life · Society

வைத்தியத் துறையினருக்கான ஓய்வு?

அரச வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குச் செல்லும் பலர், ‘அங்கு அவர்கள் எங்களை அவமரியாதை செய்வார்கள்; அறிமுகம் இல்லாவிட்டால் கவனிக்க மாட்டார்கள்; மட்டமாக நடத்துவார்கள்; திட்டுவார்கள்; தர்க்கரீதியற்ற நடைமுறைகளை வைத்திருப்பார்கள்’ என்ற இன்னோரன்ன விமரிசனங்களை வைக்கிறார்கள். எல்லா இடங்களிலும்போல அங்கும் கடமையுணர்வற்று வேலை செய்கிறவர்கள் இருப்பதால் இப்படியான குற்றச்சாட்டுகளில் உண்மையும் இருக்கத்தான் செய்யும். சுகாதாரத் துறையிலும், இலங்கையில் மட்டுமன்றி, உலக அளவில்கூட மாபியாக்கள் தொழிற்படுகின்றன என்பது புரிந்துகொள்ளச் சிரமமானதில்லை. எனக்கும் எனது நண்பர்கள், நண்பிகளுக்கும் சில அனுபவங்கள் இருக்கின்றன.

அண்மையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை வந்தபோது இந்த விடயங்கள் பற்றி அதிகம் அவதானிக்கத் தொடங்கினதன் பின்னூட்டம் இது.

நாங்கள் வருடக்கணக்காக விடுமுறை இல்லாமல் வேலை செய்ய, ‘இந்த வெள்ளைக்காரர்கள்’ வேலைக்கு வந்து 2 வாரங்களில் ஓய்வு வேண்டுமென்று ஓடுகிறார்களே என்று நாங்கள் கிண்டலடித்தபோது, அதற்குப்பின்னால் இருந்த மனோவியல் தத்துவம் புரிந்திருக்கவில்லை. எங்களுடைய கலாசாரத்தில் அது இல்லை! எங்களில் பலர் தொழிலையும், வாழ்க்கையையும் ஒன்றாகக் கருதியதும், மனோவியற் புரிதல் இன்மையும் ‘எங்களுக்குத் தெரியும்’ என்ற மமதையில் மற்றவர்களை மட்டந்தட்ட மூலகாரணங்களானது.   

நான் மற்றவர்களுடன் பொறுமையின்றி, மிக மோசமாக நடந்துகொண்ட சந்தர்ப்பங்கள், அதிக மனவழுத்தத்தைத் தந்த சம்பவங்கள் வாழ்வில் இடம்பெற்றிருந்த காலங்களிலேயே நடந்திருந்தன. (இயல்பாக நான் மோசமானவனில்லை என்பதை இது நிரூபிக்கின்றது 😉) வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களுக்கான வேலைத் திட்டங்களில் நான் ஈடுபட்டிருந்த காலங்களும் இதில் முக்கியமானவை. அதிக மனவழுத்தம் தரக்கூடிய பணிகளில் இருப்பவர்கள் தம்மை ஆசுவாசப் படுத்திக்கொள்ளும்பொருட்டு விடுமுறை எடுத்துக்கொள்வது அவசியம் என்பது இந்த வேலைத் திட்டங்கள் முடிவுற்று பல வருடங்கள் கடந்தபிற்பாடு சுய ஆய்வுகளினூடாக எனக்குப் புரிந்தது. அண்மையில் வைத்தியசாலையில் இருந்தபோது அதிக அக்கறையுடன் மனிதர்களை அவதானிக்க இந்த அனுபவம் என்னைத் தூண்டியது.

பலவிதமான மனப்பாங்குகள், வேதனைகள், பிரச்சினைகளுடன் வருபவர்களை ஒரே சூழ்நிலைக்குள் இருந்துகொண்டு நித்தமும் கையாளும் நிலை நிச்சயமாக சாதாரணமானதில்லை. இது அவர்களின் மனப்பாங்கிலும், ஆரோக்கியத்திலும் அவர்களையும் அறியாமல் ஆதிக்கம் செலுத்தி அழித்துவிடும் என்பது என் அனுமானம் மட்டுமல்ல; அனுபவமும்கூட. சில வருடங்களுக்கு முன், எனது நண்பர் ஒருவர் மரணிக்குந்தறுவாயில் இருக்க, சிற்றூழியர் ஒருவர், பாடல் ஒலித்த கைபேசியை வாயில் கெளவியபடி வந்து அவருக்கு saline மாற்றியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மேலை நாடுகளில் வைத்தியரே நோயாளியின் பாதணிகளைக் கழற்றிய சம்பவங்களை அறிந்திருக்கிறேன். அப்படியிருக்க, சில காலங்களுக்கு முன்னர், கிளிநொச்சி வைத்தியச்சாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவேளை, தீண்டத்தகாதவனைப் பார்ப்பதுபோல பின்னால் கைகளைக் கட்டியபடி வைத்தியர் எட்டத்தில் நின்றிருக்க, அழுக்கான கட்டிலில் படுக்கவைக்கப்பட்ட எனக்கு சிற்றூழியர் ஒருவர் ECG கருவியைப் பொருத்தியபோது, இலங்கை வைத்தியத்துறையே கேவலமானதாகத் தோன்றியது.    ஆனால், அண்மைக்கால அவதானிப்புகளிலிருந்து, வைத்தியர்களும் தாதியரும் தமது கல்வியறிவு, அனுபவத்தூடாக, தம்மை நடுநிலைப்படுத்திக்கொள்ள ஓரளவுக்கு முயற்சிக்கிறார்கள் என்று புரிந்தாலும் அதில் ஒரு செயற்கைத் தன்மை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

வைத்தியர்(கள்), நோயாளிகளின் நலன்கள் தொடர்பில் நோயாளிகளிடம் மென்மையாகப் பேசி, வெற்றுக் கைகளால் அழுக்கான உடல் பாகங்களைத் தொட்டு சேவையைச் செய்தார்கள் என்றாலும் மற்றைய வைத்தியர்கள், தாதியரைக் துளைத்தெடுத்த கடுமை எனக்கே சற்றுச் சங்கடமாக இருந்தது. நடுத்தரவயதுப் பெண்ணான சிற்றூழியர் ஒருவர் தனது வேலை, வயது போன்ற காரணிகளையும் மீறி நோயாளி ஒருவருடன் கிண்டலடித்து விடுதியைக் கலகலப்பாக்க முயன்றார். அந்த கலகலப்பு உண்மையானது என்றாலும் அவரின் முயற்சி பொய்யானது என்றே எனக்குத் தோன்றியது. மருந்து கொடுக்க நோயாளிகளைத் தம்மிடம் வரவழைக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டாலும், நோயாளி நடக்க முடியாமல் சிரமப்பட்டபோது சிங்களவரான பெண் தாதி ஒருவர் எட்டி விரைந்து அவரிடம் சென்றதை அவதானிக்க முடிந்தது (எந்த அறிமுகத்துடனும் போகாத அந்த நோயாளி நான் தான்!).

சில இளம் பெண் தாதியர் – அநேகமாக சிங்களவர் –   பகல் இரவாக வேலை செய்கிறார்கள். சிலரின் கண்களில் களைப்பும், சிலவற்றுக்குப் பின்னால் ஆழ்ந்த சோகமும் இருப்பதாகப்பட்டது எனக்கு. இளம் வயதில் நித்திரை விழித்து வேலை செய்த அனுபவம் எனக்கும் இருப்பதால் இது மனதை வருத்தியது என்பதும் உண்மை.

அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தபோது வகுப்புகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றுக்காக தென்னிலங்கை நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்தபோது, ‘இவ்வளவு செலவு செய்கிறார்களே, இந்தப்பணத்தை எங்கள் மக்களுக்குத் தரலாமே’ என்ற ஒரு வகை குற்ற உணர்ச்சி ஆரம்பத்தில் எனக்கு ஏற்பட்டிருந்தது. மேற்கத்தேயராயிருந்த எங்கள் மேலதிகாரிகள் எங்களுக்குச் சொல்லாமலே ஒரு சிறிய ஓய்வை எங்களுக்குத் தந்திருக்கிறார்களென்பதும், அது நல்ல மாற்றத்தை மனதுக்கும் உடலுக்கும் தந்திருக்கிறது என்பதும் புரிய நீண்டகாலம் எடுத்தது.

தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கு மனதை இலகுபடுத்த உதவக்கூடியது அல்ல. அதனாலேயோ என்னவோ, சிங்களவரான வைத்தியத்துறை ஊழியர்கள் ஒப்பீட்டளவில், மென்மையானவர்களாக இருக்கிறார்கள் என்பது எனது அவதானிப்பாக இருக்கிறது. இந்த விடயத்தை மனித நேயத்துடன் கையாள வைத்தியத்துறை சார்ந்த, அதிக மனவழுத்தத்தைச் சுமக்கிறவர்கள் வருடத்தில் ஒருமுறை 2-3 நாட்களுக்காவது தென்னிலங்கைப் பிரதேசங்களில் பயிற்சி/ கருத்தரங்கு போன்ற செயற்பாடுகள் கலந்த ஒரு ஓய்வுக்கு அழைத்துச் செல்லப்படுவது, பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்த உதவும் என்பது எனது நம்பிக்கை. 2-3 வைத்தியசாலைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் ஊழியர்களை குழுக்களாக இந்த ஓய்வுக்கு அனுப்பும் நடைமுறையின் விளைவு-வெளியீட்டை ஒரு கணிப்பீட்டினூடாக அளக்க முடியலாம்.

விடுமுறை எடுப்பது எமது கலாசாரத்தில் இல்லை. அத்துடன், இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியில் சொந்தச் செலவில் இதனைச் செய்ய அநேகர் முன்வர மாட்டார்கள், முன்வரவும் முடியாது. இதற்கு தனியார் நிறுவனங்களின் CSR funds, புலம்பெயர்ந்த தேசத்து கோடீஸ்வரர்கள் உதவ முடியும்.

இப்படி ஒரு விடயம் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியாது. ஆனால் சமூகத்தின் நன்மைகருதி இத்தகைய உரையாடலொன்று இடம்பெற்றால் நல்லதென்று தோன்றுகிறது எனக்கு.   

Uncategorized

ஈரம்

மகியங்கனை பகுதியில் ஒரு தேநீர் கடை. 70களைத் தாண்டிவிட்டிருந்த ஒரு மூதாட்டி அதனை நடத்திக்கொண்டிருந்தார். காலை வேளை, தேநீர் அருந்தலாம் என்று நானும் எனது அலுவலக வாகன சாரதியும் போனோம். இரவு பகலாக பல நூறு கிலோமீற்றர்கள் ஓடி களைத்திருந்த எனக்கு அந்த அம்மா தந்த தேநீர் உயிரைத் திரும்பத் தந்திருந்தது. உணவோ, பானமோ பிடித்திருந்தால் பாராட்டி நன்றி சொல்லும் பழக்கம் என்னுடையது.
‘மிக்க நன்றி அம்மா; உங்கள் தேநீர் எனது களைப்பைப் போக்கிவிட்டது’ என்றேன். அவர் ‘தவ தே எகக் தென்டத புதே’ (இன்னுமொரு தேநீர் தரட்டுமா, மகனே) என்றார். அவர் கேட்டவிதம் – அந்த அன்பு – அன்றுபோல் இன்று நினைத்தாலும் எனது கண்கள் பனித்துவிடும்.

வவுனியாவின் ஒரு கோடியில் இருந்த அப்பக்கடை. நண்பர்கள், நண்பிகளுடன் போயிருந்தேன். புன்னகை மாறாத சாந்தமான முகத்தையுடைய நடத்தர வயது சிங்களப் பெண், வெறுங்கால்களுடன் நிலத்துக்கும் நோகாமல் நடந்துவந்து பரிமாறினார். நடுத்தர வயது பெண்கள் என்றால் சிடுசிடுப்பை எதிர்பார்க்கும் எனக்கு பெருத்த ஏமாற்றம்! தமிழிலும் சிங்களத்திலும் எழுதியிருந்த பலகையைப் பார்த்தேன். தமிழ் கடைகளில் எழுதியிருப்பதைப்போல ‘தேநீர்’ என்று எழுதியிருந்தார்கள். ஆனால் ‘தே பொமு’ (தேநீர் பருகுவோம்) என்று சிங்களத்தில் எழுதியிருந்த அந்த விருந்தோம்பல் கலாசார செழுமை முகத்தில் அடித்து அவமானப்படுத்தியது.

கலை நயத்துடன் வீடுகள் கட்டி, வேலியோ, மதிலோ இல்லாமல் ஆளுயர புற்கள் சூழ வாழும் அவர்களின் மனங்களின் ஈரம் எங்கள் மண்ணுக்கு மழையாகப் பெய்கிறது என்று தோன்றியது.

politics · Society

திரு. சுந்தரம் திவகலாலா

சில வருடங்களுக்கு முன்னர் நான் பணிபுரிந்த நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் செயற்பாடு தொடர்பாக அவர் நடத்திய ‘ஆறுதல்’ நிறுவனத்தின் பிரதிநிதியாக அவரை முதல் முறையாகச் சந்திக்கவேண்டி இருந்தது. அது பின்னர் ஒரு நட்பாக பரிணமிக்க, வேலைத் திட்டங்கள் முடிவடைந்த பின்னரும் யாழ்ப்பாணம் போகும்போது இடையிடையே சந்திப்பதும் தொலைபேசியில் பேசுவதுமுண்டு.

கல்வி, அனுபவம், வயது அனைத்திலும் நான் சிறியவனாக இருந்தபோதும் சமனாக இருத்திவைத்து பேசிக்கொண்டிருப்பார். சில சமயங்களில் ‘டேய்; தம்பி’ என்று அவர் ஒருமையில் அழைப்பதில் உரிமையும் வாஞ்சையும் தொனிப்பதை அவதானித்திருக்கிறேன். இலங்கையின் கல்விச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், அவர்களில் பெரும்பாலானவர்களின் ‘ஒருபக்க’ உரையாடல்கள்போலன்றி, தனது கருத்துகளை முன்வைத்து ‘தம்பி, நீ என்ன நினைக்கிறாய்’ என்று அபிப்பிராயம் கேட்பார். வேறு அலுவலாக அவரின் அலுவலகத்துக்குச் செல்லும்போது கண்டாலும், சில நிமிடங்களாவது இருத்திவைத்துப் பேசாமல் விடமாட்டார். தொலைபேசியில் அழைத்து ‘பேசவேணும்; நேரமிருக்கா’ என்று கேட்டுவிட்டு பேசும் பண்புள்ளவர்.

அவரின் பேச்சில் இருக்கும் நகைச்சுவை இழையோடிய துடுக்குத்தனம் என்னை அதிகம் கவர்ந்தது.

ஒரு முறை ‘என்ன வேலைத்திட்டங்கள் நடக்குது; நாங்கள் ஏதாவது சேர்ந்து செய்யலாமா?’ என்று கேட்டபோது, அப்போது நான் பணிபுரிந்த நிறுவனத்தின் இன்னொரு செயற்பாடாக இருந்த ‘பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கூட்டுதல்’ என்று ஏதோ செய்யினம்’ என்று நான் சொல்ல, ‘அது சரிவராது; அத விடு; வேற?’ என்று அவர் கேட்டவிதத்தை நினைத்து நான் இப்போதும் எனக்குள் சிரிப்பதுண்டு. அந்த விடயத்தை யார் எப்போது பேசினாலும் அது எனக்கு அவரை நினைவூட்டியது!
அரசியல், நாட்டுநடப்பு, சமூகச் செயற்பாடுகள் பற்றியன்றி வேறு எதுபற்றியும் அவர் அதிகம் என்னிடம் பேசியதாக நினைவில்லை. ஒரு சாதாரண சமூக செயற்பாட்டாளராக அப்படிப் பேசுகிறார் என்று நான் நினைத்தது தவறென்பதும் அது அவரின் ஆன்மாவுடன் ஒன்றியது என்பதே சரி என்பதும் அண்மைய நாட்களில் அவர் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே இருந்த தருணத்தில் போர், மக்களின் இழப்புகள், உரிமைப்போராட்டம் திசைமாறித் தோல்விகண்டமை பற்றி கண்கள் பனிக்கப் பேசியதைக் கண்டதும்தான் புரிந்தது.

தை 3ஆம் திகதி அவரை நான் அவரின் நீண்டகால நண்பருடன் இறுதியாகப் பார்த்தபோது, சில சொற்கள் எனக்குத் தெளிவாக விழங்காமற்போகவே, இயல்பான துடுக்குத்தனத்துடன் சிரித்தபடியே ‘ஞானசூனியம்’ என்று கிண்டல் செய்தார். உடலின் இயலாமையை ஓர்மம் மிக்க மனம் இறுதிவரை ஏற்றுக்கொள்ள மறுத்ததில் விளைந்த கோபம் அப்படி வெளிப்பட்டிருந்தது என்று எனக்குத் தோன்றியது.
அன்று அவர் இறுதியாகச் சொன்னதும் ‘இவங்கள் எல்லாரும் திசை மாறிப் போறாங்கள்; ஒருக்கால் சந்திச்சுக் கதைப்பமா?’

Society

சிலை உடைப்புகளும் மனித நாகரிகமும்

அண்மைக்காலமாக உலகின் பல நாடுகளில் ஒடுக்குமுறையையும் காலனித்துவத்தையும் பிரதிபலிப்பவர்கள் என்ற காரணத்தினால் அத்தகையவர்களின் சிலைகளை மக்கள் உடைத்துவீழ்த்திவருவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இவற்றுக்குப்பின்னால் ஏதாவது அரசியல், சூழ்ச்சிகள் இருக்கக்கூடும். அல்லது ஆட்சியாளர்கள் அவ்வப்போது மக்களின் கோபத்தைத் திசைதிருப்பக் கையாளும் உத்திகளாகக்கூட இருக்கலாம். ஆயினும், இவை வெறுமனே சிலைகளின் உடைப்பு என்பதாக அன்றி ஒரு குறிப்பிட்ட சிந்தனைப்போக்கின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இத்தகைய செயல்கள் நாம் ஏற்கனவே பார்த்து அனுபவித்தவைதான். 70களிலும் 80களிலும் யாழ்ப்பாணத்தின் வீதிகளில் அமைக்கப்பட்டிருந்த தலைவர்களினது சிலைகளை கலவரங்களின்போது படையினர் உடைப்பது வழக்கம். காந்தியையும் தமிழ் தலைவர் என்று எண்ணி உடைத்து ஒற்றைக் கம்பியில் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பார்கள்.

தமிழ் ஆயுத தரப்பினர் எதிர்த்தரப்பினரின் அடையாளங்களை அழிப்பதை அல்லது சரித்திரத்தை இருட்டடிப்புச் செய்வதை ஒரு வக்கிரமான ஆர்வத்துடன் செய்திருந்ததும் எமது போராட்ட வரலாற்றின் ஒரு பகுதியெனலாம்.

90களில் ஒரு தற்காலிக சண்டை ஓய்வின்போது வவுனியா நகருக்கு வந்திருந்த புலிகளின் குறிபார்த்துச் சுடும் வீரர் ஒருவர் நகரின் மத்தியில் இருக்கும் காலஞ்சென்ற கொப்பேக்கடுவ அவர்களின் சிலையின் தலைக்குச் சுட்டதையும் இச்சிந்தனையின் உச்சபட்ச ‘சாதனையாக’ அரச தரப்பினர் புலிகளின் போராட்ட அடையாளங்களை அழிக்குமுகமாக அவர்களின் மயானங்களை தரைமட்டமாக்கியதும் பிரபாகரனது பதுங்கு குழியை உடைத்து மூடியதும்  நாம் அறிந்ததே.

கலவரத்தில் அழிப்பதைப்போன்று கலவரத்தை உண்டாக்க உடைப்பதும்கூட உண்டு. மற்றையவரின் மத அடையாளங்களை உடைப்பது அத்தகைய சிந்தனையின் ஒரு நீட்சியாக இருக்கிறது. பிறமதம் ஒன்று சிலரால் பின்பற்றப்படுவது தமது மதத்தை அவமதிப்பதாக அல்லது தம்மை சிறுமைப்படுத்துவதாக வேறொரு தரப்பு கருதுவது இத்தகையதே.

யாழ் நூலக எரிப்பும் தமிழர்களின் கல்வி, கலாசார மேலோங்கல் தம்மை சிறுமைப்படுத்தும் என்ற சிங்கள மேலாதிக்க வக்கிர எண்ணத்திலானதாக இருந்திருக்கலாம்.

எமக்கு விருப்பமில்லாத்தை அல்லது அவமானகரமானதாக நாம் கருதுவதை அழிப்பதினூடாக வரலாற்றை அழித்துவிட முடியுமென நினைப்பது மூடத்தனமானதாகும்.

அல்பிரட் .துரையப்பா அவர்கள் மாநகர முதல்வராக இருந்த காலத்தில் நடந்ததாலும் முன்னாள் இலங்கை அமைச்சர் செ. குமாரசூரியர் அவர்கள் திறந்துவைத்ததாலும் இன்று செல்லுபடியாகும் வியாக்கியானங்களுக்கு அமைய தமிழ்த்தேசியவாதியாக இல்லாமலிருந்த ஆனந்த குமாரசுவாமி அவர்களின் சிலை யாழ்ப்பாணத்தில் இப்படி இருக்கிறது.MVIMG_20190831 (Large)

மனித குலத்தின் சரித்திரம் வெற்றி, தோல்விகளாலும் அவமானங்களாலும் நிறைந்ததுதான். மனித குலம் வெற்றிகளைக் குவித்துள்ளது என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டால், அத்தனை வெற்றிகளுக்கும் பின்னால் சொல்லமுடியாத அவமானங்களையும் கொண்டுள்ளது. அவமானங்களை அழித்துவிடுவதாயின் தெருக்கோடியில் உள்ள சிலைகளைமட்டுமன்றி, சீனப் பெருஞ்சுவர், பிரமிட்கள், கோவில்கள், நெடுஞ்சாலைகள், கடைகள், பனைமரம், தென்னைமரம் என்று அனைத்தையும் அழித்துவிட்டு முழு மனிதகுலமும் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொள்ளவேண்டியிருக்கும். ஏனெனில், முதலாளித்துவ வளரச்சியின் பேரில் நடக்கும் சுரண்டலும் சோசலிச புரட்சியின் பேரில் சிந்திய குருதியும் எம் அனைவரினதும் அவமானமாக மனித நாகரிகமுள்ள காலம்வரை எம்முடன் இருக்கும்.

விரும்பியதை மட்டும் எடுத்துக்கொள்வதால் சரித்திரம் மாறிவிடாது. நடந்தவை நடந்தவைதான். அவற்றுடன் வாழும் விதத்தில் மனங்களை வளர்த்துக்கொள்ளவும் எதிர்கால சந்ததியினருக்கு எமது படிப்பினைகளையும் நல்ல  சிந்தனைகளையும் விட்டுச்செல்ல முயற்சிப்பதுவுமே நாம் செய்யக்கூடிய நல்லவைகள்.

Society

வவுனியா வீதிகளில் நான்!

‘எனக்குத்தான்  முதலிடம்’ என்று நோயாளர் காவு வண்டிபோல horn அடித்தவாறே வெட்டியோடும் வாலிபர்கள்;

‘பெரியவர்களை மதிக்கவேண்டும்’ என்னும் எமது புராதன பண்பை ‘உருவத்தில் பெரியவர்களை மதிக்கவேண்டும்’ என்று திரிபுறப் புரிந்துகொண்டு வீதியில் கப்பலோட்டும்! Bus, Tipper Truck சாரதிகள்;

அடுப்பில் கறி வேகுமுன்னர் பிள்ளையை Pre-school இலிருந்து கொண்டு வந்துவிடவேண்டுமென்று குதிரை வேகத்தில் முந்திச் சென்று இடதுபக்கம் திரும்புவதற்காக வலதுபக்க signal ஐப் போடும் scooty அம்மாக்கள்;

எதற்காக வேகமாகப் போகிறோம் என்றே தெரியாமல் போகிற போக்கில் தமது தாடைகளை உடைத்து  plastic surgery க்காக மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் விடலைகள்;

ஒற்றைக் கண் பார்வையை மறைக்கும்வண்ணம் சுளகளவு phone ஐ helmet க்குள் செருகியவண்ணம் தனியே சிரித்துக்கொண்டு போகும் வெட்கம் கெட்ட ஆண்கள், பெண்கள்;

‘வீடுசேருமுன் கதைத்து முடித்துவிடவேண்டும்’ என்று தம்மையும் வீதியையும் மறந்த யோக நிலையில், தலையைச் சாய்த்து காதல் சல்லாபத்தில் நடைபயிலும் இளம் பெண்கள்;

தீப்பெட்டியளவு காரை ‘ஒரு கெளரவத்துக்காக’ வாங்கி Tyreகளின் தடம் எங்கே இருக்கின்றன என்றுகூடத் தெரியாமல், மற்றவர்களையும் போகவிடாமல், பயந்து பயந்து நடுவீதியால் கார் ஓட்டும் புதிய பணக்காரத்தன விரும்பிகள்;

‘முயலுக்கு மூன்று கால்’ என்று தம்மை மட்டுமே நியாயப்படுத்தி இரண்டரைச் சில்லுகளில் circus காட்டும் முச்சக்கரவண்டி மூர்க்கன்கள்;

தோள்களை செவிகளுக்குள் அழுத்தியவாறு மன்மத அம்பு விடுவதாக நினைத்துக்கொண்டு Tyre களின் அளவே ஆண்மையின் அழகாக எண்ணி பெட்டைக்காய் ஆலாய்ப்பறக்கும் bike பொடியன்கள்;

வாகனங்கள் வருவதைப் பார்த்தபின்னும் பாராததுபோலப் பாசாங்கு செய்தபடி ‘என்னைப் பார்; என் அழகைப்பார்’ என்று பாதசாரிகள் கடவையில் வீதியைக் கடந்தவாறே signal விடும் இளம் சிட்டுகள்;

50 மீற்றர் தூரத்தில் உள்ள இடத்துக்கு ’90’ இல் சென்று break அடித்து சேமிக்கும் செக்கன்களை நிதானமாக mortuary இல் செலவழிக்கும் குற்றாயுட்காரர்கள்;

‘சட்டம் என் கையில்’ என்று புகை கக்கும் வாகனங்களில் roundabout ஐக்கூட தன் வீட்டுக் கோடிபோல நினைத்துப் பவனிவரும் கம்பீரமான பொலிஸ்காரர்கள்;

சில மணித்துளிகள் வீதி ஒழுங்கு வகுப்புக்குப் பின்னர் பாடமாக்கிய இலக்கங்களால் நிரப்பி எடுத்த licence ஐ விட wallet இல் இருக்கும் பணத்தை நம்பியே வீதிக்கு இறங்கும் traffic law மாணவர்கள்;

zebra கடவை என்றால்கூட இடது பக்கத்தால்  overtake பண்ணுவதை சட்டம் என்றே கொண்டவர்கள்;

இத்தனைபேருக்கும் மத்தியில், வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பதுடன் மற்றவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்திலும்  family car ஒட்டும் சில நிதானமான பெண்கள் மட்டும் எனக்கு எமன்களாக வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், ‘30’ கூடத் தாண்டாமல் வவுனியா வீதிகளில் நான்!

Society

செஞ்சோலை என்ற பாலை

DSC_6289a‘Born with a silver spoon in mouth’. வசதியும் செல்வாக்கும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்களை ‘வெள்ளிக் கரண்டியை வாயில் வைத்தவாறே பிறந்தவர்’ என்று இவ்வாறு ஆங்கிலத்தில் அடைமொழியிட்டுக் கூறுவது வழக்கம்.

யுத்தம் சின்னாபின்னமாக்கிய குடும்பங்களில் யாருமற்று அநாதரவாக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்கவென தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களால் 1990களில் செஞ்சோலை என்ற குழந்தைகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டதை ஈழப்போராட்டத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்ட அனைவரும் அறிவர். ஒரு கனிவான தகப்பன்போல அக்குழந்தைகளுடன் அவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளிவந்திருந்தன. கெளதமரை அவரின் பெற்றோர் உலகின் துன்பங்கள் எதையும் அறியாமல் வளர்க்கத் தலைப்பட்டதுபோல, பெற்றோரற்ற இக்குழந்தைகள்  எந்தக்கவலையையும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக மிகுந்த கவனத்துடன் பராமரிக்கவேண்டி, பிரபாகரனின் நேரடிக் கட்டுப்பாட்டில் செஞ்சோலை வைக்கப்பட்டிருந்ததாக முன்னர் சொல்லப்பட்டிருந்தது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். தமிழீழத்தை வெற்றிகொண்டதன் பின்னர் அத்தகைய பிள்ளைகளை வளர்ப்பதே அவரது விருப்பம் என்று அவர் கூறியிருந்ததாகவும் அந்நாட்களில் மக்கள் பேசிக்கொண்டதாக ஞாபகம். செஞ்சோலைக் குழந்தைகள் கேட்டு பிரபாகரனால் வழங்கப்படாதது அநேகமாக ஒன்றுமில்லை என்பார்கள். ஆனால் வரித்தொப்பி கேட்டபோதுமட்டும் மறுத்துவிட்டு ‘நீங்கள் எனது பிள்ளைகள்; போராளிகளல்லர்’ என்று சொன்னதாகவும் நினைவு மீட்டுகிறார்கள் சிலர். தனது உயிருக்கு ஆபத்து இருந்த சந்தர்ப்பங்களிலும்கூட ‘பார்க்கவேண்டும்’ என்று பிள்ளைகள் கேட்டால் ஓடி வருபவர் என்பது, எல்லையோர சிங்களக் கிராமங்களில் பெண்கள், குழந்தைகள் என்று பாராது வெட்டியும் சுட்டும் கொல்ல உத்தரவிட்ட ஒரு மனிதனின் நம்பக்கடினமான, மென்மையான ஒரு பக்கமாக இருந்திருக்கிறது.

எது எப்படியிருந்தபோதும், யுத்தம் நடந்த காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் செல்வமும் அதை மிஞ்சிய செல்வாக்கும் மிக்கவர்களாக இந்தக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அன்றைய குழந்தைகள் பின்னர் பெரியவர்களாகி சிலருக்கு அங்கேயே திருமணம் செய்துவைக்கப்பட்டு அவர்களது குழுந்தைகளுடனும் ஏனைய மக்களுடனும் இடம்பெயர்ந்து, அனைவரையும் போல யுத்தத்தின் அனைத்துக் கொடுமைகளையும் அனுபவித்து, சிலர் மடிந்து, பலர் முகாமில் வாழ்ந்து, தடுப்பிலிருந்து விடுதலை பெற்று இன்று பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகிறார்கள். சிலர் மீண்டும் தமது பூர்வீகமான, இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட, செஞ்சோலை கிராமத்துக்கு வந்து வாழத்தலைப்பட்டது 2019 இல்.DSC_6279a

யுத்தத்தின்போது இராணுவநோக்கில் தமிழ்ச் சமூகத்தில் வளர்க்கப்பட்ட சந்தேக மனப்பான்மை இன்று எல்லோரையும்போலவே இவர்களையும் பாதித்திருக்கிறது. சமூகமட்டத்தில் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அனைவர் மீதும் இருக்கும் பயம்/ சந்தேகம் இவர்கள் மீதும் நிழலாடுவதாகவே தோன்றுகிறது. இவர்களுக்கு உறவுகள், இவர்களுடன் ஒன்றாக இருந்தவர்கள் மட்டும்தான். வயதில் மூத்தவரை ஒருவர் அக்கா என்று அழைத்தால், அவரின் குழந்தைகள் முன்னயவரை சித்தி என்று அழைக்கிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் போலவே சமூக, பொருளாதார, உளநலத் தேவைகள் இவர்களுக்கும் இருந்தபோதும் பெற்றோர், உறவினரை அறியாதவர்கள் என்ற வகையிலும், ஆரம்பத்தில் மிக உயர்வான நிலையில் வைக்கப்பட்டு பின் சமூக, பொருளாதார பாதாளத்தில் தள்ளிவிடப்பட்டவர்கள் என்ற வகையிலும் அன்புக்கும் அரவணைப்புக்கும் அதிகம் ஏங்குபவர்களாக இருக்கிறார்கள். முன்னர் தமது பராமரிப்பாளர்களுடன் முரண்பட்டுக்கொண்டு தண்டனைக்காளானபோது, பிரபாகரனுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து அவர்களைப் பழிவாங்கியதையிட்டு மனம்வருந்தும் உள்ளங்கள் சில, இன்று பாதிக்கப்பட்ட ஏனைய மக்கள் மீதும் கருணை பாராட்டுபவர்களாக இருப்பது எளிமையான மனித மனங்களின் முதிர்ச்சியடையும் வல்லமையைக் காட்டுகிறது.

DSC_6274aநிரந்தரமான, உறுதிப்படுத்தப்பட்ட காணி, வீடு என்பன கிடைக்கப்பெறாதவர்களின் பட்டியலில் இவர்களும் இருக்கிறார்கள். செஞ்சோலைக்கு என்று புலிகள் வாங்கிய காணிக்கு உரித்துடையவர்களாக முன்னர் இருந்தவர்களில் சிலர் வந்து தமது காணியை மீளத் தரும்படி கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பல ஏக்கர்கள் விஸ்தீரணமுள்ள இந்த நிலத்தில்தான் செஞ்சோலைக் குழந்தைகள் ஒடி விளையாடினார்கள்; இங்குதான் இவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்தார்கள்; அவர்கள் அழுததும், சிரித்ததும், குண்டு வீச்சுகளுக்குப் பயந்து பதுங்கியதும், சிலர் திருமணம் செய்ததும்கூட இங்குதான். அதனால் இங்குதான் அவர்கள் தம்முடன் வளர்ந்த உறவுகளுடன்  வாழவும் விரும்புகிறார்கள்.

DSC_6250aஏனெனில் அங்கு அவர்களை ‘அப்பன் பெயர் தெரியாதவர்கள்’ என்று யாரும் ஈனத்தனமாக  விளிப்பதில்லை; சாதி, சமய வேற்றுமை-வெறுப்புகள் இல்லை; சீதனக்கொடுமை இல்லை. ஒருவித சமத்துவ சமுதாயமொன்றில் வாழும் இவர்களிடையே கூலி வேலை செய்து ஓரடி வாழ்க்கையில் முன்னேறியவர்கள்கூட மற்றையவர்களுக்காக இரங்கும் சகோதரபாசம்  அதிகம் இருப்பது தெரிகிறது.

போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துகளில் ஒரு துளியை உதவக்கூடுமானால், இவர்களினதும் இவர்கள் போன்ற இன்னும் ஏராளமானவர்களின் வாழ்க்கையையும் மாற்ற முடியும். தேசியம் பேசி, தேசியத் தலைவர் என்று போற்றி, விடுதலைக்கோசம் முன்வைத்து, கதை எழுதி, கவிதை யும் இயற்றிவிட்டு, இராணுவம் மக்கள் மேல் காட்டும் அன்பைக்கூட இவர்கள்மேல் காட்டாமல் மக்களுக்கும் நாட்டுக்கும் அநியாயம் செய்பவர்கள் ஒருபுறமும், எதிரி என்று சொல்லப்பட்டவர்களுக்கு இரகசியமாக பணிபுரிபவர்கள் இன்னொருபுறமும் இருக்க, சந்தேகத்தின் சந்தையான இன்றைய வடபகுதியில், ‘மாமா’ என்று சொல்லும்போதே கண்கள் பனிக்கும் அவர் வளர்த்த இந்த குழந்தைகளை நாம் நம்பினாலும், அவர்கள் யாரை நம்பலாம் என்பதுமட்டும் விடைகாணமுடியாத கேள்வியாகத் தொக்கி நிற்கிறது.

DSC_6287a

சமூக செயற்பாட்டாளர்களின் கண்களிலும்கூட அதிகம் தென்படாமல் இருந்துவிட்ட இந்த அவலம், விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கும் அரசியலுக்கும் அப்பால் மனிதநேயம் உள்ளவர்களின் சமூகக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது என்பதுவே உண்மை.

Society

அட்டைகள்

நல்ல உணவில்லை; நலம் பேணும் வசதிகளில்லை; வாழ்வை மேம்படுத்தும் நல்ல கல்விக்கான வசதியில்லை. மலைகளில் ஏறி இறங்கி கொழுந்து பறித்தபின் காலாறியிருக்க நல்ல வீடில்லை.

இப்படி இல்லைகளால் அவர்கள் நிறைந்திருக்க எமக்காக எல்லாம் தந்தார்கள் காலங்காலமாக, அந்நியச் செலாவணியாக. திட்டமிடப்பட்டு வளர்க்கப்படும் அறியாமையில் அதிகாரிகளின் போலி வாக்குறுதிகள் செல்லுபடியாகின்றன. இல்லாத காணிக்கு செல்லாத உறுதி, இல்லாத வீட்டுக்கு கடன் என்று பல விதங்களில் ஏமாற்றப்பட்டதை அவர்கள் சொல்லும்போது தேனீர் குடிப்பதுகூட பஞ்சமா பாதகங்களுக்குமேல் இன்னொன்றாக எண்ணவைக்கிறது. இலங்கை மக்களில் அதிகபட்ச ஒடுக்குமுறைகளுக்கு நூற்றாண்டுகாலங்களாக இலக்காக்கப்பட்ட இந்த மக்கள் எந்த நம்பிக்கையும் தராத ஒரு சூழலுக்குள் இன்றும் வதைபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் பொருட்காளாக இவர்கள் இன்றும் கையாளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மனச்சாட்சியுள்ள அனைவரினதும் இதயங்களைச் சின்னாபின்னமாக்கிவிடும்.

தூரத்துப் பச்சையாக அழகு கொழிக்கும் மலையகத்தை அனுபவிப்பதுடன் அதற்குக்காரணமானவர்களின் இரணங்களின் காரணங்களையும் சற்று அறிய முயற்சி எடுப்போம். அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். அது எம் அனைவரினதும் கடமை என்பதைக் கருத்தில் கொள்வோம்.

எனவே:

அன்றாட தேனீரை அனுபவிக்கும்போது அவர்களிடம் அட்டைகள் தினமும் உறிஞ்சிய குருதியை எண்ணிப்பார்ப்போம்.

எங்கள் ஆடம்பரங்களுக்காக வாதிடும்போது அவர்களின் அனைத்து நிறைவேற்றப்படாத அடிப்படைத் தேவைகளையும் மீறப்பட்ட உரிமைகளையும் நினைத்துக்கொள்வோம்.

எங்கள் வேலைகள் மதிக்கப்படவில்லையே என்று அங்கலாய்த்துக்கொள்ளும்போது அவர்களின் நூற்றாண்டுகால தியாகங்கள்கூட இன்னும் கண்டுகொள்ளப்படவில்லையென்பதை எண்ணிக்கொள்வோம்.

DSC_teaஇந்த வெற்றுக்கூடையை அவர்களது ஏக்கங்களும் ஏமாற்றங்களும் நிறைத்திருக்க, அன்றாடம் அவர்களின் குருதியை உறிஞ்சுவது அட்டைகள் மட்டுமல்ல….

Society

விடுதலை – யாரிடமிருந்து?

DSCN5574அம்பாறை, பொத்துவில், 60ம் கட்டை பகுதியில் உள்ள கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்களின் போராட்டம் 20ஆம் நாளாக நடைபெறுகிறது.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஆயுத மோதல்கள் காரணமாக கைவிட்டுச் சென்ற வீடுகளுக்கு மீளத் திரும்பவிழையும் மக்கள், பற்றைகள் மண்டிய அவ்வாழ்விடங்கள் அரச வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு மீள்குடியேற்ற அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். சில தமிழ் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் ‘போராடாதீர்கள்; விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும்’ என்று கூறுகின்றபோதிலும், கிழக்கின் இத்தகைய உரிமை மறுப்புகளுக்குப் பின்னால் சுய இலாபம் கருதிச் செயற்படும் அவர்களில் சிலரும் இருப்பதாக இம்மக்கள் சந்தேகிக்கின்றனர். சில நிலங்களுக்கான ஆவணங்களைத் தாமே தயாரித்து  அவற்றைக் கையகப்படுத்திக்கொண்டுள்ளனர் என்றும் அப்பாவிகளான இந்த மக்களிடமுள்ள மூல ஆவணங்களை தந்திரமாகக் கவர்ந்து அழித்துவிடும் செயற்பாடுகளில் சில அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

நாட்டின் இனப்பிரச்சினை காரணமாக கோடீஸ்வரர்களான மூவினத்தையும் சேர்ந்த பிரமுகர்கள் அநேகர். மக்களின் காணிகளை அபகரித்து உல்லாச விடுதிகளைக்கட்டி பிரபாகரனின் பேரால் சேர்த்த சொத்துகளைப் பல மடங்கு பெருக்கிக்கொள்ள வெளிநாட்டில் மட்டுமன்றி உள்ளூரிலும் பலர் முயற்சிக்கின்றனர் என்று தோன்றுகிறது.

நிலம் என்பது வெறுமனே பொருளாதார முக்கியத்துவம் கொண்ட ஒரு சடப்பொருளல்ல. அது வியர்வையும் குருதியும் உயிரும் உணர்வும் கலந்த வாழ்வின் அடிப்படை. ஒரு சமூகத்தின் கருவறை. சட்ட ரீதியாகவோ சட்டத்துக்குப் புறம்பாகவோ அதைப் பறிக்க நினைப்பவர்கள் ஒரு சமூகத்தையோ மக்கள் குழுமத்தையோ கருவழிக்க முனைகிறார்கள் என்றே பொருள்.

அப்படியாயின், தமிழ் மக்கள் ஒடுக்குமுறை அரசுகளிடமிருந்துமட்டுமல்ல; தமது அரசியல்வாதிகளிடமிருந்தும் அதிகாரிகளிடமிருந்தும் விடுதலையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பார்களாக.

தமிழர் தொன்மையையும் வீரப்பிரதாபங்களையும் பாடி மகிழ்பவர்கள் இந்த மக்களின் போராட்டத்துக்கு உதவுவார்களாக.

Society

குரங்குகள்

DSC_0054a (Large)பல வருடங்களின் பின்னர்,  கடந்த மாம்பழப் பருவத்தின்போது அதிகமான பழங்களை உருசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது. பொதுவாக, எமது மரங்களின் பலனை அனுபவிப்பவை குரங்குகளே. ஆனால் இம்முறை வன்னிப் பிரதேசங்களில் மாமரங்கள் அதிக பலன் தந்ததன் காரணமாகவோ என்னவோ, வவுனியா நகருக்குள் குரங்குகளின் வருகை குறைவாகவே இருந்தன. 2,000 ரூபாவுக்கு மரத்தை வாங்கும் கொள்ளையர்களுக்கும் கொடுக்காமல் அணில், வெளவால், குக்குறுவான் போன்ற இன்னோரன்ன பிராணிகளுடனும் பறவைகளுடனும் பகிர்ந்து நாமும் மகிழ்ந்து அனுபவித்துக்கொண்டோம்.

இயற்கையில் கிடைக்கும் வளங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை. தாம் மட்டுமே அவற்றை ஆண்டு அனுபவிக்க நினைப்பதால் ஏனைய பிராணிகளை அண்டவிடாமல் சதி செய்யவும் அவற்றை கொன்றொழிக்கவும் மனிதர்கள் திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்துகின்றனர். உலகில் உணவுப்பற்றாக்குறை நிலவுகிறது என்பது ஒரு மாயை என்றும், அன்றாடம் உணவு வீணாகப்போவதைத் தவிர்த்தாலே பட்டினியைத் தவிர்க்கலாம் என்றும் அந்த உணவுப்பொருட்களின் தயாரிப்பிற்கான நீரைச் சேமிக்கலாம் என்றும் துறைசார்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

2011ஆம் ஆண்டின் FAO நிறுவனத்தின் அறிக்கையில் 1.3 பில்லியன் தொன்கள் உணவுப்பொருட்கள் ஒரு ஆண்டுக்கு வீணாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீணாகும் நீரின் அளவு 173 பில்லியன் கனமீற்றர் என்றும் World Resource Institute இன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவைப் பாதுகாப்பதானது விவசாயத்துக்கான மேலதிக காடழிப்பையும், அதிக விளைச்சலுக்கான இரசாயனப் பிரயோகத்தையும் தடுக்க உதவும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெளதிக வளங்கள் மேலான மனிதர்களின் ஆதிக்கத்தின் வீச்சையும் தீர்மானிக்கிறது:- அதிக சம்பளம் பெறும் ஒருவர் வீட்டில் அதிகமான மின்குமிழ்களை எரிக்கும் வல்லமை பெறுகிறார்; தெருக்கோடியில் உள்ள கடையில் ஒரு தேங்காய் வாங்குவதற்கும் அவர் காரில் போகமுடியும்; வருடத்துக்கு இருமுறை கைத்தொலைபேசியைப் புதுப்பித்துக்கொள்ள முடியும்; அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் வளைத்துப்போட்டுக்கொண்டு சட்டத்துக்கும் சமூகநீதிக்கும் புறம்பான செயற்பாடுகளூடாக மேலும் மேலும் சொத்துக்களைச் சேர்த்துக்கொள்ள முடியும்; என்றவாறாக இது தொடரும்.

அனைத்து உயிர்களின் நல்வாழ்க்கைக்கும் பெளதிக வளங்களின் நுகர்வு இன்றியமையாதது. முற்றும் துறந்த முனிவர்களாக நாம் நிர்ப்பந்தத்துக்குள் வாழவேண்டிய தேவை இல்லை.   உலகெங்கும் பரந்து விரிந்துள்ள நவீன முதலாளித்துவ பொருளாதாரம், நுகர்வுக்கலாசாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்ற தவிர்க்கமுடியாத சாபக்கேட்டை நாம் விலக்கிக்கொள்வது இயதார்த்தமில்லை.

வெளவால்களும் அணில்களும் தமது பசிக்குத்தேவையான அளவைமட்டும் உண்பதுபோல குரங்குகள் ஏன் செய்வதில்லை? எல்லையற்றுப் பாய்ந்து, தமது உடற்பருமனாலும் குறும்புத்தனத்தினாலும் உண்பதைவிட உதிர்ப்பதை அதிகம் செய்கின்றனவே; ஏன்?

அது அவற்றின் சுபாவம் போலும்! குரங்குகளுக்கு ஐந்தறிவு என்று சொல்லப்படுகிறது. ஆகவே, சிந்திக்கும் ஆற்றல் குறைந்த அவற்றால் தமது செயற்பாட்டை மாற்றிக்கொள்ள முடியாது என்றும், தாம் ஏனைய பிராணிகளுக்கு அநீதி இழைக்கிறோம் என்று அவற்றுக்குத் தெரியாது என்றும் நாம் கருதிக்கொள்ளலாம்.

ஆனால் மனிதர்கள் சிந்திக்கலாம்!

மின் பிறப்பாக்கிகளுக்குத் தேவையான நீரை/ எரிபொருளை மிச்சப்படுத்தவும், சூழலைக் குறைவாக மாசுபடுத்தவும், மிதமிஞ்சிய கனிமச் சுரண்டலையும் அவைக்காக நடத்தப்படும் போர் மற்றும் மனித உரிமை மீறல்களைக் குறைக்கவும், எமது வாழ்க்கைக்குத்தேவையான பெளதிகவளங்களை அடைவதுடன் ஆசையை மட்டுப்படுத்திக்கொள்ளவும் எம்மால் ஆகும்.

உலகில் உள்ள அனைவரிடமுமுள்ளது உலகின் பணம். எங்கோ, என்றோ, ஏதோ வழிகளில் மற்றவர்களின் உழைப்பைச் சுரண்டியதே எமது கைகளில் உள்ள பணம். ‘எனது இயலுமை; நான் பணம் கொடுக்கிறேன்’ என்ற இறுமாப்பு அபத்தமானது. எனவே, எம்மால் முடியும் என்பதற்காக மேலதிகமான வளங்களைச் சுரண்டாதிருப்போம்.

குரங்குகள் வராததால் இம்முறை ஏனைய பலவிதமான பிராணிகளுக்கும் எமக்கும் மாம்பழங்கள் கிடைத்தன.

குரங்குகள் போல வாழாதிருப்போம்.

Exposure visits · Society · South Africa

உபுன்டு (Ubuntu)

DSCN1293.JPGதென்னாபிரிக்காவின் பழமையான மொழிகளிலொன்றான சூலு (Zulu) மொழியில் மனிதகுலத்தைக் குறிப்பதான உபுன்டு (Ubuntu) என்ற சொல் உள்ளது. இந்தச் சொல்லுக்கு ஆதி ஆபிரிக்க மக்களின் வாழ்வியலை அடியொற்றியதான, ‘முழு மனிதகுலத்தையும் பகிர்வினூடாக இணைத்தல்’ என்றவாறான தத்துவார்த்த பொருட்கோடலும் உண்டு.  ஆங்கிலத்தில் அதற்கு “I am because we are” என்ற கவிதை நயத்துடனான மொழிபெயர்ப்பு தரப்படுகையில் “எம்மால்  நான்” என அதனை மொழிபெயர்ப்பின் தவறாகாது எனக் கருதுகிறேன். அதற்குக் காரணமுள்ளது:

ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளையை இன்னொரு தாய் எந்தச் சங்கடங்களுமின்றி, கடைத்தெருவுக்கு அனுப்பவும் அந்தப்பிள்ளை வேறொருவீட்டில் உண்டு, உறங்கவும் செய்வது ஆபிரிக்க சமூகங்களில் சாதாரண நிகழ்வுகளாக உள்ளது வியப்பைத் தரலாம் (யுத்தம் எம்மை அலைக்கழிக்குமுன்னர் நெருங்கிய உறவினருக்கிடையில் சிறு பிராயத்தினர் இப்படியாக இருந்த சந்தர்ப்பங்கள் சிலருக்கு நினைவிருக்கக்கூடும்). ஆபிரிக்க சமூகங்கள் மிக ஆழமான சமூகப்பிணைப்பைக் கொண்டவை. நகரப்புறங்களில் இன்று வாழ்வுமுறை பெரிதும் மாறிவிட்டபோதும் கிராமங்களில் அந்த உன்னத ஆதிவாழ்வியலின் தடயங்கள் காணப்படுகின்றன.

இந்தச் சமூகப் பிணைப்பை மையமாகக்கொண்டு யுத்தம்,  மற்றும் HIV AIDS இனால் பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைக்கும் நோக்கில் செயற்படும் நிறுவனம் ஒன்று, கிராமத்தின் மத்தியில் பிள்ளைப்பராமரிப்பு விடுதியை அமைத்து அக்கிராமத்து அன்னையருக்கும் தந்தையருக்கும் சகோதரர்களுக்கும் அப்பிள்ளைகளை உறவுகளாக்கிச் செயற்படுவது உன்னதமான சிந்தனை. எமது நாட்டில் அத்தகைய குழந்தைகள் கிராமத்துக்கு வெளியே உயர்ந்த மதில்களுக்குள் அகப்பட்டு அனாதைகளாகவே இருந்துவிடுவது முற்றிலும் முரண்பட்ட நிலை.

வடக்கு, கிழக்கில், பெரும்பாலும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த சமூகப் பிணைப்புகளை யுத்தம் அறுத்துவிட்டது. எல்லாரும் எல்லாரையும் அறிந்துவைத்திருந்த கிராமிய வாழ்வு, இடப்பெயர்வுகளுடன் மறைந்துவிட்டது. வயது வித்தியாசம், ஆண், பெண் என்ற வேற்றமைகளைக்கூட உணராமல் கிராமங்களில் மகிழ்ச்சியாக ஓடியாடித்திரிந்த வாழ்க்கை இல்லாமற்போனதற்கு அயலவர்கள் மீதான நம்பிக்கையீனம் ஒரு பிரதான காரணி.

இதற்கு விடுதலை இயக்கங்கள் என்று தம்மை அழைத்துக்கொண்டவர்கள் அதிக பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது. நாட்டில் யுத்த நிலை இருந்தபோது அடுத்தவீட்டுக்கு புதிதாகக் குடிவந்திருப்பவர் யார் என்று நாம் பார்ப்பதில்லை. அவர்கள் எதேனும் இயக்கத்தின் உளவாளிகளோ அல்லது இராணுவத்துக்குத் தகவல் வழங்குபவரோ என்ற சந்தேகம் எமக்குள் ஆழமாக இருந்தது. யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகின்றபோதிலும்கூட மற்றவர்மட்டிலான இத்தகைய ஆழமான சந்தேகங்கள் எம்முள் இருக்கத்தான் செய்கின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் பற்றிய பரவலான செய்திகளால் இன்று பிள்ளைகளை இன்னொரு வீட்டுக்கு விளையாட அனுமதித்துவிட்டு பெற்றோர் மனநிம்மதியுடன் இருக்கும் நிலை காணப்படவில்லை. மாற்றீடாக, தொலைக்காட்சி மற்றும் இணையவழிப் பொழுதுபோக்குகளுள் அகப்பட்டு பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள்.

சமூகம் இவ்வாறாக சின்னபின்னப்பட்டுக் கிடக்கையில் சமூகஆர்வலர்களின் கடமை-பொறுப்புகள் எவை என்பது பற்றிய தீர்க்கமான உரையாடல் நடைபெறவேண்டியுள்ளது.

யுத்தத்தால் இழந்த உயிர், கல்வி, உடைமைகளைவிட ஒருதேசமாக நாம் இழந்துவிட்ட அயலான் மட்டிலான நம்பிக்கை மிக அதிகமான பெறுமதிமிக்கது.

இந்த நிலைக்கு ஏதோ வழிகளில் நாமும் காரணமாகிவிட்டோம். பாவங்களைக் கழுவும் பொறுப்பும் எம்மதே.