும் நிரந்தர நோயை ஏற்படுத்தும் சாபமாக மாறிவிட்டது.

தென்னாபிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் நிலைமைகளை அவதானிக்கும்போது எமக்கு இது ஆரம்பம் மட்டுமே என்றே தோன்றுகிறது.

Cape Town , South Africa 20180501கேப் டவுன் நகரில் பொது நீர்குழாய்கள் இருக்கும் இடங்களில் பல பூட்டப்பட்டுக் காணப்படுகின்றன. திறந்திருக்கும் ஒருசில குழாய்கள் மருந்து தெளிக்கும் கருவிகளைப்போன்று மிகச்சிறிய துணிக்கைகளாக நீரை விசிறும் வண்ணம்  மாற்றியமைக்கப்பட்டுள்ளன. கைகளைச் சுத்திகரித்துக்கொள்வதற்காக நீரற்ற முறைகளைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இம்முறைகள் போதுமானவைகளாக இருப்பதுவும் கண்கூடு.

இயற்கை வளங்கள் பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. அவற்றை எல்லையிட்டு உரிமைகொண்டாடுவது நவீன மனிதனின் பேராசை மனப்பாங்கிலிருந்து வந்தது. இன, மத, சாதிக்கட்டமைப்புகளூடாக வளச்சுரண்டலும் மேலாதிக்க மனப்பாங்கும் வலுப்படுத்தப்படுகிறது.

நீர் உயிரினங்களின் அத்தியாவசியத் தேவை மட்டுமல்ல; அது ஒரு மனித உரிமையும் கூட. அந்த உரிமையை எமது செயற்பாடுகளால் மற்றவர்களுக்கு மறுப்பது வன்முறை. விரையம் செய்வதும் மாசுபடுத்துவதும் குற்றங்கள். கண்டும் கணாமல் இருப்பது குற்றத்தை ஆதரித்தல் ஆகும். அலட்சிய மனப்பாங்குடன் குறுகியகால பொருளாதார வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுவது, ‘கர்மவினையை’ அடுத்த சந்ததிக்குக் கடத்தும் முயற்சியில் வெற்றிபெறுவதற்கு மட்டுமே உதவும் என்பதில் ஐயமில்லை.