life · politics · Society

நினைவுகள் மறக்க…

90களின் ஆரம்பத்தில், வல்வெட்டித்துறையைச் சொந்த ஊராகக் கொண்டிருந்த ஒரு இளைஞர் கடல்சார் பொறியியல் கற்பதற்காக மட்டக்குளி காக்கைதீவில் இருந்த கடலோடிகளுக்கான கல்லூரியில் படித்தும், இறுதிப் பரீட்சையில் தேற விடாமல் தடக்கி விழுத்தப்பட்டதை என்னிடம் சொல்லி நொந்துகொண்டார். தங்களைச் சேர்ந்தவர்களிடம் படிக்க வரவில்லை என்பதற்காக என்னையும் அவ்வாறு தடக்கி விழுத்தினபிறகு, அதே கல்லூரியில் பயின்ற சிங்கள நண்பர்களைச் சந்திக்கப்போன என்னை ‘நீ ஏன் எனது மாணவர்களுடன் கதைக்க வருகிறாய்’ என்று ஒரு Perera என்னைத் திட்டி வெளியே துரத்தியதை நான் மறக்க முடியாது.

கொழும்பில் மட்டுமன்றி, வன்னியிலும் electronics போன்ற தொழில்நுட்ப விடயங்கள் ‘எங்களைச் சார்ந்தவர்களில்லை’ என்ற தரப்பினருக்கு விலக்கி அல்லது மட்டுப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த காலங்கள், யாழ்ப்பாண விமானக் கண்காட்சி பற்றிய செய்திகளைப் படித்தபோது நினைவு வருகின்றன.

6-7 வயதில், கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் என்று நினைக்கிறேன் – தூறல் மழையில் இத்தகைய ஒரு கண்காட்சிக்கு அம்மாவுடன் போய் MIG பார்த்தது எனக்கு இன்றுபோல் நினைவிலுள்ளது. அங்கு பரிசோதனை ரீதியிலான அந்தநாளைய தொழில்நுட்பத்திலான CCTV போன்ற ஒரு விஷயமும்கூட வைத்திருந்தார்கள். ஒரு தொழில்நுட்ப பிரியனின் கனவு உலகமாக அது அன்று என்னை ஈர்த்திருந்தது உண்மைதான். இன்று இவர்களிடம் போய் எதையும் படிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லாமற்போய்விட்டாலும் இத்தகைய கண்காட்சிகள் நல்ல விஷயங்கள்தான். அவர்கள் நடத்தும் முன்பள்ளிகள்போல, அடுத்த தலைமுறையின் நினைவுகளை மறக்கப்பண்ணுவதற்கான நிகழ்வுகளாக இருந்தாலும்கூட, பல குழந்தைகளுக்கு இவை வாழ்க்கையின் திருப்புமுனைகளாகக்கூட அமையலாம் என்பதை மறுக்க முடியாது.

பேச்சுவார்த்தைக்காக அரச தூதுக்குழு யாழ்ப்பாணம் வந்த ஹெலிகொப்டரை மக்கள் பார்க்க ஓடியதைச் சகிக்க முடியாத அன்ரன் பாலசிங்கம் அவர்கள், ‘குண்டு போடேக்க ஓடி ஒழியுங்கோ; இப்ப வந்து கொஞ்சுங்கோ’ என்றவாறாக சபித்துக்கொட்டியதும் ஒரு சம்பவம்.

என் மனதில் ஒரே ஒரு கேள்விதான்: விமானத் தாக்குதல்களில் தமது பிள்ளைகளைப் பலிகொடுத்த ஒரு வடபகுதி தாயின்/ தந்தையின் மனோநிலை இன்று எப்படியிருக்கும்?

life · politics · Society

ஆடையும் கோலமும்!

மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்குப் போக உடுத்துவது எப்படி என்று எழுதப்படாத விதிகளை சமூகம் வைத்திருக்கிறது. சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட, மகப்பேற்றுக்குப்போக என்ன உடுத்தவேண்டும் என்பதை வைத்தியர்கள் சொல்வார்கள். பாடசாலைக்கு என்ன உடுத்தவேண்டுமென்று ஆசிரியர்களும், அதிபரும் தீர்மானிப்பர். நீதிமன்றத்துக்கு எப்படிப் போகவேண்டுமென்று ‘கனம் கோட்டார் அவர்கள்’ தீர்மானிப்பார். நீச்சல் தடாகத்தில் இறங்க என்ன உடுத்தவேண்டுமென்று விடுதி நிர்வாகம் தீர்மானிக்கும். ராஜதந்திரிகளின் வைபவங்களுக்குப் போக இப்படித்தான் வரவேண்டுமென்று அழைப்பிதழிலேயே சொல்லிவிடுவார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு dress code உண்டு. ‘முடியாது; நான் இப்படித்தான் வருவேன்’ என்று அடம்பிடித்தால், சூழ்நிலை கடிக்கும்!

‘ஆடை பாதி; ஆள் பாதி’ என்று சொல்வதனால் பாதி உடையில் சுற்றித்திரியக் கூடாது. வாழும் சமூகத்துக்கும் போகும் இடத்துக்கும் ஏற்றாற்போல ஆடை அணியத் தெரிந்துகொள்வது பகுத்தறிவுப் பண்பு.

நீதிமன்ற வளாகத்துள் நின்று அவதானித்தால் யார் சாட்சிக்கூண்டில் ஏறுவார்கள்; யார் குற்றவாளிக்கூண்டில் ஏறுவார்கள் என்பதை ஆடை, அபிநயங்களைவைத்து முன்கூட்டியே ஓரளவு கணித்துவிடலாம். ஆனாலும், ஆடை நாகரிகத்தின் உச்சத்தைக் காட்டுவதாகவோ, ஒழுக்கத்தின் உன்னதத்தைக் குறிப்பதாகவோ எடுத்துக்கொள்ள முடியாது – எதிர்மாறான உதாரணங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.

ஆப்கான், ஈரான் பெண்கள் தலையை மூடபண்ணி அடக்கப்படுகிறார்கள் என்று போராடிய பெண்ணியச் செயற்பாட்டாளர்களின் போராட்டத்துக்குப் பின்னால் அமெரிக்க நிதியனுசரணை இருந்தது. அந்தப் போராட்டங்களால் ஆட்சிகளைக் கவிழ்க்க முடியாமற்போன பிறகு, சிலருக்கு (அதிகம் சத்தம் போடக்கூடியவர்கள்?) அமெரிக்க வதிவிட உரிமை கொடுபட, மற்றவர்களை கைவிட்டு இன்று மறந்தும்போய்விட்டது அமெரிக்கா. அதே நிதியனுசரணை இன்று காசாவில் பெண்கள், குழந்தைகள் சகட்டுமேனிக்கு கொல்லப்பட உதவுகிறது என்பது இவர்களின் பெண் விடுதலைப் போராட்டத்தின் பின்னாலுள்ள அபத்தம்.

இலங்கையிலும், இந்தச் சமூகப் புரட்டலாளர்களுக்குப் பின்னால் யாருடைய நிதியனுசரணை இருக்கிறது என்று பார்த்தால் விஷயம் வெளிக்கும். எனக்கு என்னவோ, வானவில் காலாசாரப் போராட்டங்கள்போல, சில சம்பவங்கள் வேண்டுமென்றே நடத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது. இந்த மோசடிக்காரர்களிடமிருந்து எமது சிறுவர் சிறுமியரைப் பாதுகாக்கவேண்டுமானால், விரும்பியோ விரும்பாமலோ, மதங்களின் துணையைத்தான் நாங்கள் நாடவேண்டியிருக்கும் என்றுபடுகிறது.

30 வெள்ளிக்கு காட்டிக்கொடுக்கிறவர்கள் இந்தக்காலத்திலும் இருக்கிறார்கள்…

life · politics · Society

கொத்துரொட்டிகள்!

Dr. Naomal Balasuriya.

2000களின் நடுப்பகுதியில் அவரின் மனிதவள முகாமைத்துவ மாணவனாக இருந்தேன். MBBS வைத்தியராகப் பட்டம் பெற்றிருந்தும் அந்தத் தொழிலை வீசியெறிந்துவிட்டு MBA பட்டம் பெற்று அந்தப் பாட நெறிகளில் விரிவுரையாளராகத் தொழில் செய்தார். Success Factory பற்றி அன்றே பேசினார். பல்வேறு துறைகளில் ஆழமான அறிவுகொண்டவராக இருந்த அவர், ஒரு calligraphy விற்பன்னரும்கூட.. அந்தச் சொல்லை அவராலேயே நான் அறிய நேரிட்டது. மிகவும் பணவசதி படைத்தவர்கள் தமது வைபவங்களுக்கு அவரின் கைகளால் வரவேற்புமடல் எழுதுவித்துக்கொண்டார்கள்! தன்னுடைய மனைவி தன்னை ஒரு பைத்தியம் என்பார் என்று சொல்லிச் சிரிப்பார். மற்றவர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஆழமான மனிதர்களுக்கு கிடைக்கும் பட்டம் அவருக்கும் கிடைத்திருந்ததுபோலும்.

அற்புதமான புத்தாக்கச் சிந்தனையாளரான அவர், எங்களுக்கு கணினியே புதிதாயிருந்த அன்றைய காலத்தில் யாரும் யோசித்திராத இணையவழி வர்த்தக கருத்துகளை மிகச் சரளமாகச் சொல்லிவிட்டு ‘இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்பார். இன்று நடைபெறும் பல வர்த்தக நடவடிக்கைகள் ஒருவேளை, அவரின் சிந்தனையின் நேரடி அல்லது மறைமுக செல்வாக்குக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களினால் உருவானவையோ என்று நான் நினைப்பதுண்டு. எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததுபோலவே என்னையும் அவருக்குப் பிடித்திருந்தது. வகுப்பில் எதையோ எழுதிக்கொண்டிருந்த என்னருகில் வந்து ‘Godfrey, you are very good’ என்று சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தந்திருந்தது.

எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் மனமுவந்த பாராட்டுபோன்று உலகில் வேறு என்ன இருக்கமுடியும்?

பிரபல ‘சமூகநல’ பிரகிருதிகளின் தில்லுமுல்லுகளையும் அரசியல்வாதிகளின் அபத்தங்களையும் அறிந்துவைத்திருந்த சராசரி மனிதராகவும் இருந்த அவர், வாய் திறந்தால் சிலேடையும்  நகைச்சுவையும் உதிரும். அவரின் அத்தகைய நகைச்சுவைக் கருத்து ஒன்று வெறுமனே சத்தம்போடும் அன்றைய அரசியல்வாதி ஒருவரைப் பற்றியதாயிருந்தது: ‘அவர் ஒரு கொத்துரொட்டி’ என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இன்றைய அரபு நாடுகளை அவதானிக்கும்போது அவரின் கதை எனக்கு நினைவு வந்தது.

வெறும் கொத்துரொட்டிகள்: “lot of noise; very little substance!”

Uncategorized

Carboard Heroes

‘எங்களுடைய வீடு யுக்கிரேனிய ஷெல் தாக்குதலுக்குள்ளானதை என்னுடைய 3 வயது மகள் கண்டாள். அதற்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள் அப்பா என்று அவள் கேட்டாள். இதோ, என்னுடைய மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக நான் போர்க்களத்தில் நிற்கிறேன்’ என்று ஒரு கிழக்கு யுக்கிரேனின் ருஸ்ய அப்பா சொன்னதைக் கேட்டேன்.

80களின் நடுப்பகுதியிலிருந்து புலிகளின் போராளிகள், தளபதிகள் உட்பட பல்வேறு போராட்டக் குழுக்களினதும் இராணுவ, பொலிஸ் படைகளைச் சேர்ந்தவர்களினதும் உறுப்பினர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுமளவுக்கு சில கணங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். தமது தரப்பின் நன்மைக்காக கொல்லவும் சாகவும் தயாராகவிருந்த அவர்களின் மனங்களின் மறுபக்கத்தில் இருந்த மென்மையையும், சமயங்களில் கண்களினோரம் ஈரக்கசிவையும் பார்த்திருக்கிறேன்.

களத்தில் வீழ்ந்து கிடக்கிற போர்வீரனின் கண்களிலிருக்கும் வெறுமையைக் கண்ட எந்தத் தளபதியும் யுத்தத்தை விரும்ப மாட்டான் என்று சொல்வார்கள். எல்லாத் தரப்புகளிலும் கொலைபாதகர்கள் இருந்தார்கள் என்பது உண்மையானாலும் உண்மையான வீரர்கள் வாழ்க்கையின்பாலும் உலகின்மேலும் ஆசைகொண்ட இயல்பான மனிதர்கள்தாம். அவர்கள் மறுதரப்பினரை அழிக்க முயற்சிப்பது அவர்கள் மேலுள்ள வெறுப்பால் என்பதைவிட தமது தரப்பின்மீதுள்ள அன்பால் என்றே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இத்தகைய எதிரிகள் மறுதரப்பினரின் துன்பத்தைப் புரிந்துகொள்ளும்போது மீளிணக்கத்துக்கான வழி ஏற்படுகிறது. ஆனால் அதற்குத் தடையாக இருக்கிறவர்கள் தாம் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்துகொண்டு பேரிழப்புகளைச் சந்தித்தவர்களின் கண்ணீரைத் தூண்டிவிட்டு, அவர்களின் துன்பத்துக்குத் தூபம் போட்டு குளிர்காயும் தற்காலிக  தேசியவாதிகள் – மனித உரிமை ஆர்வலர்கள் – நாட்டுப்பற்றாளர்கள் – மற்றும் முகநூலின் அட்டைத்தாள் வீரர்கள். எனவேதான் உண்மையானவர்களுக்கான நினைவுகூரல்களில் இத்தகையோர் தமது அரசியல் முதலீடுகளைப் போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மக்களின் கடமையாகிறது.

85/86 ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பாடலின்பால் எனது விசேட கவனத்தைச் ஈர்த்தவர் TELO இயக்கப் போராளி ஒருவர். அவர் இருக்கிறாரா, கொல்லப்பட்டாரா என்று தெரியாது. பலர் இருந்த அந்த இடத்தில் ‘இந்தப் பாடலின் சரணங்கள் எவ்வளவு smoothஆக போகின்றன என்று கேளும்’ என்று என்னிடம் வந்து ஏன் சொன்னார் என்பது ஆச்சரியம்தான். இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரசனையுடன் மின்னிய அந்த கண்கள் எனக்கு நினைவு வரும். அதேபோல, அக்காலகட்டத்தில் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் தம்மிடையே ‘பாடு நிலாவே’ பாடலை மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி இரசித்து மகிழ்ந்ததும் நினைவு வருகிறது. சுத்த வீரர்கள் எதிரிகளை மதிக்கிறவர்களாகவும் மென்மையான இதயம் படைத்தவர்களாகவும் இருப்பதைத்தான் நான் பார்த்திருக்கிறேன்.
முகநூலில் மிரட்டுகிறவர்கள் cardboard heroes!

பாடல்: பெண்மானே சங்கீதம் பாடிவா (நான் சிவப்பு மனிதன்)

https://www.youtube.com/watch?v=PkOJbNhDfsM

politics · Society

திரு. சுந்தரம் திவகலாலா

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணிபுரிந்த நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் செயற்பாடு தொடர்பாக அவர் நடத்திய ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதிநிதியாக அவரை முதல் முறையாகச் சந்திக்கவேண்டி இருந்தது. அது பின்னர் ஒரு நட்பாக பரிணமிக்க, வேலைத் திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் யாழ்ப்பாணம் போகும்போது இடையிடையே சந்திப்பதும் தொலைபேசியில் பேசுவதுமுண்டு.

கல்வி, அனுபவம், வயது அனைத்திலும் நான் சிறியவனாக இருந்தபோதும் சமனாக இருத்திவைத்து பேசிக்கொண்டிருப்பார். சில சமயங்களில் ‘டேய்; தம்பி’ என்று அவர் ஒருமையில் அழைப்பதில் உரிமையும் வாஞ்சையும் தொனிப்பதை அவதானித்திருக்கிறேன். இலங்கையின் கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், அவர்களில் பெரும்பாலானவர்களின் ‘ஒருபக்க’ உரையாடல்கள்போலன்றி, தனது கருத்துகளை முன்வைத்து ‘தம்பி, நீ என்ன நினைக்கிறாய்’ என்று அபிப்பிராயம் கேட்பார். வேறு அலுவலாக அவரின் அலுவலகத்துக்குச் செல்லும்போது கண்டாலும், சில நிமிடங்களாவது இருத்திவைத்துப் பேசாமல் விடமாட்டார். தொலைபேசியில் அழைத்து ‘பேசவேணும்; நேரமிருக்கா’ என்று கேட்டுவிட்டு பேசும் பண்புள்ளவர்.

அவரின் பேச்சில் இருக்கும் நகைச்சுவை இழையோடிய துடுக்குத்தனம் என்னை அதிகம் கவர்ந்தது.

ஒரு முறை ‘என்ன வேலைத்திட்டங்கள் நடக்குது; நாங்கள் ஏதாவது சேர்ந்து செய்யலாமா?’ என்று கேட்டபோது, அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் இன்னொரு செயற்பாடாக இருந்த ‘பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கூட்டுதல்’ என்று ஏதோ செய்யினம்’ என்று நான் சொல்ல, ‘அது சரிவராது; அத விடு; வேற?’ என்று அவர் கேட்டவிதத்தை நினைத்து நான் இப்போதும் எனக்குள் சிரிப்பதுண்டு. அந்த விடயத்தை யார் எப்போது பேசினாலும் அது எனக்கு அவரை நினைவூட்டியது!
அரசியல், நாட்டுநடப்பு, சமூகச் செயற்பாடுகள் பற்றியன்றி வேறு எதுபற்றியும் அவர் அதிகம் என்னிடம் பேசியதாக நினைவில்லை. ஒரு சாதாரண சமூக செயற்பாட்டாளராக அப்படிப் பேசுகிறார் என்று நான் நினைத்தது தவறென்பதும் அது அவரின் ஆன்மாவுடன் ஒன்றியது என்பதே சரி என்பதும் அண்மைய நாட்களில் அவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இருந்த தருணத்தில் போர், மக்களின் இழப்புகள், உரிமைப்போராட்டம் திசைமாறித் தோல்விகண்டமை பற்றி கண்கள் பனிக்கப் பேசியதைக் கண்டதும்தான் புரிந்தது.

தை 3ஆம் திகதி அவரை நான் அவரின் நீண்டகால நண்பருடன் இறுதியாகப் பார்த்தபோது, சில சொற்கள் எனக்குத் தெளிவாக விழங்காமற்போகவே, இயல்பான துடுக்குத்தனத்துடன் சிரித்தபடியே ‘ஞானசூனியம்’ என்று கிண்டல் செய்தார். உடலின் இயலாமையை ஓர்மம் மிக்க மனம் இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததில் விளைந்த கோபம் அப்படி வெளிப்பட்டிருந்தது என்று எனக்குத் தோன்றியது.
அன்று அவர் இறுதியாகச் சொன்னதும் ‘இவங்கள் எல்லாரும் திசை மாறிப் போறாங்கள்; ஒருக்கால் சந்திச்சுக் கதைப்பமா?’

Uncategorized

பழிக்குப் பழி

Charles Anthony (சீலன்) 1983இல் இராணுவத்தால் மீசாலையில் வைத்து கொல்லப்பட்டபோது புலிகள் ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்கள். அதில் ‘உன்னுடைய இழப்புக்கு நாம் பழிவாங்கியே தீருவோம்’ என்றிருந்தது.

ராஜரட்னம் ஜெயசந்திரன் (பார்த்தன்) 1984இல் திருகோணமலையில் இராணுவத்தால் கொல்லப்பட்டபோது தமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தினரால் ஒரு துண்டுப்பிரசுரம் (அல்லது வானொலி அறிக்கை – சரியாக நினைவில்லை) வெளியிடப்பட்டது. அதில் ‘ஒரு போராளியின் இழப்புக்கு பல சிப்பாய்களின் உயிர்களால் ஈடுசெய்ய முடியாது; எனவே நாம் பழிக்குப்பழி வாங்கப்போவதில்லை’ என்றிருந்தது. 2003இல் உதய் ஹுசெய்ன், குசெய் ஹுசெய்ன் ஆகியோர் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டபோது ‘எனக்கு இன்னும் நூறு மகன்கள் இருந்தாலும் அவர்களையும் இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்யத் தயங்கமாட்டேன்’ என்றார் சதாம் ஹுசெய்ன்.

20.08.2022 அன்று Darya Dugina கொல்லப்பட்டதற்கு அவரின் தந்தை Alexander Gelyevich Dugin செய்தி ஒன்றை வெளியிட்டார் (ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு – நான்).

எம்மில் மிகச் சிறந்தவர்களையும் மென்மையானவர்களையும் பயங்கரவாதத்தால் அழித்து எங்கள் மனவலிமையை உடைக்க அவர்கள்  முயல்கிறார்கள். ஆனால் அது நடக்காது. பழிக்குப் பழி என்பது மிகச்சாதாரணமானது – அது ரஷ்யர்களின் வழியல்ல. அதனைவிடவும் மேலான ஒன்றுக்காக எங்கள் இதயங்கள் ஏங்குகின்றன. வெற்றி மட்டுமே எங்களுக்கு வேண்டும். எனது மகள் தனது கன்னி வாழ்க்கையை அந்தப் பலிபீடத்திலேயே அர்ப்பணித்தாள். எனவே, தயவுசெய்து வெற்றியுடன் வாருங்கள்.

அடிப்படை மனித உணர்வு பழிவாங்குவது. அதை வெல்வது இலகுவானதல்ல. அதிலும், தனிமனித இழப்புகளின்போது பரந்த மனத்துடன் நடந்துகொள்வது எவ்வளவு உன்னதமான குணாம்சம்!

Uncategorized

வேற்றுமையே அழகு

தூய்மையானது என்று இங்கு எதுவுமில்லை. நாம் பொதுவாகப் பேசும்/ எழுதும் தமிழ்மொழிகூட தூய்மையானதல்ல. சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலிருந்து சொற்களை அடிக்கடி கடன்வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆங்கிலக் கலப்பை இலகுவாகக் கண்டறிந்துகொள்ள முடிந்தாலும் சமஸ்கிருதத்தை வேறுபடுத்தி அறிவதில் சராசரி மொழி அறிவு உள்ளவர்களால் முடியாதுள்ளது.

இந்தப் பதிவில் உள்ள சொற்களில் தூய தமிழ்ச் சொற்கள் எத்தனை என்று எனக்கும் தெரியாது!

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களூடாகவும் சில கலப்படங்களுக்கு தமிழ்மொழி உள்ளாகியிருக்கிறது. இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து பல வருடங்களாக ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களுடன் உரையாடும்போது அந்த நாட்டு மொழிச் சொற்கள் அவர்களின் தமிழுடன் கலந்துவிட்டதால் இடையிடையே எமது காதுகளிலும் வீழ்கின்றன. போதாக்குறைக்கு இந்திய அரசின் உபயத்தில் இந்தியும் யாழ்ப்பாணத்துக்கு வந்துகொண்டிருக்கிறது. சில காலங்கள் போக யாழ்ப்பாணத்தில் தமிழுக்கும் சிங்களத்துக்குமிடையிலுள்ள தூரம் குறைந்து இன ஐக்கியம் வராவிட்டாலும்கூட மொழி ஐக்கியம் வந்துவிடலாம்!

எது எப்படியிருந்தாலும், பல விதமான மொழி, கலாசாரப் பண்புகள் கொண்ட மனிதர்களுடன் பழகுவது ஒரு அலாதியான அனுபவம். தமிழ் மொழி பேசும் வெவ்வேறு பிரதேசத்தவருடன் பழகுவதால் வித்தியாசமான ஒரு இரசனை கிடைப்பதாக நான் உணர்வதுண்டு.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மக்களின் பேச்சுவழக்கு வெவ்வேறானதாக இருந்தாலும் அவற்றில் ஒரு இசை இருக்கிறது. மட்டக்களப்புத் தமிழ் கிராமிய இசை என்றால் யாழ்ப்பாணத்துத் தமிழ் செவ்விசை. திருகோணமலை, மன்னார் பிரதேசங்களில் பேசப்படும் தமிழ், கவிஞர் ஒருவர் தனது கவிதையை வாசிப்பது போன்றது. ஏற்றத்தாழ்வுகளும் முறிப்புகளும் ஆங்காங்கே இருக்கும். மலையகத்தில் பேசப்படும் தமிழ் கரடுமுரடான பாறைகளில் முட்டிமோதிச் சிதறும் நீரோட்டம் போன்றது. இனிமை இல்லாதபோதும் இரக்கத்தை வரவழைக்கிறது – பாவம் அந்தத் தண்ணீர்! வவுனியாத் தமிழ் வந்தேறு குடிகளுடையது. மென்மையைவிட நேரடியாக விஷயத்துக்கு வரும் தொழில் முறை ஒழுக்கம் கொண்டது. இதற்கப்பால் இல்லை என்னுமளவுக்கு இயல்பிலேயே நகைச்சுவை உணர்வைத் தருவது சோனகர் பேசும் தமிழ்!

முதன்முதல் நான் பழகிய அவ்வப்பிரதேச மனிதர்கள் பேசிய மொழிவழக்கு, எனது யாழ்ப்பாணத்துப் பின்னணி என்பன இப்படியெல்லாம் எனது மனதில் பதிவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த விடயம் ஒரு முறையான ஆய்வுக்கு, அல்லது குறைந்தபட்சம், ஆவணப்படுத்தலுக்காவது உட்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படியில்லாவிட்டால் அது செய்யப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

போர், தொழில் காரணமான இடப்பெயர்வுகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் தாக்கம் என்பன காலப்போக்கில் இந்த வட்டார அல்லது பிரதேச வேறுபாடுகளை இல்லாதொழித்துவிடலாம். வேற்றுமைகளே அழகு. மனிதர்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருந்தால் சமூகம் RO filter இல் வரும் உயிரற்ற நீர் போன்றுதான் இருக்கும். செயற்கையான, அரசியல் உள்நோக்கங்கொண்ட திணிப்புகளையும் உரிமை மறுப்புகளையும் எதிர்க்கும் அதேநேரம், காலங்காலமாக இருக்கும் வேறுபாடுகளை இரசித்துப் பாதுகாப்போம்.

politics · Society

இலங்கையின் கடைசி சர்வாதிகாரி?

கோட்டாவைத் தப்பவிட்டதற்குப் பின்னால் ஏதோ ‘டீல்’ இருக்கிறது என்று பலரும் கருதிக்கொள்கிறார்கள். 80களில் பிரபாகரன், உமா மகேஸ்வரன் உள்ளிட்ட இயக்கத் தலைவர்கள் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் செய்துகொண்ட ‘டீல்’களைக்கூட நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. கோட்டா விடயத்தில் நடப்பவை அனைத்தையும் எம்மால் அறியமுடியும் என்று நான் நம்பவில்லை. ஆனாலும், கொதித்துக்கொண்டிருக்கும் சிங்கள மக்களின் கையில் சிக்காமல் கோட்டா தப்பியது ஒருவகையில் நல்லதுதான். சாவு ஒருநாளும் தண்டனையாகாது. அதனாலேயே பிரபாகரன் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார். இவ்வளவு தன்முனைப்பும் ஆணவமும் கொண்டு, கடவுளுக்கு அடுத்தபடி என்ற நிலையிலிருந்து பலரின் விதியைத் தீர்மானித்த ஒருவர் சிங்கள-பெளத்தத்தின் உத்தம மீட்பர் என்ற இடத்திலிருந்து கீழே வீழ்ந்த தூரம் கொஞ்சமல்ல. எமது வாழ்நாளில் இனிமேல் இப்படி யாருக்கும் நடக்கும் சாத்தியமில்லை. இதற்குமேல் தண்டனை என்று எதுவும் இருந்தால் அது சட்டச் சம்பிரதாயம் மட்டும்தான்.

கோட்டா பாதுகாப்பு செயலராக இருந்தபோது அவரைச் சந்தித்ததற்காக தங்களை உயர் குலம் போன்று பெருமைப்பட்டுக்கொண்டவர்களை நான் பார்த்திருக்கிறேன் – ‘தலைவருடன் தொடர்பிருக்கு’ என்றவர்கள் போலத்தான். யுத்தத்துக்குப் பின்பான காலத்தில் ‘பசிலைச் சந்தித்தோம்’ என்றும் ‘பசிலின் ஆள்’ என்றும் சொல்லிக்கொண்டு தமது திருட்டு வியாபாரங்களைச்  செய்த நம்மவர்களும் அப்படித்தான். சாமானியர்களுக்கு இது ஆள்மனதில் புதைந்துள்ள அடிமைச் சிந்தனையில் இருந்து வருவது. வியாபாரிகளுக்கு இது சுயநலமான வஞ்சனை நெஞ்சில் இருந்து வருவது. சாமானியர்களை அறிவூட்டலால் மாற்றலாம். அறிவூட்டப்பட்ட மக்கள்தான் வியாபாரிகளை மாற்ற முடியும். Steve Biko, Thomas Sankara போன்ற ஆபிரிக்க தலைவர்கள் மக்களிடமிருந்த அடிமைச் சிந்தனையை அகற்ற மிகவும் பாடுபட்டார்கள். எமது தலைவர்கள் அப்படிச் செய்வதில்லை. ஏனெனில் மக்களின் இந்த அடிமை மோகம், தாங்கள் செய்யக்கூடாததைச் செய்தாலும் செய்யவேண்டியதைச் செய்யாவிட்டாலும் ஏதோ பெரிய திட்டம் இருக்கும் என்பதுபோல மக்களை நினைக்கவைக்க அனுகூலமானது – ‘உள்ளுக்கு விட்டு மடக்கப்போறாங்கள்’ என்று நம்பவைத்ததுமாதிரி.

அதிகாரத்தை அபரிமிதமாகப் பாவித்து மற்றவர்களை அடக்குபவர்கள் எல்லாரும் அடி நெஞ்சில் கோழைகளே. அவர்கள் உண்மையை எதிர்கொள்ளப் பயப்படுவதாலேயே போலியாகத் துதிபாடும் தலையாட்டும் பொம்மை மனிதர்களை தம்மைச்சுற்றி வைத்துக்கொண்டு வீரர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள். தமக்குச் சமானமான அல்லது மேலான திறமையுள்ளவர்களை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்போது வஞ்சகமாகவேனும் அழித்துவிடத் தயங்காதவர்கள். fisheye lensஇல் படமெடுத்ததுபோல அனைத்தும் உண்மைக்குப் புறம்பான அளவுத்திட்டங்களில் அவர்களுக்குத் தெரியும். உலகம் தம்மைச் சுற்றி இயங்கவேண்டுமென்று இவர்கள் கனவு காண்கிறார்கள். இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருக்கிறதாகவும், நம்ப வேண்டியதை நம்ப மறுத்தும் நம்பக்கூடாததை நம்பிக்கொண்டும் இருப்பார்கள். இருந்தபோதும் தம்மைத் திறமைசாலிகளாக நினைத்துக்கொண்டு ‘நட்டுவனுக்கு நொட்டிக்காட்டேலாது’ என்பதாக வீறாப்புக்காட்டுவார்கள். அதுவே அவர்களின் அழிவுக்கு வித்திடுகிறது.  

கோட்டா மட்டுமன்றி, எம்மத்தியிலும் இருக்கும் இத்தகைய பேர்வழிகள் ஒருநாள் சட்டத்தின் கையில் சிக்கி, பிறகு விடுதலை அடைந்து, ஓய்வூதியம் பெறும் சாமானியர்களாக, சைக்கிளில் வந்து என்னுடன் மரக்கறி வாங்குவதை பார்க்க ஆசை.

அது நடக்குமா என்று தெரியவில்லை!

politics · Society

“GoHomeGota”

இது அண்மைக்காலம்வரை அவர்களின் அபிமானத்துக்குரியவராக இருந்த ஜனாதிபதிக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் இன்று முன்வைக்கும் கோஷம். ‘யுத்தம் செய்து நாட்டைக் காப்பாற்றியவர், யுத்தத்துக்குப் பிறகு கொழும்பை அழகு படுத்தியவர்; எனவே எம்மை நன்கு வாழ வைப்பார்’ என்று ஊடகங்களால் அளவுக்கு மிஞ்சி ஊதிப் பெருப்பிக்கப்பட்ட மாயத்தோற்றத்தை உண்மையென்று நம்பி பெரும்பான்மை வாக்களித்து பதவி கொடுத்த மக்கள், எரிவாயு இல்லை; மின்சாரம் இல்லை; எரிபொருள் இல்லை; சீனி இல்லை; பால்மா இல்லை; மருந்துகூட இல்லை என்ற காரணங்களால் ‘Sir fail’ என்று வெறுப்புற்று, சினங்கொண்டு ‘வீட்டுக்குப் போ’ என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ‘நட்டுவனுக்கு யாரும் நொட்டிக்காட்டேலாது’ என்று பிரபாகரனது மாயத் தோற்றத்தை தமிழ் மக்கள் முள்ளிவாய்கால்வரை நம்பி ஏமாந்ததும் இப்படியான ஒரு விடயம்தான் என்பது ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய பழைய கதை.

தென்னிலங்கையில் ஆரம்பித்த போராட்டங்கள் பொருட்களின் பற்றாக்குறை காரணமானது என்பது உண்மைதான். அந்த பொருளாதாரப் போராட்டம்தான் இன்று அரசியல் போராட்டமாக மாறியிருக்கிறது. இதில் தவறொன்றுமில்லை; தமிழ் மக்களின் போராட்டமும் உரிமைக்கான ஆயுதப்போராட்டமாக மாறியதற்கு யாழ்ப்பாணத்து இளைஞர்கள் தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டதே பிரதான காரணமானது. இந்தப் போராட்டம் ராஜபக்சக்கள் துரத்தப்படுவதுடன் மட்டுமின்றி அனைத்து பாரம்பரிய அரசியல்வாதிகளும் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்று சொல்லுமளவுக்கு பரிணாம வளர்ச்சியடைந்துவருகிறது. இந்த மாற்றம் நடைபெறும்வரை சிங்கள மக்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. இலங்கையின் சரித்திரத்தில் முதன்முதலாக நடைபெறும் மக்கள் போராட்டம் இது. அரசியல் கட்சிகளோ ஆயுதந்தரித்த அமைப்புகளோ பேருந்து ஒழுங்குசெய்து, சோற்றுப் பாசல் கொடுத்து ஒழுங்குசெய்த முன்னையை போராட்டங்கள் போலன்றி இது தன்னெழுச்சியானது. வென்றாலும் தோற்றாலும் இதுதான் போராட்டம் என்று இதனை நம்பலாம். வென்றால் அனைவருக்கும் நல்லது. தோற்றால் இதன் பின்விளைவுகளிலிருந்து சில தசாப்தங்களுக்கு நாம் தலையெடுக்க முடியாமல் போகலாம். தூரதிஷ்டவசமாக, வடக்கு கிழக்கு மக்கள் ‘இது சிங்கள மக்களின் போராட்டம்; அவர்கள் கொண்டுவந்த தலைவர்களுடன் அவர்களே பட்டுக்கொள்ளட்டும்’ என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. இதில் ஒருவித நியாயம் இல்லாமலுமில்லை. அவர்கள் பாற்சோறு உண்டகோபம் இங்கு பலருக்கு இன்னும் ஆறவில்லை.
பொருளாதாரப் பிரச்சினை தோன்றாமல் இருந்திருந்தால் – ‘இன்று இன மத வேற்றுமை எம்மிடமில்லை’ என்று போராட்டக்களத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்திருக்க மாட்டா; கோவிட் உடல்கள் எரிக்கப்படாமல் இருந்திருந்தால் சிங்கள இளைஞர்கள் ‘பாதுகாப்பு’ கொடுக்க முஸ்லிம்கள் நோன்பு துறந்திருக்க மாட்டார்கள்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட்டிருந்தால் ‘கர்தினால்’ இன்று கத்தோலிக்க மக்களை அமைதிக்காகப் பிரார்த்திக்குமாறு கோட்டா சார்பில் வேண்டியிருப்பார். இவர்களுக்கு வடக்கு-கிழக்கில் எமக்குப் பரிட்சயமான கறுப்பு உடை/ முகமூடி/ சப்பாத்துக்கால்களின் கனம் தெரியவந்திருக்காது. ‘உங்கள் மக்கள் நாங்கள்,  எங்கள் அப்பா, சகோதரர் போன்றவர் நீங்கள் எனவே தவறான கட்டளைகளுக்கு பணிந்து மக்களைத் துன்புறுத்தாதீர்கள்’ என்றவாறான அன்பான வேண்டுகோள்களை படையினரை நோக்கி எழுப்பவேண்டிய நிலை சிங்கள மக்களுக்குத் தோன்றியிருக்காது – இவ்வாறெல்லாம் இன்னோரன்ன காரண காரியங்களையும் விவாதங்களையும் நம்மில் சிலர் முன்வைக்கலாம் என்றாலும் இலங்கையின் தலையெழுத்தை சிங்கள மக்களின் துணையின்றி மாற்றமுடியாது என்பது நியதி. அவர்களின் போராட்டத்தோடு இணைவதினுடாகவே தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பது ஏதோவொரு சிறு துரும்பளவிலேனும் சாத்தியமாகும். சிங்கள மக்கள் தற்போது செவிமடுக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். எமது பிரச்சினைகளயும் அவர்களுக்குச் சொல்ல இதுதான் தருணம்.  எதிர்க்கட்சிகள், ஜேவிபி உட்பட, அனைவரும் இனவாதிகளாயிருப்பதும் யாரும் இந்த நிமிடம்வரை அரசைக் கைப்பற்றத் தயங்கிநிற்பதும் இத்தருணத்தில் நாம் சிங்கள மக்களுடன் சேர்ந்து போராடி எல்லோருக்கும் பொதுவான, ஓரளவுக்காவது நம்பத்தகுந்தவர்களை ஆட்சியிலமர்த்த முயற்சிப்பது நன்மை பயக்கும். புலிவாதிகளினது சுயநல கபட நாடகங்களில் சிக்கி ‘சிங்களவன் அடிபடட்டும்’ என்று துவேஷிகளாக இருப்பதும் ‘அவர்கள் என்றுமே மாறமாட்டார்கள்’ என்ற பிரபாகரனது ‘தீர்க்க தரிசனத்தில்’ அமிழ்ந்துபோவதும் தமிழ் மக்களுக்கு நல்லதல்ல. தமிழரின் பிரச்சினையே ‘நாம் கெட்டிக்காரர்; எமக்கு எல்லாம் தெரியும்’ என்ற மேலாதிக்க மனநிலைதான். என்றோ ஒருநாள் அமிழ்ந்துபோகும் என்று நிச்சயிக்கப்பட்ட புலிகளினதும், ராஜபக்ச வகையறாக்களின் கப்பல்களிலும் ஏறிய தமிழ் மக்கள் அவற்றைவிடவும் ஓரளவு சாதகமான சாத்தியமான காரணங்களைக்கொண்ட இந்த கப்பலில் ஏற ஒருமுறை முயற்சிப்பது நல்லது. ஏனெனில், இனி இப்போதைக்கு வேறு கப்பல் வராது!

இலங்கை இராணுவத்தின் குற்றங்களுக்குத் தண்டனைவேண்டி மேற்கத்தேய அரசுகளிடம் மன்றாடும் தமிழ் சிவில் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகளும் அந்த அநியாயங்களைவிடவும் பலப்பல மடங்கு மோசமான அக்கிரமங்களைப் புரியும் உக்ரேனிய அரசசார்பு நாசிகளுக்குத் மேற்கத்தேய அரசுகள் துணைபோவதையும் இணையத்தில்கூட அவர்களுக்கு எதிரான செய்திகள்வராமல் தடுக்குமளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஒருமித்த ஆதரவு அளிப்பதையும் இச்சந்தர்பத்தில் நாம் நினைத்துப்பார்த்துக்கொள்வது நல்லது.

மேற்கு எமக்கு நண்பர்களாக முடியாது.

எத்தனை வேற்றுமைகள், பிரச்சினைகள் இருந்தாலும் இந்த நாட்டில் சிங்கள, முஸ்லிம் மக்களுடன்தான் நாம் வாழவேண்டும்  என்ற தெளிவு இந்த வட்டத்தில் சுற்றிக்கொண்டு வந்துவிட்ட எமக்குப் புரியவேண்டும். மேலும், ஆட்சி மாறுவதுதுடன் எமது பிரச்சினை தீரப்போவதில்லை. மக்களின் உண்மையான விடுதலைக்கு தமிழ் மக்களின் அரசியல் பரப்பிலும், கிராம மட்ட அரச அதிகாரிகள் முதற்கொண்டு, தனியார், அரச சார்பற்ற நிறுவனங்கள், அனைத்து அரச திணைக்களங்கள்வரை பாரிய ‘களையெடுப்பு’ செய்யவேண்டியது கட்டாயமானது.

திருடர்களினதும் மாபியாக்களினதும் கட்டுப்பாட்டில் எமது அடுத்த தலைமுறையினரது சுபீட்சமான வாழ்வைக் கனவுகாண முடியாது.

அது இரண்டாம் கட்டம். அதற்கான முதற்படி தெற்கின் இந்த அமைதிவழிப் போராட்டத்தில் பங்கெடுப்பது/ தார்மீக ஆதரவு கொடுப்பதில் தங்கியுள்ளது. அதனூடாகவே அடுத்த கட்டத்துக்கான ஆதரவை அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும். இல்லாவிட்டால் தற்போதைய நிலையிலிருந்து கூட நாம் கீழே தள்ளப்படும் நிலை வரலாம்.

”ஜனதா அறகளையட்ட ஜய வேவா!”

Uncategorized

நல்லாசான் திரு. சண்முகானந்தா ‘சண்முகானந்தா சேர்’

80களின் ஆரம்பத்தில் ஒரு நாள். வவுனியா வைரவபுளியங்குளத்தில் சிறுவர் விளையாட்டு மைதானமாக (Children’s Park) அன்று அறியப்பட்ட மைதானத்துக்கு அருகாமையில் இருந்த வீடொன்றுக்கு அப்பா என்னை அழைத்துச் சென்றார். விஞ்ஞான பாட மேலதிக வகுப்பொன்றில் என்னைச் சேர்ப்பது எனது பெற்றோரின் நோக்கம். வகுப்பை நடத்தவிருந்த ஆசிரியர் அப்பாவைவிட சற்றே உயரம் குறைந்தவராகவும் பருமனானவராகவும் அன்றைய எனது பார்வையில், ‘வித்தியாசமானவராக’ இருந்தார். இருவரும் ஏதோ ஆங்கிலத்தில் உரையாடினார்கள். பெரியவர்கள் தமக்கிடையே பேசும்போது அங்கு நின்று ‘வாய்பார்க்கக்கூடாது’ என்று வளர்க்கப்பட்ட தலைமுறையினைச் சேர்ந்தவன் நான். பொதுவாக பெற்றோரின் இயல்பின் பிரகாரம் அப்பா தன் மகனைப் பற்றி ஏதோ புகழ்ந்து பேசியது தவிர அவர்களின் ஆங்கில உரையாடலில் வேறேதும் காதில் விழவுமில்லை, புரியவுமில்லை. அவர்கள் அரசியலும் பேசியிருக்கக்கூடும் என்று தோன்றியது.

திரு. சண்முகானந்தா அவர்கள் மிகுந்த கண்ணியவான். அவரின் பேச்சில் தொனித்த மரியாதை, அவ்வப்போது அவர் பாடப் பரப்புக்கும் அப்பால் சென்று வாழ்வியல், நேர்மை, ஒழுக்கம், உலக விடயங்கள் பற்றியெல்லாம் பேசியது என்னைக் கவர்ந்திருந்தது. எளிமையான வாழ்வு முறையைக் கைக்கொண்டவர். வாடகை வீட்டில் வாழ்ந்தார். சைகிளில் வருவார். மனித நேய, சோஷலிசக் கருத்துகளும் அவரின் பேச்சில் அவ்வப்போது வரும். வறுமையான குடும்பங்களில் இருந்து வந்த பிள்ளைகளிடம் பணத்தை அறவிடுவதில் முனைப்புக் காட்டாதவராகவும் சொந்தப் பணத்தில் கற்றலுக்குரிய மேலதிக செலவுகளைச் செய்பவராகவும் இருந்தார். அவர் மிகவும் மதித்த இடதுசாரித் தலைவர் ஒருவர் பெரிய காரில் உயர்ந்த சாதி நாயுடன் போவதைக் கண்டு மனச்சஞ்சலம் கொண்டதை ஒருமுறை எம்முடன் பகிர்ந்திருந்தார். போதிப்பதை வாழ்வது அவருக்கு எவ்வளவு முக்கியமானதாக இருந்தது என்பதற்கு அச்சம்பவம் ஒரு சான்று. நேரப்பிரமாணிக்கம் அவரின் உயிர்மூச்சென்று தோன்றியது. வகுப்புக்கு நாம் சென்று காத்திருக்கும்போது எப்போதாவது ஒரு நிமிடம் தாமதமானாலும் சிறுவர் சிறுமியராகவிருந்த எம்மிடமே மன்னிப்புக்கேட்கக்கூடிய பெரிய மனதுள்ளவர். அன்று எமக்குப் புரியாத மொழியாகவிருந்த ஆங்கிலத்தில் அவர் எம்முடன் உரையாடியதில்லை. ஆனால் ஆங்கிலச் சொற்களை அவர் உச்சரிக்கும்போது அழகாக இருக்கும். அவரின் தமிழ் உச்சரிப்பும் அத்தகையதே. அவரின் குரலில் ஒரு மென்மை இருந்தது. ஒருவேளை அவர் பாடக்கூடியவராகவும் இருந்திருப்பாரோ?

மெல்ல மெல்ல அவரிடம் ஒரு  அபரிமிதமான மதிப்பு என்னுள் துளிர்விடத் தொடங்கியது.

வீட்டோடு சேர்ந்தாற்போல பத்தி இறக்கப்பட்டு வகுப்பறை அமைத்திருந்தார். வகுப்பு வித்தியாசமாக இருந்தது – மாணவர்கள் முன் வாங்குகளில் இருக்க மாணவிகள் பின்வாங்குகளில் இருக்கவேண்டும் என்பது அவரின் கட்டுப்பாடு. நாங்கள் பின்னாலிருந்தால் பாடத்தைக் கவனிக்காமல் பெண் பிள்ளைகளை பராக்குப் பார்ப்போம் என்று நினைத்தார்போலும்!

ஒலியைப் பற்றி அவர் கற்பிக்க ஆரம்பித்திருந்தபோது இயல்பாகவே தொழில்நுட்ப விடயங்களில் ஆர்வமிகுந்த எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. வழக்கமாக ஒவ்வொரு பாடமுடிவிலும் அவர் பரீட்சை வைத்தார். விடைத் தாள்களை எம்மிடமே மாற்றித் தந்து புள்ளிகளை இடவைத்தார். ஒலியில் எனக்கு 100%. அதனைவிடவும் ஊக்கம் தந்த இன்னொருவிடயம் இருந்தது. அவர் ஒரு பெரிய Valve Radio வைத்திருந்தார். 6 valveகள் கொண்ட Telefunken என்பதாக ஒரு ஞாபகம். நானும் எனது நண்பனும் ஒலி பாடம் தந்த ஊக்குவிப்பால் காந்தங்கள், முலாமிட்ட கம்பிகள், இரும்புத் தகடுகள் கொண்டு loudspeakerகளை உருவாக்கினோம். அவற்றை அவரிடம் கொண்டுபோனால் அவரின் வானொலியின் பின்புறமுள்ள jackகளில் செருகி ஒலிக்கவைப்பார். நாமோ எம்மை Edisonகளாக நினைத்துக்கொண்டு புளகாங்கிதமடைவோம்!

அவர் பரதநாட்டியம் கற்றவர் என்றும் யாரோ சொல்லக்கேட்டதுண்டு. அதுபற்றி நாம் அவரிடம் கேட்டதில்லையென்றாலும் அவரின் மென்மையான சுபாவத்தை மேலோட்டமாகப் பார்த்து அவரை காத்திரமற்றவர் என்று எடைபோடுபவர்கள் பெரிதும் ஏமாந்துபோவார்கள்.

எப்போதாவது ஒருமுறை அவருக்கு கோபம் வரும். அதில் ஒரு நியாயமும் வெளிப்படுத்தலில் ஒரு கண்ணியமும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற ஒரு இலக்கும் இருக்கும். கல்விச் செயற்பாடு தவிர்ந்த ஒரு உரையாடலின்போது ஒரு நண்பன் ‘இங்கிலிஸ்’ என்று உச்சரித்துவிட்டார். அன்றும் அவருக்குக் கோபம் வந்தது. ‘இங்கிலிஷ்’ என்று சொல்லமாட்டாதனீங்கள் எப்படி அதனைப் படிக்கப்போறீங்கள்? என்று கடிந்துவிட்டு வழிகாட்டினார்: ‘நீங்கள் ‘இங்கிலிஷ்’ படிக்க வேணுமென்றால் அது உங்களின் காதில் விழவேணும்; ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கவேணும்’.

அந்நாட்களில் வவுனியாவில் தொலைக்காட்சி இருந்த வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். 60 அடி, 80அடி உயரத்தில் antenna பொருத்தி ‘தூர்தர்ஷனில்’ கறுப்பு-வெள்ளை புள்ளிகளுக்குள் உருவம் தேடி சிலர் ஆனந்தப்பட, ‘இதுதானாம் TV!’ என்று நாம் பிரமித்திருந்த காலமது. நடுத்தர வருமானமுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக வானொலிப் பெட்டி மட்டும்தான். நீண்ட இடைவெளியொன்றின் பின்னர் அந்நாட்களிலேயே எமது வீட்டிலும் வானொலிப் பெட்டியொன்று வாங்கப்பட்டிருந்தது.

ஒரு புதிய தேடல் தெளிவான இலக்குடன் ஆரம்பமானது. இன முரண்பாடுகள் யுத்தமாக பரிமாற்றமடையத் தொடங்கிய காலம். செய்தி கேட்பதும் மற்றவர்களுக்குச் சொல்வதும் மெல்ல மெல்ல அன்றாட கடமை மற்றும் பொழுதுபோக்கானது. விஞ்ஞானம், தொழில்நுட்பம், உலக அரசியல், சரித்திரம் என்று என்னவெல்லாமோ காலப்போக்கில் இணைந்து கொண்டன.

உலகத்துக்கான ஜன்னல்களைத் திறந்துவிட்டு இன்றுவரை தொழிலையும் தந்துகொண்டிருக்கும் ஆங்கில மொழி-அறிவைத் தூண்ட சண்முகானந்தா சேர் ஒரு பெரும் காரணமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.

பல்தரப்பட்ட அறிவுள்ளவர் சண்முகானந்தா சேர். Computer, Electron Microscope என்ற சொற்களை அவரிடமிருந்தே முதன்முதலில் அறிந்திருந்தேன். அவை ஒரு பெரிய அறையளவான இயந்திரங்கள் என்று அவர் விபரித்தமை இன்றும் நினைவில் உள்ளது.

JVP தலைவர் ரோகண விஜேவீர தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவுக்கு வந்தபோது அவரின் உரையைச் சென்று கேட்கும்படி ஊக்குவித்தார். அவர்களின் கேள்விகளுக்கு மற்றைய கட்சித்தலைவர்களிடம் பதிலிருக்கிறதா என்று பாருங்கள் என்று பின்னர் அவர் எம்முடன் உரையாடியது ஞாபகம்.  அது ஜே. ஆர். ஜயவர்தனாவினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் பரஸ்பர இனத்துவ அரசியலில் நாம் அனைவரும் மூழ்கி இருந்த காலம். யுத்தத்துக்காக ‘பேயுடனும் கூட்டுச்சேரத்’ தயாராக இருந்த அரசையும், ‘சிங்களவனின் தோலில் செருப்புத் தைப்போம்’ என்று முழங்கிய தமிழ் அரசியல் மேடைகளையும் கண்ட எம்மிடம் சிரில் பொன்னம்பெரும என்ற இலங்கை நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியைப்பற்றி அவர் சொன்னபோது ‘அவர் தமிழரா’ என்று ஒரு சக மாணவி கேட்க ‘மனுஷன்’ என்று பதிலளித்து மனிதம் பொதுவானது என்ற சிந்தனையை எம் மனங்களில் விதைத்தவர் அவர். அன்று எமக்கிருந்த கொள்ளளவு அதற்குமேல் அவரிடமிருந்து பலவற்றை அறியமுடியாமல் செய்துவிட்டிருந்திருக்கும். பின்னாட்களில் வாழ்க்கைப் போராட்டங்களும்  தொழில் ரீதியான அலைச்சல்களும் அவரைத் தொடர்பு கொள்ள இடமளிக்கவில்லை. அதற்குரிய காலம் கனிந்தபோது அவர் எம்மிடையே இல்லை என்ற தகவல் மட்டுமே கிடைத்தது. 2000ங்களின் பின்னரான காலப்பகுதியில் நாம் கடந்துவந்த மாற்றங்களுக்குப் பிறகு, இன்றுபோல் ஒரு நாளில் அவரைச் சந்தித்திருந்தால் ஏராளமான விடயங்களை அவருடன் பகிர்ந்துகொண்டிருக்க முடியும். அவர் காட்டிய வழியில் நான்  கடந்துவந்த தூரத்தைச் சொல்லிப் பெருமிதப்பட்டிருக்க முடியும். பல விடயங்களில் அவருடன் ஒத்த கருத்துள்ளவனாக இருக்கக்கண்டு சற்றே தற்பெருமை கொள்ளவும் வழியேற்பட்டிருக்கும். தசாப்பதங்கள் கடந்துவந்த அந்த ‘sentimental’ valve radio ஒருவேளை பழுதாகியிருந்தால் எனது கைகளாலேயே அதனைத் திருத்திக் கொடுத்திருக்கவும் முடிந்திருக்கும்!

சண்முகானந்தா சேர் விஞ்ஞான ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றியவர் என்பதற்கப்பால் விஞ்ஞான ரீதியான கண்ணோட்டமும் கருத்தோட்டமும் உள்ளவர். அப்பழுக்கற்ற நேர்மையாளனான அவர் இன்றைய சூழலில் சமூக, அரசியல் பரப்புகளில் இருக்கும் மனிதர்களைப் பற்றியும் உலகின் போக்கு பற்றியும் மாறுபட்ட ஆனால் ஆழமான கருத்துகளை வைத்திருந்திருப்பார் என்று என்னால் ஊகிக்க முடிகிறது.

சரித்திரத்தில் மகான்களாகச் சித்தரிக்கப்படுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். தம்மை அப்படி உயர்ந்தவர்களாக பாவனை செய்து உரத்துச் சத்தமிடுபவர்கள் பலர் இன்றும் எம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் உண்மையானவர்களா என்று எமக்குத் தெரியாது. ஆனால் ஒரு சிலர் மட்டும் அமைதியான நீரோடைபோன்று எந்தச் சலனமுமில்லாமல் எம்முடன் பயணித்து எம்மை அறியாமலேயே எம்மைப் வளப்படுத்திச் செல்கிறார்கள். ஏதோ ஒரு காட்சி மாற்றத் திரை மறைப்பில் அவர்களைத் தவறவிட்டுவிடுகிறோம் என்பது அவர்கள் போய்ப் பலகாலமான பிறகே எமக்குப் புரிகிறது.

எத்துணை மரியாதையும் அபிமானமும் அவர் மேல் வைத்திருந்தபோதும் அந்தத் தனித்துவமான மனிதனின் சிந்தனை பின்னாட்களில் எவ்வாறெல்லாம் வளர்ந்து விரிந்துபோனது என்பதை அறியாமற் போனேனே என்ற ஏக்கமும் அவரின் கடைசி நாட்களில் தொடர்பற்றுப்போன அபாக்கியமும் இறுதிவரை என்னைத் துரத்தும்.

பாத்திரமளவே பண்டம்.